Ad

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

`உங்கள் மூளையே உங்களுக்கு வில்லன்!' - போதைக்கு நாம் அடிமையாவது எப்படி? - நான் அடிமை இல்லை - 2

முதல் அத்தியாயத்தில் போதைப்பொருள்கள் எப்படி இன்றைய இளைஞர்களை பாதிக்கின்றன எனப் பார்த்தோம். இந்தப் பிரச்னையின் மருத்துவ / உளவியல் காரணங்கள் குறித்து இன்றைய அத்தியாயத்தில் பார்ப்போம்.

போதைப்பழக்கத்துக்கு ஒருவர் அடிமையாகும் குற்றச்செயலில் அவரது மூளைதான் முதல் குற்றவாளி! போதைப்பொருள்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு நமது மூளையைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். போதைப் பொருள் அல்லது போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கு மூளையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்று விவரிக்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

``மனித மூளையில் போதைக்காகவே சில இடங்கள் இருக்கின்றன. அவை, அமிக்டெலா (Amygdala), எக்ஸ்டெண்டடு அமிக்டெலா (Extended Amygdala), நினைவாற்றல் திறனைக் கொடுக்கக்கூடிய லிம்பிக் சிஸ்டம் (Lymphic system). திட்டமிடல், யோசனை, உத்திகளை எப்படி உருவாக்குவது என்பது போன்ற திறன்கள் அடங்கிய Prefrontal Cortex என்கிற மூளைப்பகுதி, மற்ற மிருகங்களைவிட மனிதனுக்கே உரிய தனித்துவமான விஷயம். இந்தப் பகுதி மனிதர்களின் நெற்றிப் பகுதியில், புருவங்களுக்கு மேல் அமைந்துள்ளது. மெடுல்லா ஆப்ளங்கேட்டா (Medulla Oblongata) என்னும் மூளைப்பகுதி, தண்டுவடத்தின் மேல் பகுதியிலும் மூளையின் அடிப்பகுதியிலும் அமைந்துள்ளது. தாகத்துக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும், உப்பு வேண்டும் என்பன போன்ற உள்ளுணர்வுகளுக்கெல்லாம் இந்தப் பகுதி மிக முக்கியம். நடுப்பகுதியின் ஆழ மையப் பகுதியில் தொடங்கி மூளை முழுக்க போதை வஸ்துக்களின் செயல்பாடுகள் விரிகின்றன.

Drug Addiction (Representational Image)

போதை என்பது என்ன?

போதை பல விஷயங்களில் கிடைக்கலாம். சிலருக்கு சில எண்ணங்களே மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். கற்பனைத் திறன், கிரியேட்டிவிட்டி போன்றவை அடங்கிய எண்ணங்கள் சந்தோஷத்தையும் ஒரு வகையான போதையையும் கொடுக்கும். பாலியல் தூண்டுதல் உள்ளிட்ட சில உணர்வுகளும் போதையைக் கொடுக்கும். சில உணவுகளை ருசிக்கும்போது மீண்டும் மீண்டும் அதற்கு நாக்கு ஏங்கலாம். மகிழ்ச்சி, பேரானந்தம், மீண்டும் மீண்டும் அந்த நிலையை அடைய வேண்டும் என்கிற ஆசையே போதை என்பது.

சிலருக்கு சில செயல்கள் போதையைத் தரும். அவருக்கு அந்தச் செயல்களைச் செய்தால்தான் மனது நிம்மதியடையும். இதனால் மனப்பதற்ற குறைபாடுகளில் ஒன்றான Obessive Compulsive Disorder (OCD) ஏற்படலாம். ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்யும் பழக்கத்துக்கு அடிமையாவார்கள். தான் செய்வது சரியானது இல்லை. இப்படிச் செய்யக் கூடாது என்று நன்கு தெரிந்தாலும், அந்த உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.

அடிமைத்தனம் ஏன் ஏற்படுகிறது?

காட்டில் ஒரு யானைக்கூட்டம் இருக்கிறது. அவை வசிக்குமிடத்தில் தண்ணீர் இல்லை என்று வைத்துக்கொள்வோம். தண்ணீரைத் தேடி கூட்டமாகச் செல்கின்றன. பல இடங்களுக்கு அலைந்து திரிந்த பிறகு மிகவும் ரம்மியமான சூழலில் நீர்வீழ்ச்சியுடன்கூடிய தடாகத்தைப் பார்க்கின்றன. அங்கு அவை பருகும் தண்ணீர் உயிரளிக்கக்கூடிய விதமாக இருக்கும். மனது ஆனந்த நிலையை அடையும்போது `டோபமைன்’ (Dopamine) என்ற மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும். மூளையில் இந்த ஹார்மோன் சுரக்கும்போது கிளர்ச்சி ஏற்பட்டு மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கிறது. ஞாபகம் வைக்கும் மூளையின் பகுதியான hippocampus-ல் வழித்தடங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளக்கூடிய செல்கள் எல்லாம் தூண்டப்பட்டு, அந்த வழியை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளும்.

Brain (Representational Image)

கூட்டத்திலுள்ள அனைத்து யானைகளுக்கும் மகிழ்ச்சியளித்த, கிளர்ச்சியுடன்கூடிய அந்த நினைவு நன்றாக மூளையில் பதிந்துவிடும். அந்த நினைவு மூளையில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பின்பு யானைக்கூட்டம் தங்கள் வழக்கமான இடத்துக்குக் கிளம்பிப்போய் விட்டன. ஆனால், மீண்டும் தாகம் எடுக்கும்போது எந்தவித வழிகாட்டலும் இல்லாமல் அதே வழித்தடத்தில் அந்தத் தடாகத்துக்கு வந்து தண்ணீரைக் குடிக்கும். மீண்டும் தாகம் ஏற்படும்போது மனதில் உடலில் அமைதி பெறுவதற்காக மீண்டும் மீண்டும் அந்த இடத்துக்குச் செல்லும்.

போதை மருந்தும் இதே வேலையைத்தான் செய்கிறது. பொதுவாக, போதைக்கு அடிமையாகும் வயது 10 முதல் 12 என்கின்றனர். இதே வயதையொத்த ஒரு சிறுவன் பெற்றோர் திட்டியதாலோ, ஆசிரியர் திட்டியதாலோ சோர்வாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனின் நண்பன் வந்து, காரணத்தைக் கேட்டறிந்து, `சரி இதெற்கெல்லாம் சோர்வாகாதே! வா! விளையாடப் போகலாம். கிரிக்கெட் விளையாடி ஸ்ட்ரெஸ்ஸைப் போக்கலாம்' என்று கூறி அவனை அழைத்துச் செல்கிறான்.

விளையாடும்போது மகிழ்ச்சியைக் கொடுக்கும் டோபமைன், செரடோனின் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். பந்தைக் கூர்ந்து, பார்த்து மட்டையை அடிக்கும்போது செயல்திறன், கவனம் குவிதலைக் கொடுக்கக்கூடிய அசிட்டைல்கோலைன் (Acetylcholine) ரசாயனங்களும் மூளையில் சுரக்கும். அவன் விளையாடி, பின்பு ஓய்வெடுத்து மனநிலையை சீராக்கிக்கொள்கிறான். எதிர்காலத்தில் இதே போன்று பிரச்னைகள் ஏற்படும்போதும் இதே வழியைப் பின்பற்றி நல்லவிதமாக அதைக் கடந்து வருவதற்கு அவனது மனம் பழகும்.

இதே சூழலில் மனது துவண்ட நிலையில் வேறொரு சிறுவன் இருக்கிறான். சோர்வடைந்த மனதுடன் இருக்கும் அவனை உற்சாகப்படுத்த கவலையை மறக்க புகை, மது அல்லது போதைப்பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். தனக்கான ஒரே நண்பன் அல்லது அவனுடைய நெருக்கம் தேவைப்படும் நிலையில் அவன் சொல்வதைச் செய்வது தீங்கானது என்று உள்ளுணர்வு சொன்னாலும் அதைச் செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவான்.

நண்பன் சொல்லும் விஷயத்தில் என்னதான் இருக்கிறது என்று முயன்றுதான் பார்ப்போமே என்றும் நினைத்து அதை முயற்சி செய்வான். முதலில் இந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுப்பவர்கள் இலவசமாகவே அதைப் பயன்படுத்தக் கொடுப்பார்கள். வழக்கமாக இதுபோன்ற பழக்கங்கள் நண்பர்கள் மூலம் அல்லது தன் வயதினர், சக ஊழியர்கள், சக மாணவர்களால் ஏற்படும்.

எது அடிமைத்தனம்?

உங்கள் மூளையையும் நடத்தையையும் வாழ்க்கையையும் பாதிக்கும் போக்குதான் அடிமைத்தனம். குறிப்பாக, போதை மருந்துகளுக்கு ஒருவர் அடிமையாகும்போது அவை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பது தெரிந்தாலும் அவற்றுக்கு அவர் அடிமையாகிவிடுவார். எவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து மீள்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் அவற்றின் ஆபத்துகளிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும், இந்தச் சமூகத்தையும் பாதுகாக்கிறீர்கள்.

போதை மருந்து அடிமைத்தனம் என்பது ஹெராயின், கோகைன் அல்லது சட்டத்துக்குப் புறம்பான போதை வஸ்துக்களுக்கு அடிமையாவதை மட்டும் குறிப்பதில்லை. நிகோடின், ஆல்கஹால், தூக்க மருந்துகள், பதற்றத்தைக் குறைக்கும் மருந்துகள் எல்லாம் இதில் அடக்கம். இவ்வளவு ஏன்... இருமல் மருந்துகள், சிலவகை வலி நிவாரணிகள்கூட ஒருவரை அவற்றுக்கு அடிமையாக்கலாம்.

போதையை ஏற்படுத்தும் மேற்குறிப்பிட்ட எந்த ஒன்றையும் முதல் முறை எடுத்துக்கொள்ளும்போது, `சும்மா ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போமே... என் கன்ட்ரோல் என்கிட்டதானே இருக்கு... நானாவது அடிமையாகறதாவது...' என்ற எண்ணத்தில்தான் ஆரம்பிப்பார்கள். ஆனால், அந்த `முதல் உபயோகமே' உங்களைச் சும்மா விடாது. மீண்டும் மீண்டும் உபயோகிக்கத் தூண்டும். உங்கள் மூளையை மழுங்கடிக்கும். உடல் ரீதியாகவும் அவை ஏற்படுத்தும் விளைவுகள் நீண்ட நேரம் நீடிக்கும். ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழப்பார்கள். அதன் விளைவாக அவர்களின் நடத்தைகளில் மாறுபாடு ஏற்படும்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

Also Read: போதை மாஃபியா: திவ்யாவுக்கு நேர்ந்தது உங்கள் வீட்டிலும் இப்போது நடந்து கொண்டிருக்கலாம்; உஷார்! - 1

துஷ்பிரயோகம்... அடிமைத்தனம்... பழக்கப்பட்டுப் போதல்... க்ரேவிங்

ஆங்கிலத்தில் Abuse என்போம். அதுதான் துஷ்பிரயோகம். அதாவது, ஒன்றைச் செய்யக் கூடாத வழிகளில் செய்வது. உதாரணத்துக்கு ஒருவர், தனக்கு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரை, மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவது அல்லது மற்றவர்களுக்குப் பரிந்துரைத்த மருந்துகளைத் தானும் எடுத்துக்கொள்வது. அப்படி எடுத்துக்கொள்வதால் அந்த நபருக்கு ஒருவித நிம்மதி கிடைக்கலாம், மன அழுத்தம் குறைவதாக உணரலாம் அல்லது கற்பனை உலகில் பயணிக்க உதவலாம். செயற்கையான, தற்காலிகமான இந்தப் பழக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிவது எளிது. மன உறுதியும் சரியான வழிகாட்டுதலும் இருந்தால் வெளியே வந்துவிடலாம்.

அடிமைத்தனம்... அதாவது அடிக்ஷன் என்பது ஒருவரால் மீள முடியாத நிலை. அந்த நிலை அவரது ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்கி, உளவியல் ரீதியான சிக்கல்களை, பொருளாதார சிக்கல்களை, உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தும். உபயோகிக்கும் போதை வஸ்துவைச் சுற்றியே சிந்தனை சுழலும். அது தவறு, அதிலிருந்து மீள வேண்டும் என நினைத்தாலும் முடியாது.

இதற்கும் பழக்கப்பட்டுப் போதலுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு பழக்கத்தை நிறுத்த முற்படும்போது `வித்டிராயல் சிம்ப்டம்ஸ்' (Withdrawal Symptoms) எனும் அறிகுறிகள் தோன்றும். பழக்கப்பட்டுப்போதல் என்பது, தொடர்ந்து பயன்படுத்துகிற ஒரு பொருளின் செயல்திறன் காலப்போக்கில் குறையும்போது ஏற்படுவது. உதாரணத்துக்கு ஒருவர் மருத்துவர் பரிந்துரையின் பேரில் நீண்டகாலமாக வலி நிவாரணி எடுத்துக்கொள்கிறார் என வைத்துக்கொள்வோம். அதற்கு அவர் அடிமையானதாக அர்த்தமில்லை. அதாவது, முறையான மருத்துவப் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில் போதையைத் தரும் மருந்துகளாக இருந்தாலும் அவை எல்லோரையும் அடிமையாக்கிவிடுவதில்லை.

Drug Addiction (Representational Image)

மூளையில் என்ன நடக்கிறது?

மூளை விசித்திரமானது. எந்த ஒரு விஷயம் மகிழ்ச்சியை, உற்சாகத்தைத் தருகிறதோ, அதை மீண்டும் மீண்டும் தேடிப்போக நினைக்கும். போதையை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் உங்கள் மூளையின் `ரிவார்டு சிஸ்டத்தை' (Reward System) குறிவைப்பவை. மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய டோபமைன் எனும் ஹார்மோனை அதிக அளவில் சுரக்கச் செய்வதோடு, போதை வஸ்துக்களைத் தேடி உங்களைத் துரத்துபவை. ஒரு கட்டத்தில் அந்தக் கிளர்ச்சியான உணர்வு போதாமல், இன்னும், இன்னும் என உங்கள் உள்ளம் வருந்தி ஏங்கத் தொடங்கும்.

அதிக அளவிலான போதை மருந்துகளை எடுக்கப் பழகுவீர்கள். அந்தப் போதை தரும் இன்பத்துக்கு, உங்கள் குடும்பம், உறவுகள், நட்பு என எதுவுமே இணையில்லை என நினைக்க ஆரம்பிப்பீர்கள். ஒருவிஷயத்தில் முடிவெடுப்பது, அதிலுள்ள நியாய அநியாயங்களை அலசுவது, நினைவாற்றல், கற்றுக் கொள்ளும் ஆர்வம் என உங்கள் எல்லா நற்குணங்களும் மழுங்க ஆரம்பிக்கும்.

யாரெல்லாம் அடிமையாக வாய்ப்புகள் அதிகம்?

ஒவ்வொரு மனிதனின் மூளையும் உடலமைப்பும் வேறுவேறு. போதை அடிமைத்தனத்துக்கு அவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதும் நபருக்கு நபர் வேறுபடும். ஒருமுறை போதை வஸ்துவை முயற்சி செய்கிற எல்லோருமே அதற்கு அடிமையாகிவிடுவதில்லை. ஆனால், அதையும் மீறி அடிமையாகிறவர்கள் எந்த வயதிலும் வாழ்வின் எந்தக் காலகட்டத்திலும் இருப்பார்கள். குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் மது, போதைப் பழக்கம் இருந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிறருக்கும் அது வரலாம். இதில் மரபணுக்களுக்கும் பங்குண்டு.

Depression (Representational Image)

Also Read: நான் அடிமை இல்லை - டீஅடிக்‌ஷன் டிப்ஸ்

மிக இளவயதில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிறவர்களுக்கு, (உதாரணத்துக்கு குழந்தைகள்) அது பல வருடங்கள் தொடர வாய்ப்பிருக்கிறது. உளவியல் ரீதியான பிரச்னைகள் உள்ளவர்களும் போதை அடிமைத்தனத்துக்கு எளிதில் இலக்காகிறார்கள். உளவியல் பாதிப்புகளிலிருந்து மீள முறையான சிகிச்சைகளை எடுக்காமல், போதைப் பழக்கத்தைத் தீர்வாக நாடுவார்கள். அது மனநலனை மேலும் பாதித்து பிரச்னைகளை மேலும் அதிகரிக்கும். குடும்ப அமைப்பில் சுமுக நிலை இல்லாதவர்கள், உறவுச் சிக்கல்களைச் சந்திப்பவர்கள் போன்றோரும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புகள் மிக அதிகம்.

போதைக்கு அடிமையானவர்களை எப்படிக் கண்டறியலாம்... எவையெல்லாம் போதைப் பொருள்கள்... இன்னும் பல விஷயங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் அலசுவோம்!

மீட்போம்.


source https://www.vikatan.com/health/healthy/how-our-brain-leads-us-to-drug-addiction-doctor-explains-naan-adimai-illai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக