Ad

சனி, 21 ஆகஸ்ட், 2021

இந்தியாவிலேயே இத்தனை `நம்பர் 1' சென்னையில்தானா? எங்கே? என்னனென்ன? #MadrasDay

வந்தாரை வாழக்கும் சென்னைக்கு வயது 382. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் நாள், 'மெட்ராஸ் டே' என ஒட்டுமொத்த சென்னை மக்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழைமையிலும் புதுமையிலும் சென்னைக்கு புகழ் சேர்க்கும் அடையாளங்களைப் புகைப்படங்களாகப் பட்டியலிட்டு, அவை எப்படி இந்தியாவுக்கே முன்னோடியாக, இந்தியாவிலேயே முதலிடமாக பெருமை சேர்த்து வருகிறது என்பதை எழுத்துக்குறிப்பாலும் பார்ப்போம். ``சென்னைதான் கெத்து" என்று பெருமிதமாக சொல்ல வைக்கும் கெத்தான தகவல்கள்...

1.புனித ஜார்ஜ் கோட்டை

புனித ஜார்ஜ் கோட்டை

இந்தியாவிலேயே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை. இந்த வரலாற்றுப் பெருமையைத் தாங்கியபடி, இன்றளவும் சென்னை ராஜாஜி சாலையில் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. கி.பி. 1639-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோட்டைதான், தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக செயல்பட்டு வருகிறது.

2. மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

இந்தியாவிலேயே மிகப்பெரிய நீதிமன்ற வளாகம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம். ஆங்கிலேய அரசால் 1862-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சுமார், 107 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த நீதிமன்றம்தான், லண்டன் உச்ச நீதிமன்றத்திற்கு அடுத்து, உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக கருதப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், 1887-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் அரசுத்தரப்பு நீதிபதியாக எஸ்.சுப்ரமணிய ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணிநியமனம் செய்யப்பட்டதும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3. மெட்ராஸ் வங்கி

மெட்ராஸ் வங்கி

இந்தியாவிலேயே முதல் அரசு வங்கியாக உருவாக்கப்பட்டது, மெட்ராஸ் வங்கி. இது கி.பி. 1683-ம் ஆண்டு மெட்ராஸ் ஆளுநராக இருந்த வில்லியம் கிப்ஃபோர்டு (William Gyfford) என்பவரால் தொடங்கப்பட்டது. மதராஸ் வங்கி, கல்கத்தா மற்றும் பம்பாய் மாகாண வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, 1921-ம் ஆண்டு இந்திய இம்பீரியல் வங்கியாக உருமாற்றம் பெற்றது. பின்னாளில், இந்த வங்கியே பாரத ஸ்டேட் வங்கியாக புத்தாக்கம் பெற்றது.

4. எழும்பூர் அரசு கண் மருத்துவமனை

எழும்பூர் அரசு கண் மருத்துவமனை

இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்ட கண் மருத்துவமனை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை. இது உலகின் இரண்டாவது கண் மருத்துவமனையாகவும், ஆசியாவின் முதல் கண் மருத்துவமனையாகவும் சிறப்பு பெறுகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக 1926- ம் ஆண்டு கண் மருத்துவப் படிப்பும், 1948- ம் ஆண்டு கண்தான வங்கியும் இந்த மருத்துவமனையில் தான் தொடங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், உலக அளவில் கண் மருத்துவத்துக்கென்று முதன்முதலாக அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு, இன்றளவும் தொன்மை மாறாமல் இயங்கி வருவதும் இந்த மருத்துமனையில்தான். மேலும், முதன்முதலில் கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது, வைரஸ் மூலம் பரவும் 'மெட்ராஸ்-ஐ’ நோயை கண்டறிந்தது என பல்வேறு ஒப்பற்ற சாதனைகளை புரிந்த அரசு கண் மருத்துவமனையாக இது விளங்குகிறது.

5. அடையாறு புற்றுநோய் மருத்துவமனை

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை

இந்தியாவிலேயே முதன்முறையாக 'Regional Centre For Cancer Research And Treatment' என மத்திய சுகாதாரத் துறையால் அறிவிக்கப்பட்ட முதல் மருத்துவமனை, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியால் 1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது புற்றுநோய் மருத்துவமனை. இங்குதான், இந்தியாவிலேயே முதன்முறையாக 1957-ம் ஆண்டு மருத்துவத்திற்கான இயற்பியல் துறை தொடங்கப்பட்டது. மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக 1953-ம் ஆண்டு கோபால்ட் 60 டெலிதெரபி, 1965-ம் ஆண்டு மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் மாமோகிராஃபி மற்றும் லீனியர் ஆக்ஸலரேட்டர், ரேடியோ ஆர்க் தெரபி போன்ற உலகத்தரம் வாய்ந்த மருத்துத் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகிலேயே மிகச்சிறந்த புற்றுநோய் மருத்துவமனையாக செயல்படுகிறது.

6. கிண்டி பொறியியல் கல்லூரி

கிண்டி பொறியியல் கல்லூரி

இந்தியாவிலேயே மிகப் பழைமையான பொறியியல் கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி. இந்தியாவிலேயே முதன்முறையாக, மெக்கானிகல், எலெக்ட்ரிகல் என பல்வேறு பொறியியல் பிரிவுகளை அறிமுகப்படுத்தியது இந்தக் கல்லூரிதான். இந்திய அரசால் தனியாக அஞ்சல் தலை வெளியிடப்பட்ட கல்லூரியும் கிண்டி பொறியியல் கல்லூரிதான்.

7. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி

இந்தியாவிலேயே மிகப் பழைமையான மருத்துவக் கல்லூரி, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி. 1835-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கல்லூரியில்தான், 1878-ம் ஆண்டு உலகின் முதல் நான்கு பெண் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் மேரி சார்லலெப் பட்டம் பெற்றார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பயின்றதும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில்தான்.

8. சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்தியாவிலேயே முதன்முதலில் அமைக்கப்பட்ட வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை ஆய்வு மையம். 1792-ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. நூற்றாண்டு கடந்த சென்னை வானிலை மையத்தின் சேவையை, உலக வானிலை ஆய்வு நிறுவனம் உலக அங்கீகார சான்றிதழ் அளித்து சிறப்பித்துள்ளது.

9. சென்னை மெரீனா கடற்கரை

மெரினா கடற்கரை

இந்தியாவிலேயே மிக நீளமான கடற்கரை, சென்னை மெரீனா கடற்கரை. உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையாகவும் பெருமையடைகிறது. சுமார் 12 கி.மீ. நீளமுடைய இந்தக் கடற்கரை, 1880-ம் ஆண்டு ஆங்கிலேய ஆளுநர் மவுண்ட்ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் அவர்களால் புதுப்பிக்கப்பட்டது.

10. ஹிக்கின்பாதம்ஸ்

ஹிக்கின்பாதம்ஸ்

இந்தியாவிலேயே மிகப்பழைமையான புத்தக நிலையம், சென்னை ஹிக்கின்பாதம்ஸ். இது 1844-ம் ஆண்டு ஆங்கிலேய நூலகர் ஏபெல் யோஸ்வா ஹிக்கின்பாதம்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது.

11. ஸ்பென்சர் பிளாசா

ஸ்பென்சர் பிளாசா

இந்தியாவிலேயே மிகப்பழைமையான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், ஸ்பென்சர் பிளாசா. ஆசியாவின் மிகப்பழைமையான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கூட ஸ்பென்சர் பிளாசாதான். இது 1863-ம் ஆண்டு சார்லஸ் டுரண்டு மற்றும் ஜே.டபிள்யூ. ஸ்பென்சர் ஆகிய இருவரால் சென்னை மவுண்ட்ரோட்டில் கட்டப்பட்டது.

12. கிண்டி தேசிய பூங்கா

கிண்டி தேசிய பூங்கா

இந்தியாவிலேயே அரிய வகையாக நகர எல்லைக்குள் அமைந்திருக்கும் ஒரே தேசியப் பூங்கா, கிண்டி தேசிய பூங்கா. டச்சுக்காரர்கள் காலத்தில் கில்பெர்ட் ரோடரிக்ஸ் என்பவரின் சொந்த வேட்டைப்பகுதியாக இருந்துவந்த இடத்தை, 1978-ம் ஆண்டு இந்திய அரசு, தேசியப் பூங்காவாக அறிவித்தது.

13. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

இந்தியாவிலேயே மிகப் பழைமையான கிரிக்கெட் மைதானம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். இது, 1916-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் எம்.ஏ.சிதம்பரம் அவர்களின் பெயரால் இந்த மைதானம் அழைக்கப்படுகிறது.

14. ராயபுரம் ரயில் நிலையம்

ராயபுரம் ரயில் நிலையம்

இந்தியாவிலேயே மிகப் பழைமையான ரயில் நிலையம், ராயபுரம் ரயில் நிலையம். 1856-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம், அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபுவால் திறந்து வைக்கப்பட்டது.

15. காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம்

காட்டுப்பள்ளி துறைமுகம்

இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் தளம், சென்னை காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கொழும்பு, சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக, மூன்றாவது பெரிய சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் தளமாக காட்டுப்பள்ளி விளங்குறது.

 16. பிர்லா கோளரங்கம்

பிர்லா கோளரங்கம்

இந்தியாவிலேயே முதன்முதலாக 360 கோண வான திரையரங்கம் அமைக்கப்பட்ட இடம், சென்னை பிர்லா கோளரங்கம். 2009-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. சென்னை கோட்டூர்புரம் பெரியார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கம், 1983-ம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தால் நிறுவப்பட்டது.

17. சென்னை G.P.O

சென்னை G.P.O

இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்ட ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் (G.P.O), சென்னை பொது அஞ்சல் அலுவலகம். இது 1786-ம் ஆண்டு சென்னை செயிண்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் திறக்கப்பட்டது. மேலும், சென்னை G.P.O., இந்தியாவின் முதல் நடமாடும் தபால் நிலையத்தையும் ஆரம்பித்து நடத்தியது.

18. செயின்ட் ஜார்ஜ் பள்ளி

செயின்ட் ஜார்ஜ் பள்ளி

இந்தியாவிலேயே மிகப்பழைமையான ஆங்கில வழிப் பள்ளிக்கூடம், சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளிக்கூடம். ஆசியாவிலேயே மிகப் பழைமையான ஆங்கில வழிப் பள்ளியாகவும் விளங்குகிறது. 1715-ம் ஆண்டு புனித மேரி தேவாலயத்தின் பாதிரியார் வில்லியம் ஸ்டீவன்சனால், புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் தொடங்கப்பட்டது. பின்னர், 1904-ம் ஆண்டு பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதிக்கு மாற்றப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

`மெட்ராஸ் டே' Quiz

`மெட்ராஸ் டே' Quiz

நீங்க தஞ்சாவூரா இருக்கலாம், வந்தவாசியா இருக்கலாம், மதுரையா இருக்கலாம் இல்ல கன்னியாகுமரியா இருக்கலாம். ஆனா, நம்ம எல்லாருடைய லைஃப்லையும் சென்னை கலந்திருக்கும். நாம சென்னையைக் கடந்திருப்போம். அப்படி நம்ம லைஃபோட கலந்து இருக்கிற சென்னையைப் பத்தி நமக்கு எவ்வளவு தெரியும்? இந்த quiz -அ attend பண்ணுங்க!

கலந்துகொள்ள க்ளிக் செய்க - https://bit.ly/3gl7qMl

19. சென்னை கிறித்தவக் கல்லூரி

சென்னை கிறித்தவக் கல்லூரி

இந்தியாவிலேயே மிகப்பழைமையான கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி. 1835-ம் ஆண்டு எழும்பூர் புனித ஆண்ட்ரூ தேவாலயத்தில் சிறிய பள்ளியாகத் தொடங்கப்பட்டது. பின்னர், 1937-ம் ஆண்டு தாம்பரம் சேலையூர் காட்டுப்பகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியாக (M.C.C) இன்றளவும் உயிர்ப்புடன் இயங்கி வருகிறது.

20. சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம்

இந்தியாவிலேயே மிகப் பழைமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகம். 1857-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் தான், இந்தியாவிலேயே முதன்முறையாக எலக்ரானிக்ஸை ஒரு பாடமாக கொண்டுவந்தது.

21. அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம்

இந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகவும் இது திகழ்கிறது. 2010-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த மு.கருணாநிதியால் திறக்கப்பட்டது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டு, சர்வதேச தரத்தில் சகல வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

22. சென்னை அரசு அருங்காட்சியகம்

சென்னை அரசு அருங்காட்சியகம்

இந்தியாவிலேயே மிகப் பழைமையான அருங்காட்சியகங்களில் ஒன்று, சென்னை அரசு அருங்காட்சியகம். 1851-ம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை அருங்காட்சியகத்தில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பவியல் என 46 காட்சிக்கூடங்கள் உள்ளது.

23. கன்னிமாரா நூலகம்

கன்னிமாரா நூலகம்

இந்தியாவிலேயே மிகப் பழைமையான பொது நூலகங்களில் ஒன்று, கன்னிமாரா நூலகம். 1896-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நூலகத்தில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. 1955-ம் ஆண்டு போடப்பட்ட ‘டெலிவரி ஆஃப் புக்‘ சட்டத்தின்படி, இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், இதழ்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு பிரதி இந்த நூலகத்திற்கு அனுப்பப்படுகிறது.

Also Read: மெட்ராஸ் வரலாறு : சென்னை பட்டினத்தில் இயங்கிய நாணய தொழிற்சாலை | பகுதி 23

24. மெட்ராஸ் கால்நடைக் கல்லூரி

மெட்ராஸ் கால்நடைக் கல்லூரி

இந்தியாவிலேயே மிகப் பழைமையான கால்நடைக் கல்லூரிகளில் ஒன்று, மெட்ராஸ் கால்நடைக் கல்லூரி. இந்தியாவிலேயே முதன்முதலில் பல்கலைக்கழகப் பட்டம் வழங்கிய கல்லூரியும் இதுதான். 1908-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதராஸ் கால்நடைக் கல்லூரிக்கு,1935-ம் ஆண்டு பல்கலைக்கழக அங்கீகாரம் கிடைத்தது.

25. BMW கார் உற்பத்தி தொழிற்சாலை

BMW கார் உற்பத்தி தொழிற்சாலை

இந்தியாவிலேயே முதன்முறையாக BMW நிறுவனத்தின் கார் உற்பத்தித் தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம், சென்னை. 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலைதான் தற்போது இந்தியாவில் இருக்கும் ஒரே BMW கார் தொழிற்சாலை. மேலும், இந்தியாவிலேயே ஆட்டோமொபைல் துறையின் முன்னோடி நகரமாகவும் சென்னை பார்க்கப்படுகிறது. ஆகவேதான் ஆசியாவின் 'டெட்ராய்ட்' என சென்னை மாநகரம் போற்றப்படுகிறது.

26. மெட்ராஸ் பிரசிடன்சி ரேடியோ க்ளப்

ரேடியோ

இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்ட ரேடியோ சேவைகளில் ஒன்று, மெட்ராஸ் பிரசிடன்சி ரேடியோ க்ளப். 1924-ம் ஆண்டு வி.கிருஷ்ணசாமி செட்டியால் எழும்பூர் ஹாலோவேஸ் கார்டனில் (Holloways Garden egmore) தொடங்கப்பட்டது. அதேபோல், இந்தியாவிலேயே முதல் FM ஒலிபரப்பு சேவையும் 1977-ம் ஆண்டு சென்னையில்தான் துவக்கப்பட்டது.

27. சென்னை மாநகராட்சி

ரிப்பன் பில்டிங்

இந்தியாவிலேயே முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட மாநகராட்சி, சென்னை மாநகராட்சி. 1688-ம் ஆண்டு உருவாக்கம் பெற்ற இந்த மாநகராட்சிதான், லண்டனுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப் பழைமையான கார்பரேசனாக புகழடைகிறது. சென்னை மாநகராட்சி ஏற்படக் காரணமாக அமைந்தவர் ரிப்பன் பிரபு. எனவே, அவரை கௌரவிக்கும் விதமாக 1913-ம் ஆண்டு கட்டப்பட்ட சென்னை மாநகராட்சி தலைமை கட்டிடத்திற்கு, 'ரிப்பன் பில்டிங்' என பெயர் சூட்டப்பட்டது.



source https://www.vikatan.com/news/tamilnadu/madras-day-chennai-special-places-and-chennais-no-1-achievements-in-all-over-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக