Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

`கோவிட் காலத்தில் குழந்தைகளுக்கு மற்ற தடுப்பூசிகளைத் தவிர்க்கக்கூடாது!' - எச்சரிக்கும் மருத்துவர்

கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தலாமா என நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான முதல்கட்டப் பரிசோதனைகளும் ஏற்கெனவே தொடங்கி நடந்துவருகின்றன. இந்நிலையில், பல பெற்றோர்களும் கொரோனா சமயம் என்பதால் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய வழக்கமான பிற தடுப்பூசிகளை வழங்காமல் விடுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

தடுப்பூசி அட்டவணை

Also Read: மூன்றாவது அலை... குழந்தைகளுக்கு பாதிப்பா?

குழந்தைகளுக்கு வழக்கமாக இடப்படும் தடுப்பூசிகள் மிக முக்கியமானவை. தடுப்பூசிகளையும் தடுப்பு மருந்துகளையும் முறையாகப் பயன்படுத்துவதால் ஏறக்குறைய 27 வகை நோய்களைத் தடுக்க முடிகிறது. போலியோ, தட்டம்மை, ருபெல்லா, பிளேக், காலரா போன்ற நோய்கள் குழந்தைகளுக்குப் பரவாமல் தடுக்க அந்தந்த வயதில் அட்டவணையைப் பின்பற்றித் தடுப்பூசிகள் போடப்படுவது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா சூழலில் தேவையற்ற அச்சம் காரணமாக சில பெற்றோர்கள் இந்தத் தடுப்பூசிகளைத் தவிர்த்து விடுகின்றனர்.

இதுகுறித்து, குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன் பேசுகையில், ``கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற கணிப்பு சரிதான். அது கணிப்புதானே தவிர உறுதியான தகவல் அல்ல. குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடர்வதால், பள்ளிக்கூடங்கள் சென்று அதன் மூலம் கொரோனா பரவக்கூடிய ஆபத்து குறைவே.

தடுப்பூசி அட்டவணை

Also Read: கோவிட் மூன்றாவது அலை... எப்போது வரும், எப்படி வரும்? பதில் சொல்கிறார் நிபுணர்...

அப்படி இருக்கும் பட்சத்தில், பெரியவர்கள் வெளியே செல்வதால் அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவும் வாய்ப்பே அதிகம். பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது படிக்கும் குழந்தைகளென்றால் கூடுதல் அக்கறை காட்டுவதாக நினைத்து அவர்களை டியூஷனுக்காக வெளியே அனுப்புவதும் நடக்கிறது.

குழந்தைகளுக்குப் பிற நோய்கள் வராமல் தடுப்பதற்காக ஏற்கெனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் போடப்பட்டு வந்த தடுப்பூசிகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. முன்பு பின்பற்றப்பட்டு வந்த அட்டவணையின் அடிப்படையிலேயே குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போடுவதைத் தொடரலாம்.

குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன்

மற்ற நோய்களுக்கான தடுப்பூசிகளைத் தவிர்ப்பதால் அந்த நோய்கள் தாக்குவதற்கான அபாயம் இருக்கின்றன. ஆனால், மற்ற நோய்களுக்கான தடுப்பூசிகளைத் தவிர்ப்பதால் புதிதாக அபாயம் உருவாகும் என்பது போன்ற செய்திகள் வீணான பயத்தின் வெளிப்பாடே. குழந்தைகளின் படிப்பு முக்கியம்தான். அதே வேளை அவர்களின் உயிரும் ஆரோக்கியமும் அதைவிட முக்கியம்" என அறிவுறுத்துகிறார் குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-warns-that-parents-should-not-skip-regular-vaccines-during-covid-pandemic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக