என் மனைவிக்கு பென்சிலின், அனால்ஜின், ஆம்பிசிலின் போன்ற மருந்துகள் அலர்ஜி. சுகர், பிபி போன்ற இணைநோய்களும் இருக்கின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்படுகிறார். ஆரம்ப சுகாதார மையத்துக்குப் போனபோது அலர்ஜி இருப்பதைச் சொன்னதும் அவர்களே ஊசி போட மறுத்து பெரிய மருத்துவமனைக்குப் போகச் சொல்லிவிட்டார்கள். அவருக்கு ஊசி போட்டால் பாதிப்பு வருமா?
- தேவா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சைகளுக்கான சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.
``இங்கே இவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன். எந்த மருந்து அலர்ஜி இருந்தாலும் அது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தடையில்லை. ஏதோ மருந்து எடுத்துக்கொண்டதால் உடலில் தடிப்புகள் ஏற்பட்டது என்பதையெல்லாம் சீரியஸான அலர்ஜியாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஒரு மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு அவர்களுக்கு உயிருக்கே ஆபத்தாக முடிகிற அனாபிலாக்டிக் ரியாக்ஷன் (anaphylactic reactions ) எனப்படும் அதிதீவிர ஒவ்வாமை ஏற்பட்டு, நாக்கு, உதடுகள் தடித்துப் போய், மூச்சுக்குழல் தடித்து, மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டாலோ, ரத்த அழுத்தம் மிகவும் குறைந்தாலோ, மயக்கநிலை ஏற்பட்டு சுயநினைவை இழந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்து, ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கும் நிலைக்குப் போனாலோ, அவற்றையெல்லாம் தீவிர பின்விளைவுகள் என்று சொல்கிறோம். அத்தகைய பாதிப்புகளைச் சந்திப்பவர்களுக்கு மட்டும் கொஞ்சம் கவனமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.
Also Read: Covid Questions: கொரோனா குணமான பின் மாஸ்டர் ஹெல்த் செக்கப்; எத்தனை நாள்கள் கழித்து செய்துகொள்ளலாம்?
அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்றில்லை. அவசர சிகிச்சைகள் மற்றும் அனாபிலாக்டிக் ரியாக்ஷன் ஏற்பட்டால் அதைக் கையாள்வதற்கான வசதிகளும், அனுபவமிக்க மருத்துவர்களும் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி போட வேண்டும். ஊசி போட்டபிறகு சிறிது நேரம் அந்த நபரைக் கண்காணித்து எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் வீட்டுக்கு அனுப்பலாம். ஒருவேளை அலர்ஜி ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை அளித்து, சரி செய்த பிறகு வீட்டுக்கு அனுப்பலாம்.
இணைநோய்கள் இருப்பவர்கள் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். ரத்தச்சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் சரியான அளவில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பிபியோ, நீரிழிவோ, அலர்ஜியோ இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது என்று சொல்லப்படவில்லை.
நீங்கள் அணுகிய ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட மறுத்து உங்களைத் திருப்பி அனுப்பியது மிகவும் வருத்தமான விஷயம். ஒருவேளை அவர்களுக்கு சந்தேகம் இருந்திருந்தால் சிறப்பு மருத்துவர்களை அணுகி ஃபிட்னெஸ் சர்ட்டிஃபிகேட் வாங்கிவரச் சொல்லியிருக்கலாம்.
அப்படிச் செய்யாமல் திருப்பி அனுப்பியது தவறு. இது மக்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்த பயத்தை அதிகரிக்கும். தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிற இன்றைய சூழலில் அது குறித்த தேவையற்ற பீதியை ஏற்படுத்துவது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-people-who-are-allergic-to-medicines-take-covid-vaccine-2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக