Ad

புதன், 25 ஆகஸ்ட், 2021

Covid Questions: குழந்தைக்கு ஃப்ளூ வாக்சின் போட்டுவிட்டேன்; அதுவே கொரோனாவிலிருந்தும் பாதுகாக்குமா?

மருத்துவரின் அறிவுரையின் பேரில் என் குழந்தைகளுக்கு ஃப்ளூ வாக்சின் போட்டுவிட்டேன். அதுவே அவர்களை கொரோனாவிலிருந்தும் பாதுகாக்குமா? மூன்றாவது அலையில் குழந்தைகளை கொரோனா அதிகம் தாக்கும் என்று சொல்லப்படுகிற நிலையில் அவர்களை எப்படிப் பாதுகாப்பது?

- பார்வதி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்.

``இன்ஃப்ளுயென்ஸா வைரஸ் தொற்றைத் தடுக்கப் பயன்படும் தடுப்பூசி ஃப்ளு வாக்சின் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி ஹெச்1என்1 (பன்றிக்காய்ச்சல்), ஹெச்3என்2 மற்றும் இரண்டு பி வகை இன்ஃப்ளுயென்ஸா வைரஸ் நோய்த் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.

6 மாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடலாம். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள், ஆஸ்துமா, நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் இந்தத் தடுப்பூசியை வருடம் ஒருமுறை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன் போட்டுக்கொள்வது சிறந்தது.

Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

இன்ஃப்ளுயென்ஸா வைரஸ் தொற்றைத் தடுக்கும் இந்த ஊசியால் கோவிட் தொற்றைத் தடுக்க முடியாது. கொரோனாவின் மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது என்பதே இன்று பெரும்பாலான பெற்றோர்களின் கவலையாக இருக்கிறது. குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோரின் பங்கு மிகப் பெரியது. குழந்தைகள் பெரும்பாலான விஷயங்களைப் பெற்றோர்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். எனவே நோய்த் தடுப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதில் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்.

தேவையின்றி வெளியாட்களுடன் நேரடியாகப் பேசுவதையும், நெருக்கத்தில் இருப்பதையும் தவிர்க்கவும். தேவை ஏற்படும்போதெல்லாம் 5 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு முகக் கவசம் அணிவிப்பது அவசியம். மிக மிக அவசியத் தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். அப்படிச் செல்லும்போது முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

சரியான முறையில் சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி, கைகளைக் கழுவி, சுத்தமாக வைத்திருக்க குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். வீட்டிலும் வெளியிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். வெளியே சென்று வரும் பெரியவர்கள், வீட்டுக்குள் நுழைந்ததும் குளித்து, உடைகளை மாற்றிய பிறகே குழந்தைகளுக்கு அருகில் செல்ல வேண்டும்.

Children (Representational Image)

Also Read: Covid Questions: மூன்றாவது அலை அச்சம்; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சரியான முடிவா?

குழந்தைகளுக்கு வெளி உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்த்து, வீட்டில் சமைத்த சத்தான, சரிவிகித உணவுகளையே கொடுக்க வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகம் தர வேண்டும். குடும்ப விசேஷங்கள், விழாக்கள், உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும். பெற்றோர்களும், வீட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இது பெரியவர்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொற்று பரவுவதைத் தடுக்கும்.

தினமும் ஏதேனும் உடற்பயிற்சி செய்வதை குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்துப் பழக்குங்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொரோனா தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களை குழந்தைகளுக்கு எளிமையாகச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!

அன்பான வாசகரே, விகடன் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு கேம் விளையாடலாமா? இந்த Quiz-ஐ attend பண்ணுங்க! https://www.vikatan.com/foundersday-web#



source https://www.vikatan.com/health/healthy/is-the-flu-vaccine-enough-for-kids-to-stay-protected-from-covid-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக