Ad

திங்கள், 19 ஜூலை, 2021

புத்தம் புது காலை : குழந்தைகளை பாதிக்கும் Club foot... கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை!

ஐந்தாவது மாத ஸ்கேனிங் முடிந்து ரிசல்ட்டைப் பார்த்ததிலிருந்தே சிந்துவின் முகம் வாடித்தான் இருந்தது. பிறக்கப்போகும் குழந்தைக்கு கால் நார்மலாக இருக்காது, கொஞ்சம் வளைந்துதான் இருக்கும் என்று சொன்னால் எந்தத் தாய்தான் சந்தோஷமாக இருப்பாள்?

வழக்கமாக ஐந்தாவது மாதத்தில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு, குறைபாடுகள் இல்லாமல் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள எல்லாத் தாய்மார்களுக்கும் மேற்கொள்ளப்படும் டார்கெட் ஸ்கேன்தான் சிந்துவிற்கும் செய்திருந்தோம். அப்போது சிந்துவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு, வலது காலில் 'Club Foot' (CTEV Congenital Talipes Equinovarus) எனப்படும் சிறிய வளர்ச்சிக் குறைபாடு இருப்பது தெரிய வந்தது.

பொதுவாக குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காத இதுபோன்ற குறைபாடுகள் (non lethal fetal anomaly) இருக்கும் சமயங்களில், குழந்தையின் நிலைமையைக் குறித்து விளக்கிச் சொல்வது எங்கள் வழக்கம் என்பதால் சிந்துவையும், அவரது கணவரையும் கவுன்சிலிங் அறைக்கு அழைத்து வரச் சொல்லியிருந்தேன்.

Jon Rahm - Club foot பிரச்னையில் இருந்து மீண்டுவந்த கோல்ஃப் வீரர்

மகப்பேறு மருத்துவர் மட்டுமே இதனை விளக்கிச் சொல்வதைக் காட்டிலும், அதற்கான சிறப்பு மருத்துவர்கள் சொன்னால் அவர்களுக்கு இன்னும் நம்பிக்கை வரலாம் என்பதால் எலும்புமுறிவு மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் இருவரையும் கூட அழைத்துக்கொண்டேன்.

வருத்தமான முகங்களுடன் தலைகுனிந்து அமர்ந்திருந்த பெற்றோர் இருவரிடமும், நான் தான் முதலில் பேச ஆரம்பித்தேன். "சிந்து.. இந்த டார்கெட் ஸ்கேனிங் கர்ப்ப காலத்தில ரொம்பவும் முக்கியமான ஸ்கேனிங். இருபது வாரங்களில குழந்தைக்கு குறைபாடுகள் எதுவும் இருக்கா, அப்படி குறைபாடுகள் இருந்தா அதை சரிபண்ண முடியுமா, முடியாதான்னு பாக்கறதுக்கான ஸ்கேனிங் இது. இப்ப உன்னோட குழந்தைக்கு ஒரு சின்ன பிரச்னை இருக்குன்னாலும் இதுல பயப்பட ஒன்னுமில்ல. குழந்தையோட வலது பாதம் கொஞ்சம் உள்பக்கமா திரும்பின மாதிரி இருக்கு. இதை மருத்துவத்தில, 'க்ளப் ஃபுட்’னு சொல்லுவோம்.

பொதுவா அம்மா வயித்துல வளர்ற குழந்தையோட பொசிஷன், குழந்தையை சுத்தியிருக்கற பனிக்குட நீரோட அளவு இதெல்லாம் பொறுத்து, பிறக்கற குழந்தைகள்ல ஆயிரத்துல ஒரு குழந்தைக்கு இது வரலாம். ஆனாலும் இதை சரி பண்ணிடலாம்" என்று சிந்துவிடம் நான் சொல்லி முடித்ததும் சிந்துவின் கணவரைப் பார்த்து பேசத் துவங்கினார் ஆர்த்தோ டாக்டர்.

"மேடம் சொன்னது போல குழந்தையோட பொசிஷன் மட்டுமில்லாம, கருப்பைல வளர்ற குழந்தையோட எலும்புகள், மூட்டுகள், தசைநார்களோட வளர்ச்சியில் ஏதாவது குறைபாடுகள் இருக்கும்போதும் இந்த க்ளப் ஃபுட் ஏற்படலாம் சார். அதிலயும் இதோ இந்த அக்கிலிஸ் தசைநார்களோட (Tendo Achilles) வளர்ச்சிக் குறைபாடு இதுக்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கவும் வாய்ப்பிருக்கு" என்று பேப்பரில் வரைந்து காட்டி விளக்கிய ஆர்த்தோ மருத்துவர் தொடர்ந்தார்.

"பொதுவா இந்த க்ளப் ஃபுட், ஆண் குழந்தைகள்ல தான் அதிகம் காணப்படுது. ஆனாலும் பயப்பட வேண்டியதில்லை. நார்மலா பிசியோதெரபி, பிரத்தியேக காலணிகள் மூலமாவே இதை குணப்படுத்தி எல்லாக் குழந்தைகள் போலவே ஓடியாட வெச்சிடலாம். ரொம்ப தேவைப்பட்டால் மட்டும் சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும். ஆனால், அது நம்ம குழந்தைக்கு வேண்டியிருக்காதுன்னு தோணுது!" என்றார்.

மாதிரிப் படம்

அவ்வளவு சொல்லியும் சிந்து கொஞ்சமும் நம்பிக்கை அடைந்ததாகவே தெரியவில்லை. இப்போது குழந்தைகள் டாக்டர் அவளை சமாதானப்படுத்தும் வகையில், "ஸ்கேட்டிங்ல ஒலிம்பிக் கோல்ட் மெடலிஸ்ட்டான ஜப்பானோட கிறிஸ்டி யமாகுச்சி, இங்கிலாந்தோட கால்பந்து விளையாட்டு வீரர் ஸ்டீவன் ஜெரார்ட், பெண்கள் ஃபுட்பால் ப்ளேயர் மியா ஹாம், ஏன் ரோம் மன்னர் கிளாடியஸ்னு நிறைய பேருக்கு பிறக்கும்போது இதே பிரச்னை இருந்திருக்கு. ஆனா, அவங்க எல்லாரும் எவ்வளவு சாதிச்சிருக்காங்க. ஏன்... நம்ம நாட்டுல ஒருநாளைக்கு 150 குழந்தைகள் வீதம் வருஷத்தில கிட்டத்தட்ட 50,000 குழந்தைகள் இப்படி பிறக்கிறாங்களாம். ஆனாலும், பெரும்பாலும் எல்லாரும் முழுமையா குணமடைஞ்சுடறாங்க தெரியுமா சிந்து?" என்றார்.

குழந்தைகள் மருத்துவர் பேசிய பிறகு சற்றே சமாதானம் அடைந்தது போல இருந்தாள் சிந்து. மற்ற பரிசோதனைகள் அனைத்தையும் முடித்தபின் புறப்பட்டாள். தொடர்ந்து மாதாந்திர செக்அப், எட்டாவது மாத வளர்ச்சி ஸ்கேனிங், இரத்தப் பரிசோதனைகள் என எல்லாமே நார்மலாக இருந்தாலும், சிந்துவின் கேள்விகள் எல்லாமே அந்த க்ளப் ஃபுட் பற்றித்தான் இருக்கும். எத்தனை நம்பிக்கையளித்தாலும், தாயல்லவா?!

பிரசவத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும்கூட, குழந்தையின் காலைப் பற்றியும், எதிர்காலத்தில் குழந்தையின் நடக்கும் திறன் பற்றியும் மட்டுமே சிந்து திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தாள். இயன்றவரை நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தோம்.

மாதிரி படம்

சுகப்பிரசவமாக மூன்று கிலோ எடையுடன் ஆண் குழந்தையை சிந்து பிரசவித்தாள். பிறந்த குழந்தையை உடனிருந்த குழந்தை மருத்துவர் முழுமையாக பரிசோதித்த பிறகு, "குழந்தை நல்லா இருக்குடா. இந்த க்ளப் ஃபுட் சின்ன குறைபாடு தான். முழுசா சரியாயிடும் பாரு" என்று உறுதியுடன் கூறினாலும், "குழந்தை பிறக்கும்போது அதெல்லாம் ஒண்ணுமில்லைனு ஆயிடும்னு நம்பினேன் டாக்டர்!" என்று வருத்தத்துடன் புன்னகைத்தாள் சிந்து.

ஆனால், அன்றிலிருந்து நாங்கள் முற்றிலும் வேறு ஒரு சிந்துவைப் பார்த்தோம். குழந்தை பிறந்த முதல் வாரத்திலிருந்து, manipulation and casting முறையில், சிகிச்சை தொடங்கப்பட, குழந்தையின் தொடையிலிருந்து பாதம் வரை மாவுகட்டு போடப்பட்டது. வயிற்றில் குழந்தையை மட்டும் சுமந்த அவள், இப்போது கையில் குழந்தையுடன் அந்த மாவுகட்டின் கனத்தையும் சேர்த்து சுமக்க ஆரம்பித்தாள். ஆனால் இப்போது முழு நம்பிக்கையுடன்….

ஏழு அல்லது எட்டு முறை வரை மாவுக்கட்டுகள் மாற்றப்பட்ட போதும் எங்கள் எல்லோரையும் விட பாசிட்டிவாக இருந்தது, அந்தத் தாய்தான். ஒவ்வொரு முறை கட்டு பிரிக்கப்படும்போதும், "போனமுறை விட இம்ப்ரூவ்மென்ட் இருக்கு பாருங்க. சீக்கிரம் சரியாயிடும்!" என்று ஆர்த்தோ டாக்டர் கூறும் முன்னரே சிந்துவின் குரல்தான் கேட்கும்.

எதிர்பார்த்தபடியே குழந்தையின் கால் வளைவு படிப்படியாக சரியாகி வர, எட்டாவது முறையுடன் கனமான மாவுக்கட்டு நீக்கப்பட்டு, குழந்தைக்கான சிறப்புக் காலணியை பரிந்துரைத்தார் ஆர்த்தோ டாக்டர். குழந்தை ரோஷனின் முதல் பிறந்த நாளன்று கூட, அந்த சிறப்பு பூட்ஸூடன் காணப்பட்டான் ரோஷன். சென்ற வாரம் முழுமையாக குணமடைந்த ரோஷன், தனது பதினெட்டாவது மாதத்தில் தனியாக நடக்கும் வீடியோவை சிந்து, "உங்க எல்லாருக்கும் எங்களோட ஸ்பெஷல் தேங்க்ஸ் மேடம்... இன்னிக்குதான் நாங்க குட்டியோட பர்த்டேவை செலிபிரேட் பண்றோம்" என்று ஆர்டினுடன் எங்களுக்குப் பகிர்ந்துள்ளாள்.

உண்மையில், எங்கள் எல்லோருடைய முயற்சியையும் விட, அந்தத் தாயின் அன்பும், அக்கறையும், விடாமுயற்சியும் தான் அந்தக் குழந்தையை விரைவிலேயே நடக்க வைத்திருக்கிறது. அதை அவளிடம் சொன்னபோது அவள் முகம் அன்பால் மலர்ந்ததை அவள் குரலிலேயே உணரமுடிந்தது.

சிந்து எனும் பெண் நமக்களிக்கும் கற்பித்தல் இதுவே..

Keep Calm… It is just Clubfoot!

யோசித்துப் பார்தோமேயானால், எந்தவொரு பிரச்னைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும். அது பிறந்த குழந்தையின் club footடாக இருந்தாலும், உலகையே அச்சுறுத்தும் coronaவாக இருந்தாலும் தீர்வுகள் நிச்சயம் கிடைக்கப்பெறும். அதற்கான பொறுமையும், எதிர்கொள்ளும் மன உறுதியும் நம்மிடம் இருந்தால் மட்டுமே போதும்!



source https://www.vikatan.com/health/healthy/what-we-should-know-about-club-foot-defect-in-children

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக