Ad

வெள்ளி, 16 ஜூலை, 2021

க்ரைம் டேப்ஸ்: தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கொலை; ஒரே கைரேகை! -துப்பு துலங்கியது எப்படி?| பகுதி 2

கடந்த பாகத்தில் லாரி டிரைவர் சத்யா சிறையில் சக கைதியிடம் தன் வீரபராக்கிரமங்களை பற்றி சொல்லி மாட்டிக் கொண்டதை சொல்லி இருந்தேன். ஆனால் அவன் சொன்ன வார்த்தையை மட்டும் நம்பி அவனை ஜோதிமணி வழக்கில் கைது செய்திருக்க முடியுமா?

கான்ஸ்டபிள் ஜோதிமணி வழக்கில் அவரது நண்பர் ஜெயபாலை கைது செய்வதற்கு முன்பே போலீஸ்க்கு மிகப்பெரிய சந்தேகம் ஒன்று இருந்தது. ஜோதிமணி உடலில் இருந்த கைரேகைதான் அவை. ஜெயபால் கொலை செய்திருக்க முடியும் என்று செல்போன் உரையாடல்கள் மற்றும் சந்தர்ப்ப சாட்சிகளை வைத்து போலீஸ் முடிவு செய்து, அவரை கைதும் செய்திருந்தார்கள். ஆனால் இறந்து கிடந்த ஜோதிமணி உடை மற்றும் உடம்பில் இருந்த கைரேகை, ஜெயபாலின் கைரேகையுடன் ஒத்துப் போகவில்லை.

சிறையில் இருக்கும் சத்யா, ஜோதிமணியை நான்தான் கொலை செய்தேன் என்று வாய் சவடால் விட்டதை அடுத்து அந்த வழக்கை விசாரித்து வந்த காவல் துறை அதிகாரி புத்திசாலித்தனமாக ஒரு காரியத்தை செய்தார்.

ஜோதி உடலில் இருந்த காயங்கள்

ஜோதி உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட கைரேகையை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தார். இந்த ரேகைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஏதேனும் உங்கள் பகுதியில் இருந்தால் உடனே தகவல் தரவும் என்ற செய்தியையும் அதனுடன் அனுப்பி வைத்துவிட்டு பதிலுக்காக காத்திருந்தார்.

க்ரைம்

வழக்கமாக குற்றவாளிகளை தேடிப் பிடித்து கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இந்த வழக்கில் குற்றவாளி ஏற்கெனவே சிலையில் இருக்கிறான். அப்படியென்றால் அவன் முதல் முறை குற்றவாளியாக இருக்க வாய்ப்பு இல்லை. ஏற்கெனவே சிலபல சம்பவங்கள் செய்திருக்க வேண்டும் என்று அந்த அதிகாரி முடிவு செய்துதான் கைரேகையை அனுப்பி வைத்தார்.

கைரேகையை அனுப்பிய சிலமணித் துளிகளில் அவருக்கு அதிர்ச்சிகரமான ஒரு செய்தி வந்து சேர்ந்தது. காட்டுப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் இதே கைரேகை பதிவாகி இருப்பதாக பதில் வந்தது. அந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது அந்த அதிகாரியின் பல்ஸை எகிற வைத்தது.

அதே போல் கொலை செய்யப்பட்ட இன்னொரு பெண்ணின் உடம்பிலும் இதே கைரேகை பதிவாகி இருப்பதாக மற்றொரு காவல் நிலையத்தில் இருந்து வந்து சேர்ந்தது. அது அந்த அதிகாரி நிமிர்ந்து உட்கார வைத்தது.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் தொழிலாளி. நள்ளிரவு நேரங்களில் தேசிய நெடுங்சாலையில் வரும் லாரி டிரைவர்கள்தான் இவரின் கஸ்டமர்கள். ஆக, சத்யா ஒரு லாரி டிரைவர் என்பது இந்த வழக்கில் கச்சிதமாகப் பொருந்திப் போனது.

க்ரைம்

ஆடு மேய்க்கும் சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்ததும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் தான்! சத்யாவின் பயண வழியில்தான் இந்தக் கொலையும் நடந்திருக்கிறது. அந்த அதிகாரி தானும் சரியான பாதையில் போய்க் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

கான்ஸ்டபிள் ஜோதிமணி கொலையோடு இவ்விரு கொலைகளையும் சத்யா செய்திருக்கிறான் என்ற முடிவு செய்தார். அப்போது அந்த அதிகாரிக்கு ஒரு மின்னல் போல ஒரு யோசனை உதித்தது. சத்யா தமிழ்நாடு கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களுக்கு இடையேதான் லாரி ஓட்டிக் கொண்டிருந்தான். இவ்விரு மாநில காவல்துறைக்கும் ஜோதிமணி உடம்பில் கைப்பற்றப்பட்ட கைரேகை மாதிரிகளை அனுப்பி வைத்தார்.

ஒரே கைரேகை

சில மணி நேரங்களில் பேக்ஸ் வரத் தொடங்கியன. இந்த மாநில எல்லைகளில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட பாலியல் தொழிலாளிகள், ஆடு மாடு மேய்க்கும் பெண்களின் உடல்களிலும் இதே கைரேகைதான் பதிவாகி இருந்திருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த வழக்கிலும் கொலையாளி சிக்கவே இல்லை. சத்யா தொடர்ந்து லாரியில் பயணம் செய்து கொண்டிருந்ததால் போலீஸால் அவனை நெருங்க முடியாமல் போய்விட்டது. சத்யா சிக்காமல் இருந்ததற்கு இது மட்டும் காரணம் அல்ல. கொலை செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் பாலியல் தொழிலாளிகள் என்பதால் போலீஸார் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அந்த உயிர்களுக்கு அவ்வளவுதான் மதிப்பு போலும். அதே போல மாடு மேய்க்கும் பெண்களும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களே என்பதால் இவர்களின் மரணங்கள் காவல் துறையினரின் மனங்களை அசைத்துப் பார்க்கத் தவறிவிட்டது.

க்ரைம்

ஜோதிமணி வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த காவல் அதிகாரியின் டேபிளில் பேக்ஸில் வந்த வழக்கு விவரங்கள் குவிந்து கிடைந்தன. அத்தனையும் கொலை வழக்குகள். பெரும்பாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள். மாநிலங்கள் வேறு, கொலை நடந்த இடங்கள் வேறு, கொலையான பெண்களில் யாருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் அனைத்தையும் இணைக்கும் ஒரே புள்ளி அந்தப் பெண்களில் உடலில் இருந்த சத்யாவின் கைரேகைதான்.

சத்யா சாதாரண கொலைகாரன் அல்ல சைக்கோ கில்லர் என்பதை போலீஸ் உணர்ந்தபோது, சத்யாவால் தங்களுடைய இரவுகள் பல மாதங்களுக்கு தூங்கா இரவுகளாக இருக்கப் போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இதே சத்யாவால் காவல்துறையை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் தற்கொலை செய்யப் போகிறார் என்பதையும் யாரும் யூகித்திருக்க மாட்டார்கள்

க்ரைம் டேப்ஸ் தொடரும்...


பகுதி 1க்கு செல்ல...

Also Read: க்ரைம் டேப்ஸ்: 50 கொலை, பாலியல் வன்கொடுமை; தமிழகத்தை உலுக்கிய பரபரப்பு சம்பவம் | பகுதி 1



source https://www.vikatan.com/news/crime/murder-in-different-states-but-the-finger-prints-are-same-crime-tapes-series-part-two

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக