புதுச்சேரி நகரப்பகுதியில் லூயி பிரகாசம் வீதியில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிழக்கு எஸ்.பி அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. அதையடுத்து எஸ்.பி ஜிந்தா கோதண்டராமன் மேற்பார்வையில் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், இனியன் மற்றும் பெரியக்கடை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார் நேற்று அதிகாலை சம்மந்தப்பட்ட இடத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது அங்கு குட்கா, பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து வீட்டில் பதுங்கிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால், பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ் பிஷ்னாய், கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த சுபன் ஆகிய மூன்று பேரிடமும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால் லூயி பிரகாசம் வீதியில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வீடு வாடகைக்கு எடுத்து போதைப் பொருள் குடோனாகப் பயன்படுத்தி விற்பனை செய்துள்ளார் தெரியவந்தது.
அதற்காக பெங்களூரில் இருந்து கார் மூலம் சுரேஷ் பிஷ்னாய் போதைப் பொருள்களை கடத்திக் கொடுத்ததும் தெரியவந்தது. அதேபோல கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவரான சுபன் பெட்டிக்கடை வியாபாரி என்பதும், பாபுலாலிடம் இருந்து அவ்வப்போது அரசு தடை செய்துள்ள போதைப்பொருட்களை வாங்கி அவற்றை தனது கடையில் பதுக்கி வைத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
Also Read: 'தாம்பரத்தில் மூட்டை மூட்டையாக குட்கா' - லாரியில் அள்ளிச் சென்ற போலீஸ்
அதையடுத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள், வெளிமாநில சப்ளையரிடம் கொடுக்கத் தயாராக வைத்திருந்த ரூ.8 லட்சத்து 5 ஆயிரம் ரொக்க பணம், இரண்டு கார்கள், 2 மோட்டார் பைக்குகள், 6 செல்போன்கள் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/thirty-lakh-worth-of-drugs-were-seized-by-the-police-in-pondicherry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக