Ad

வியாழன், 8 ஜூலை, 2021

Covid Questions: பக்க வாத பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

எனக்கு ரத்தக் கசிவு பிரச்னை உள்ளது. அதற்காக க்ரானியக்டமி மற்றும் க்ரானியோபிளாஸ்டி சிகிச்சைகள் மேற்கொண்டிருக்கிறேன். பிரச்னைக்கான மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு இடது பக்கவாதமும், வலது பக்க மூளையில் காயமும் இருக்கிறது. இந்நிலையில் நான் கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாமா?

- நந்தகுமார் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

``கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் மிகமிக குறைவான எதிர் விளைவுகளைக் கொண்டவை. அதனால்தான் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கேள்வியில் நீங்கள் க்ரானியக்டமி மற்றும் க்ரானியோபிளாஸ்டி சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இடதுபக்கவாதமும், வலது பக்க மூளையில் காயமும் இருப்பதாகவும், உங்கள் பிரச்னைகளுக்கான மருந்துகளை எடுத்துவருவதாகவும் சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் பிரச்னைகளுக்கும் கோவிட் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்புமில்லை.

Also Read: Covid Questions: நம்பிக்கை அளிக்கும்படி கொரோனாவுக்கு புதிய மருந்துகள் ஏதேனும் விரைவில் வருமா?

இன்னும் சொல்லப்போனால் நீங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாதுகாப்படைவீர்கள் என்பதுதான் நிஜம். கோவிஷீல்டு, கோவாக்சின் , ஸ்புட்னிக் என எந்தத் தடுப்பூசி கிடைக்கிறதோ அதை தாமதிக்காமல் போட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடமும் ஒரு முறை ஆலோசித்துவிடவும். தடுப்பூசி மட்டுமே உங்களை கோவிட் தொற்றின் ஆபத்திலிருந்து காக்கும் ஒரே ஆயுதம் என்பதை மறந்துவிடாதீர்கள்".

நான் Inflammatory Bowel Disease (IBD) எனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதற்காக இம்யூனோசப்ரசென்ட் மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- சாய் கிருஷ்ணா (விகடன் இணையத்திலிருந்து)

COVID-19 vaccine

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

``இம்யூனோசப்ரெஸ்டு பாதிப்புகள் உள்ளவர்களும் (உதாரணத்துக்கு ஹெச்.ஐ.வி, புற்றுநோய், தீவிர நீரிழிவு போன்றவை) கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ், க்ரான்ஸ் டிசீஸ் (Crohn's disease) போன்றவற்றுக்காக இம்யூனோசப்ரெசிவ் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள், ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள்கூட கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் மூலம் அவர்கள் தொற்றின் பாதிப்பு மற்றும் அது ஏற்படுத்தும் தீவிரத்திலிருந்து நிச்சயம் தற்காத்துக்கொள்ளலாம். எனவே நீங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது".

Also Read: Covid Questions: தைராய்டு பிரச்னை, சைனஸ் தொந்தரவும் உள்ளது; நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/can-a-person-who-underwent-craniectomy-take-covid-19-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக