Ad

வியாழன், 8 ஜூலை, 2021

`ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா' - புதுக் கட்சி தொடங்கினார் ஜெகன்மோகன் தங்கை ஷர்மிளா!

ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா நேற்றைய தினம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வரும் தனது தந்தையுமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்த கையோடு 'ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா' என்ற பெயரில் தனது புது கட்சியினை தொடங்கினார்.

ஹைதராபாத்தில் நேற்று மாலை நடைபெற்ற கட்சி அறிமுகக் கூட்டமானது கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிமையான முறையில் நடந்தது. முன்னதாக ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் இடுபுலபாயா பகுதியில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு அமைச்சர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அதே போல், ஷர்மிளாவும் அவரது தயார் விஜயம்மாவும் தனியாக சென்று அஞ்சலி செலுத்தி விட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து ஷர்மிளா அவரது தாயாருடன் மதியம் ஹைதராபாத்துக்கு விரைந்தார். அங்கு இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தனியார் மண்டப வளாகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மத்தியில் 'ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா' என்ற தனது கட்சியின் பெயரையும், இளம் பச்சை, நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் தெலங்கானா மாநில வரைபடமும், ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் படமும் இடம்பெற்றுள்ள கட்சியின் கொடியினையும் அசைத்துக் காட்டி அறிமுகப்படுத்தினார். ஷர்மிளாவின் கட்சிக் கூட்டத்தைத் தலைமை தாங்கிய அவரது தயார் விஜயம்மா, "மறைந்த ஒய்.எஸ்.ஆர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவு செய்யவே ஷர்மிளா அரசியலுக்கு வந்துள்ளார். அவரை மக்கள் ஆசீர்வதித்து வெற்றியடையச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசினார்.

ஷர்மிளா

அவரைத் தொடர்ந்து பேசிய ஷர்மிளா, "ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலம் தான் ஆந்திராவின் பொற்காலம். அதை யாராலும் மறுக்க முடியாது. ஏழை எளிய மக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் அவரின் நல்லாட்சியில் பயன் பெற்றனர். மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச மருத்துவத்தை வழங்கி அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். அதே போல், குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்கி மகளிர் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்தார். அவரால் இன்று ஏராளமானோர் சுய தொழில் முனைவோராக உயர்ந்திருக்கின்றனர்.

என் தந்தை ராஜசேகர ரெட்டி இருந்த போது கட்டத்தொடங்கிய அணைகள் தற்போது வரையிலும் கூட கட்டிமுடிக்கப்படவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. கொரோனா நோய்த்தொற்றால் தெலங்கானாவில் ஏழை எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மாநில அரசு மக்கள் மீது துளியும் அக்கறையில்லாமல் அலட்சியமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திராவிலிருந்து பிரிந்து தெலங்கானா என்ற மாநில உருவான போது மக்கள் எப்படி இருந்தார்களோ, தற்போதும் அப்படியே இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நிலையானது சிறுதும் மேம்படவில்லை. ஆனால், முதல்வர் சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளது. தெலங்கானாவின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் இல்லை. எனவே, இங்கு மீண்டும் எனது தந்தை ராஜசேகர ரெட்டியின் வழியிலான நல்லாட்சியை மக்களுக்குத் தருவதற்காகவே தற்போது இந்த கட்சியைத் தொடங்கி அரசியலில் இறங்கியிருக்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/andhra-cm-jaganmohan-reddys-sister-ys-sharmila-launched-her-political-party-in-telangana

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக