Covid Question: எனக்கு 4 மாதங்களுக்கு முன்பு கோவிட் தொற்று வந்து, கிட்டத்தட்ட ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு குணமானேன். கடந்த ஒரு மாதமாக எனக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. கோவிட்தான் காரணம் என்கிறார்கள் சிலர். அது உண்மையா? இதற்குத் தீர்வு என்ன?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ட்ரைகாலஜிஸ்ட் (கூந்தல் பிரச்னைகளுக்கான மருத்துவர்) தலத் சலீம்.
``கடந்த 20 வருடங்களில் முடி உதிர்வுக்காக சிகிச்சைக்கு வந்த எத்தனையோ பேரை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஹார்மோன் கோளாறு, ஸ்ட்ரெஸ், அனீமியா என ஆளாளுக்கு ஒரு காரணம் இருந்திருக்கிறது. ஆனால் கடந்த ஒன்றரை வருடத்தில் இதுவரை கேள்விப்படாத காரணத்துடன் முடி உதிர்வு என சொல்லிக்கொண்டு நிறைய பேர் வருவதைப் பார்க்கிறேன்.
முடி உதிர்வு சிகிச்சைக்காக வரும் பலரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களாக இருப்பதையும் பார்க்கிறேன். அதிலும் அந்த முடி உதிர்வு அசாதாரணமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.
`இது சரியாயிடுமா... அல்லது நிரந்தர வழுக்கைப் பிரச்னையா மாறிடுமா' என்பதே அவர்களின் கேள்வியாக, கவலையாக இருக்கிறது. கோவிட் தொற்றுக்கு உள்ளாவோருக்கு ஏன் முடி உதிர்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.
கூந்தல் வளர்ச்சியில் வளரும் பருவம், ஓய்வெடுக்கும் பருவம் மற்றும் உதிரும் பருவம் என 3 நிலைகள் உள்ளன. கோவிட் தொற்றுக்கு உள்ளாகும்போது நம் உடல் அதீத அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. அதன் விளைவாக கூந்தலின் வளரும் பருவம் தடைப்படுகிறது. கூந்தலின் வேர் நுனிகள் பலவீனமாகி, முடி உதிரத் தொடங்குகிறது. இதை `டெலோஜென் எஃப்ளுவியம்' என்கிறோம். ஏற்கெனவே முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்களுக்கு, கோவிட் தொற்றின் அதிர்ச்சியால் அது இன்னும் தீவிரமாகிறது.
எப்படி இருந்தாலும் இது குறித்துப் பெரிதாக பயப்படத் தேவையில்லை. இதுதான் நிரந்தரம் என்று நினைக்கத் தேவையில்லை. கோவிட் தொற்றானது, உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பாற்றலையும் பாதிப்பதால் தொற்றிலிருந்து மீண்டு, உடல் பழைய நிலைக்குத் திரும்ப சில நாள்கள் பிடிக்கும்.
முதல் வேலையாக ஸ்ட்ரெஸ்ஸை தவிர்க்கவும். தியானம், யோகா போன்றவற்றின் மூலம் ஸ்ட்ரெஸ் இன்றி வாழ முயற்சி செய்யலாம். நல்ல தூக்கம் மிக முக்கியம். 8 மணி நேரத் தூக்கம் உடலின் அனைத்துப் பிரச்னைகளையும் பழுதுபார்க்க உதவும். அதிலும் சரியான நேரத்துக்கு தூங்கச் செல்ல வேண்டியது மிக முக்கியம்.
Also Read: Covid Questions: தடுப்பூசிக்குப் பிறகு கொரோனா பாசிட்டிவ்; எனக்கும் சிகிச்சை தேவைப்படுமா?
உங்கள் உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அளவுகளை டெஸ்ட் செய்து பார்க்கவும். பற்றாக்குறை இருந்தால் மருத்துவ ஆலோசனையுடன் இரண்டுக்குமான சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
கோவிட் சிகிச்சைக்கு எடுத்துக் கொண்ட அதிகபட்ச மருந்துகளும் முடி உதிர்வுக்கு காரணமாகலாம். எனவே ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது அவசியமாகிறது. புரதம் அதிகமுள்ள நட்ஸ், சீட்ஸ், மீன், பருப்பு போன்றவை அவசியம்.
கெமிக்கல் கலப்பில்லாத ஹெர்பல் ஷாம்பூ உபயோகிப்பது சிறந்தது.
முடி உதிர்வு மிக அதிகமாக இருந்தால் மருத்துவ ஆலோசனை மிக முக்கியம். பலரும் பயப்படுகிற அளவுக்கு இது நிரந்தரப் பிரச்னை அல்ல. உடலியக்கம் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் முடி உதிர்வும் கட்டுப்படும்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/why-covid-patients-facing-excess-hair-loss-after-recovery
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக