Ad

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

நூற்றாண்டு விழா: 1921 முதல் 2021 வரை..! - தமிழகச் சட்டமன்றம் கடந்து வந்த பாதை

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா மிகவும் விமரிசையாக நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாகவே மிகவும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இன்று மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்தினை திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வை ஒட்டி தலைமைச்செயலக கட்டடம் கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயணைப்பு வீரர்கள், அதிவிரைவுப்படையினர், போக்குவரத்து காவலர்கள், என 3000-க்கும் மேற்பட்ட காவலர்கள் தலைமைச் செயலகத்தைச் சுற்றிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமைச் செயலகத்திற்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் தமிழகச் சட்டமன்ற நூற்றாண்டு விழா ஏற்பாடு குறித்த அதிமுகவின் கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. முறையாகக் கணக்கிட்டுப் பார்த்தல் 1937 தான் சட்டமன்ற தொடக்கம் என்றும், அதனால் 2037-ல் தான் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதிமுகவின் கருத்திற்கு பதில் பதில்களை வீசி விட்டு, இன்று திட்டமிட்டபடி விழாவினை கொண்டாடவிருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு.

சட்டமன்றம் சார்ந்த விழாக்களை விமரிசையாக கொண்டாடி மகிழ்வதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்றே சொல்லலாம். தமிழக சட்டப்பேரவைக்கு பொன்விழா கொண்டாடியது, சட்டமன்ற பவள விழா கொண்டாடியது மற்றும் சட்டமன்ற பேரவை வைர விழா கொண்டாடியது எனச் சட்டமன்ற வரலாற்றின் வழி நெடுகிலும் திமுகவின் கால்தடங்களை பார்க்க முடியும்.

Also Read: சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்காக வரலாற்றை மாற்றுகிறதா திமுக?! - ஜெயக்குமாரின் லாஜிக் சரியா?

அந்த வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியைத் தொடர்ந்து, அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் முதல் மற்றும் மிக முக்கியமான நிகழ்வாக இந்த நூற்றாண்டு விழா பார்க்கப்படுகிறது. சரி, தமிழகச் சட்டமன்றத்தின் வரலாறு தான் என்ன..? கொஞ்சம் அலசி ஆராய்வோம் வாருங்கள்..!!

தமிழகச் சட்டமன்ற வரலாறு:-

* ஆங்கிலயேர்கள் ஆட்சிக் காலம் முதலே தனித்து நின்று, முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்தது நம் தமிழகம். தற்போதுள்ள தமிழக சட்டப்பேரவையானது முன்பிருந்த சென்னை மாகாணத்தின் நீட்சியாகவே கருதப்படுகிறது.

* 1919 சீர்திருத்தங்கள் தான், சட்டம் இயற்றும் சபை என்ற அடிப்படையில், இந்தியர்களுக்கு ஆட்சி நிர்வாகத்தில் பகுதி வாரியாக பொறுப்பாட்சிகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் 1921-ல் சென்னை உள்ளிட்ட ஒன்பது மாகாணங்களில் புதிய சட்டமன்றங்கள் தனித் தனியாக உருவாக்கப்பட்டன.

*அதுவரை, மக்கள் பிரதிநிதிகள் நேரடித் தேர்தல்களின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் வணிகர்கள், பட்டதாரிகள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வழியாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்த ஏற்றத்தாழ்வுகளை களைந்து அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 1909-ம் ஆண்டு இந்திய அரசியலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் பிராமணரல்லாத உயர்சாதிகளுக்கும் மதச் சிறுபான்மையினருக்கும் அரசியலில் சம உரிமை என்பதைத் தாண்டி அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

* அதைத் தொடர்ந்து, 1919-ல் மாண்ட்போர்டு சீர்திருத்தங்கள் அதை விரிவுபடுத்தி, ஆட்சிப்பொறுப்பை மொத்தமாக அவர்களின் கையில் வழங்க வழிவகுத்தது. சென்னை உள்ளிட்ட 9 மாகாணங்களில் ஆட்சி நிர்வாகத்தின் தலைவராக ஆளுநரை ஏற்றுக்கொண்டு, சட்டமியற்றும் நடவடிக்கைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கியது.

* அதுவரை, ஒன்றிய அரசாங்கத்தின் முழு கட்டுப்பாட்டிலிருந்து வந்த மாகாண அரசாங்கங்கள் மாண்ட்போர்டு சீர்திருத்தங்கள் மூலம் சுயமாக பொறுப்பாட்சி நடத்த அனுமதிக்கப்பட்டன.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை - தாமஸ் டேனியல் 1798

* 1909-ம் ஆண்டு முதல், இந்தியக் கவுன்சில் சட்டம் 1892-ன் படி மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலின் மூலம் உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்திய அரசு சட்டம் 1919 இயற்றப்பட்ட பின்னர் சென்னை மாகாணத்தில், 1921-ம் ஆண்டு முதல் முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டு சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. தற்போதைய தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி நடைபெற்றது.

* 1920 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறையிலிருந்தது. எனவே, அது ஒரு அவை கொண்ட சட்டமன்றமாகச் செயல்பட்டது. ஆனால், மாகாண அரசாங்கத்தின் முழுமையான அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஒரு பகுதி அமைச்சரவையிடமும் மற்றொரு பகுதி வழக்கம்போல ஆளுநர் தலைமையிலான நிர்வாக அவையிடமே இருந்தன. அமைச்சரவையின் பொறுப்பிலிருந்த துறைகள் மாற்றப்பட்ட துறைகள் எனவும் ஆளுநரின் பொறுப்பிலிருந்த துறைகள் ஒதுக்கப்பட்ட துறைகள் எனவும் வகைப்படுத்தப்பட்டன.

* நிதி, நீதி, நீர்ப் பாசனம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட முக்கியத் துறைகளும் , கல்வி, நூலகம், உள்ளாட்சி, மக்கள் நல்வாழ்வு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளும் இரட்டை ஆட்சிக்கு ஏற்றார் போல் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், 1921-ம் ஆண்டு சென்னை உள்ளிட்ட 9 மாகாணங்களின் சட்டமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆட்சி நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு தொடர்ச்சியான அரசியல் சீர்திருத்தங்களுக்கு வழி வகித்தனர். அப்போது ஆட்சிப் பொறுப்பிலிருந்த நீதிக் கட்சி கல்வி மற்றும் சமய விவகாரங்களில் தனது கொள்கைகளை வலுவாக வகுத்துக் கட்டமைத்தது.

* தற்போதைய தமிழகச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால், 1921-ல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற பதவிக்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. 1919 சீர்திருத்தத்தின்படி சென்னையில் அமைக்கப்பட்ட சட்டமன்றத்தில் 98 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் 25 நியமன உறுப்பினர்களும் இருந்தனர். சென்னை மாகாண நிர்வாகத்தின் அதிகார பொறுப்புகளை தன் வசம் வைத்திருந்த ஆளுநர் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கலைக்கவும், பதவிக்காலத்தை நீட்டிக்கவும் எல்லா அதிகாரங்களையும் பெற்றிருந்தார்.

மெட்ராஸ் மாகாணம்

* இந்திய ஒன்றியத்தின் 9 மாகாணங்களில் 1921-ல் சுமார் 16 ஆண்டுகள் ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் என இரட்டை ஆட்சி முறை நடைமுறையிலிருந்தது. பின்னர், 1919 சீர்திருத்தத்தைப் போன்று 1935-ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாகச் சென்னை உள்ளிட்ட 9 மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, மாகாண சுயாட்சி முறை அறிவிக்கப்பட்டது.

* அதைத் தொடர்ந்து, 1937-ல் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் படி, இந்திய அரசு சட்டம் 1935-ன் படி, 216 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றமும், 56 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் படி நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிறகு, 1937-ம் ஜூலை மாதம் முதல் சட்டப்பேரவை பதவியேற்றது. 1921-ல் சட்டமன்றமும், 1937-ல் சட்டப்பேரவையும் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

*அதனையடுத்து, உலகப்போரில் இந்தியர்கள் ஈடுபடுத்தப்பட்டதைக் கண்டித்து, 1939-ல் சென்னை மாகாண அமைச்சரவை பதவி விலகியது. அதைத் தொடர்ந்து, 1946-ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

* 1947-ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை முற்றிலுமாக விடுவித்த பின்னர், இந்திய அரசு சட்டம் 1947 உருவாக்கப்பட்டது. அதையடுத்து, 1952 இந்தியப் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து தற்போதைய தமிழகத்தின் முதல் சட்டப்பேரவை 1952, மார்ச் மாதம் அமைக்கப்பட்டது. அதுவரை 3 ஆண்டுகளாக இருந்த பதவிக்காலம் 1952-ல் 5 ஆண்டுகளாக மாற்றப்பட்டது. 1952-1957 இடையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் காமராஜர் மற்றும் கோபாலச்சாரி ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர்.

* அதனையடுத்து, 1957 ஆம் 2-ம் சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1957-1962 ஆட்சிக் காலத்தில் சென்னை - ஆந்திரா எல்லை பிரச்னை காரணமாக ஆந்திர சட்டப்பேரவையிலிருந்து ஒரு உறுப்பினர் சென்னைக்கு மாற்றப்பட்டார். அதன் காரணமாக, 205-ஆக இருந்த சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 206-ஆக உயர்ந்தது. 197-1962 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காமராஜ் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். 1965-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ‘தொகுதி சீரமைப்பு’ நடவடிக்கைகளின் விளைவாகச் சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 234-ஆக உயர்த்தப்பட்டது.

* அதுவரை காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், 1967 தேர்தல் திராவிட அரசியலின் தொடக்கமாக மாறியது. திமுக காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றி விட்டு அரியணையில் ஏறியது. அந்த தேர்தலின் விளைவாக விளைவாக அப்போதைய முதல்வர் அண்ணாதுரையின் முன்னெடுப்பில் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் ‘சென்னை மாநிலம்’ ‘தமிழ்நாடு’ மாநிலம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

கலைஞர் - அண்ணா

* அதைத் தொடர்ந்து, 1971ம் ஆண்டு -அமைக்கப்பட்ட 5-வது சட்டப்பேரவை 1976-ம் ஆண்டே கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது அதுவே முதல் முறையாகும்.

*1977-ம் ஆண்டு 6-வது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1975-ம் ஆண்டின் ‘தொகுதி சீரமைப்பு’ நடவடிக்கைகளின் காரணமாக மாற்றியமைக்கப்பட்ட 234 தொகுதிகளில் முழுமையாகத் தேர்தல் நடத்தப்பட்டது.

* அதைத் தொடர்ந்து, 1980-ம் ஆண்டு தமிழகத்தின் 7-வது சட்டப்பேரவையும் 1985-ம் ஆண்டு 8-வது சட்டப்பேரவையும் அமைக்கப்பட்டன.

* 8-வது சட்டப்பேரவை பதவிக்காலத்தில் தமிழக சட்ட மேலவையை நீக்குவதற்கான தீர்மானம் 1986-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழக ‘சட்ட மேலவை’ கலைக்கப்பட்டது. அதன் மூலம், 1937-ஆம் ஆண்டு இரு அவைகளாக உருவாக்கப்பட்ட தமிழகச் சட்டமன்றம் 1986-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒரே அவையைக் கொண்ட சட்டமன்றமாக உருவெடுத்தது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக சட்டமேலவையை நீக்கவும், சேர்க்கவும் அரசியல் கட்சிகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இப்படியாக ஆட்சியும், காட்சியும் தமிழகத்தில் மாறிக்கொண்டே இருக்க தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு 1921-ம் ஆண்டினை கணக்கில் கொண்டு இன்று நூற்றாண்டு விழாவினை விமரிசையாகக் கொண்டாடவிருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில், சமூக நீதியை நிலைநாட்டும் இடஒதுக்கீடு, தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மாநிலப்பெயர் மாற்றம், இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கம், கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உள்ளிட்ட புரட்சிகர சட்டங்கள் தமிழக சட்டமன்றத்தின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.

சட்டமன்றம்

திமுகவின் வாதத்தின் படி பார்க்கையில், 1921-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றம் அமைந்தது. அது நீதிக்கட்சி தலைமையிலான ஆட்சி. அந்தச் சட்டமன்றத்தைக் கணக்கில் கொண்டுதான் தமிழ்நாடு அரசு 2021-ல் தற்போது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

ஆனால் இந்த நூற்றாண்டு விழா விவகாரத்தில் பலரும் குழம்பி விடுவது 'சட்டமன்றம்' மற்றும் 'சட்டமன்ற மேலவை' இந்த இரண்டு வார்த்தைகளில் தான். 1921-ல் அமைந்த முதல் சட்டமன்றத்தைக் கணக்கில் கொண்டுதான் தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1921-ல் அமைந்த சட்டமன்றத்தையும், 1937-ல் அமைந்த மேலவையுடன் கூடிய சட்டமன்றத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை என்றும், தமிழக அரசின் இந்த நிலைப்பாடு சரியானது தான் என்றும் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அரசியல் சலசலப்புகள், ஆட்சிக் கலைப்புகள், குடியரசுத் தலைவர் ஆட்சி என எத்தனையோ சிக்கல்களை கடந்து, இன்று இந்திய ஒன்றியத்திற்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்வதற்கு அடிப்படையாக இருக்கும் தமிழகச் சட்டமன்றம் கடந்து வந்த பாதைகள் கரடு-முரடானதாக இருப்பினும், இந்த நூற்றாண்டு பயணம் உண்மையில் வியக்கத்தகு பயணம் என்று தான் சொல்ல வேண்டும்..!!



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-timeline-of-tamilnadu-assembly-on-the-day-of-centenary-celebrations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக