13 ஆண்டுகால இடைவெளிக்கு பின் கிரிக்கெட் வீரர் தோனியை மீண்டும் சந்தித்திருக்கிறார் விஜய். 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் அறிவிக்கப்பட்டார். அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இருக்க அணியின் அறிமுகவிழா சென்னை டிரேட் சென்டரில் 13 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியில்தான் முதல்முறையாக நடிகர் விஜய்யும் - தோனியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் விளையாடிய அத்தனை போட்டிகளுக்கும் விஜய் நேரில் வந்து சிஎஸ்கே-வுக்காக விசில் போட்டார்.
2008-க்குப்பிறகு விஜய்யும், தோனியும் சந்தித்துக்கொள்ளவேயில்லை. இந்த நிலையில்தான் தோனி கடந்த இரண்டு நாள்களாக கோகுலம் ஸ்டுடியோவுக்கு விளம்பர ஷூட்டிங்கிற்காக வந்திருந்தார். கோகுலம் ஸ்டூடியோவில்தான் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பும் நிகழ்ந்துவருகிறது.
விஜய்யின் ஷூட்டிங் அங்கே நடப்பது தோனிக்கோ, தோனி அங்கே வந்திருப்பது விஜய்க்கோ தெரியாது. தோனியின் மேனேஜரிடம் விஜய்யின் 'பீஸ்ட்' பட ஷூட்டிங் இங்கேதான் நடக்கிறது என்கிற தகவலை 'பீஸ்ட்' படக்குழுவில் இருந்தவர் தெரிவித்திருக்கிறார். விஜய்க்கும் தோனியின் ஷூட்டிங் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அப்போது விஜய், "தோனியை மீட் பண்ணமுடியுமா... அவரை நேர்ல பார்த்து 13 வருஷம் ஆகிடுச்சு" என்று சொல்லியிருக்கிறார். இது அப்படியே தோனிக்கு சொல்லப்பட, "நான் பீஸ்ட் ஸ்பாட்டுக்குப் போறேன்" எனக் கிளம்பி வந்திருக்கிறார் தல தோனி.
தோனி உடனடியாக வர சம்மதிப்பார் என்பதை விஜய் எதிர்பார்க்கவில்லையாம். உடனடியாக அவரை வரவேற்பதற்கான எல்லா வேலைகளையும் செய்யச் சொல்லியிருக்கிறார்.
விஜய்யுடன் இருந்தவர்கள் தோனியுடன் படம் எடுத்துக்கொள்ளவும், தோனியுடன் வந்தவர்கள் விஜய்யுடன் படம் எடுத்துக்கொள்ளவும் விரும்ப தல - தளபதி சந்திப்பு மிகவும் நெகிழ்வாக நடந்திருக்கிறது.
source https://cinema.vikatan.com/tamil-cinema/dhoni-and-vijay-meet-happened-after-13-years
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக