காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், குப்பைகளைக் கொட்ட இடமின்றி திணறி வருகிறது பஞ்சாயத்து நிர்வாகம்.
திருநள்ளாறு அருகே அத்திப்படுகை பகுதியில் அரசலாற்றுக்கும், நெல்லி வாய்க்காலுக்கும் இடையிலுள்ள ஒரு இடத்தை கொம்யூன் பஞ்சாயத்து தேர்வு செய்து , அங்கே குப்பைகளைக் கொட்ட ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "இங்கு குப்பைகளைக் கொட்டுவதால் எதிர்காலத்தில் அரசலாறு மற்றும் நெல்லிவாய்க்கால் நீர்நிலைகள் பாதிக்கப்படும். எனவே வேறிடத்தில் குப்பைகளைக் கொட்ட கொம்யூன் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்கின்றனர்.
இதுபற்றி திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து கமிஷனர் பொறுப்பு வகிக்கும் லோகநாதனிடம் விளக்கம் கேட்டோம்.
"ஆரம்பத்துல ரயில்வே ட்ராக் ஓரமா கொட்டிக் கொண்டிருந்தோம். இதற்கு ரயில்வே நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் "இனி ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என்று தெரிவித்துவிட்டார். அதன்பின்பு அம்பகரத்தூர் பகுதியில் ஒதுக்குபுறமான இடத்தில் கொட்டினோம். அதற்கு அப்பகுதி மக்கள் "திருநள்ளாறு குப்பைகளை ஏன் எங்க ஊருக்கு எடுத்து வருகிறீர்கள்? என்று எதிர்த்து விட்டார்கள் . இறுதியாக திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை அனுமதி பெற்று, அத்திப்படுகையில் கொட்டி வந்தோம். அதற்கும் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எங்குதான் குப்பைகளை கொட்டுவது? மூன்று நாட்களாக குப்பைகள் அல்லாமல் கிடக்கு" என்றார் கவலையோடு!
மயிலாடுதுறை அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் குகன், அப்பகுதி குப்பைகளை உடனுக்குடன் இயற்கை உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குகிறார். அதுபோல இங்கும் செய்ய முயற்சிக்கலாமே"என்று நாம் தெரிவித்தபோது, குகனிடம் பேசி நல்ல முடிவு எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/in-thirunallaru-panchayat-commissioner-says-that-they-have-no-place-to-dump-the-waste
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக