Ad

வெள்ளி, 16 ஜூலை, 2021

Covid Questions: ஃபைஸர் முதல் டோஸ் மட்டும்தான் போட்டுக்கொண்டேன்; 2-வது டோஸ் வேறு எடுத்துக்கொள்ளலாமா?

ஜனவரி, 2021-ல் அயர்லாந்தில் ஃபைஸர் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இப்போது இந்தியாவில் இருக்கிறேன். இன்னும் 2 ஆண்டுகள் இங்குதான் இருப்பேன். இந்நிலையில் நான் பூஸ்டர் டோஸாக எந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்?

- பிரபா ஜானகி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

``பூஸ்டர் டோஸ் போடப்படாத நிலையில் தடுப்பூசியின் செயல்திறன் என்பது 6 மாதங்களுக்கு மேல் நீடிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பூஸ்டர் என்று நான் குறிப்பிடுவது இரண்டாவது தவணையை. முதல் தவணைக்குப் பிறகு போடப்படும் ஒவ்வொன்றையுமே பூஸ்டர் டோஸ் என்றுதான் குறிப்பிடுவோம். ஜனவரியில் ஃபைஸர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

Also Read: Covid Questions: இரண்டு தடுப்பூசிகள் கலந்து போடும் `வாக்சின் காக்டெயில்' ஆராய்ச்சிகள் எதற்காக?

இப்போது ஜூலை மாதம் நடந்துகொண்டிருக்கிறது. இடையில் பூஸ்டர் டோஸ் போடப்படாததால் நீங்கள் முற்றிலும் புதிதாக தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இணையான நிலை இது. எனவே நீங்கள், இந்தியாவில் கிடைக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் அல்லது ஸ்புட்னிக் வி - இவற்றில் ஏதேனும் ஒன்றை மறுபடி முதல் மற்றும் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

கோவாக்சின் என்பது உயிரற்ற, கொல்லப்பட்ட (இன்ஆக்டிவேட்டடு) வைரஸை கொண்டு உருவாக்கப்படுகிறது. கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இரண்டும் வைரல் வெக்டார் வகையைச் சேர்ந்தவை.

வெக்டார் தடுப்பூசியில் அடினோ வைரஸ், உடலிலுள்ள செல்களில் செலுத்தப்படும். அதாவது, `மாதிரி’ வைரஸ் போன்ற ஒன்று, உடலுக்குள் செலுத்தப்பட்டு உடலை நோய்க்கு எதிராக வினையாற்றுவதற்குத் தயார்படுத்தும்.

ஃபைஸர் என்பது எம்ஆர்என்ஏ வகையைச் சேர்ந்தது. கொரோனா வைரஸில் உள்ள ஆர்.என்.ஏ மரபுச்சங்கிலியின் பிரதிகளில் ஒன்றுதான் எம்ஆர்என்ஏ. மனித உடல் செல்களில் புரதங்களைத் தயாரிப்பதற்கான செய்முறைக் குறிப்புகள் அதில் எழுதப்பட்டிருக்கும். ஆகவே, `எம்ஆர்என்ஏ’வைத் தனியாகப் பிரித்து, அதுபோலவே செயற்கைமுறையில் தயாரித்து, நானோ துகள் கொழுப்புப் பந்துகளுக்குள் செலுத்தி இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள்.

COVID-19 vaccine

Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டதை உறுதிப்படுத்தும் SMS வரவில்லை; தடுப்பூசிச் சான்றிதழ் கிடைக்குமா?

மற்ற தடுப்பூசிகளோடு ஒப்பிடும்போது எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசிகளின் செயல்திறன் அதிகம். அதாவது மற்ற தடுப்பூசிகளின் செயல்திறன் 75 முதல் 80 சதகிவிதம் என்றால் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளின் செயல்திறன் 95 சதவிகிதம் இருக்கும்.

பெருமளவில், வேகமாகத் தயாரிக்கமுடியும் என்றாலும் இதை பத்திரப்படுத்தி வைப்பதற்கான -20 டிகிரி குளிரூட்டப்பட்ட வசதிகள் நம்மிடம் இல்லாதது ஒரு பிரச்னை. மற்ற தடுப்பூசிகளை -2 முதல் -8 டிகிரி உறைநிலையில் வைத்தே பாதுகாத்துவிட முடியும். மிக விரைவில் எம்ஆர்என்ஏ வகையைச் சேர்ந்த மாடர்னா தடுப்பூசி நமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/i-took-pfizer-vaccine-as-first-dose-now-shall-i-took-any-other-vaccine-as-second-dose

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக