Ad

திங்கள், 26 ஜூலை, 2021

புத்தம் புது காலை : சாலை விபத்துகளும், குட் சமாரிட்டன் சட்டமும்... நாம் செய்ய வேண்டியது என்ன?

ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு, அது ஒரு ஞாயிற்றுக்கிழமை... அன்று காரை எடுத்தபோது அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. சற்று தொலைவிலிருந்த மருத்துவமனையிலிருந்து ஒரு அவசர அறுவை சிகிச்சைக்கு உதவ எனக்கு அழைப்பு வந்ததால், மதியம் இரண்டு மணியளவில் காரில் போய்க் கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை டிரைவர் இல்லை என்பதால் செல்ஃப் டிரைவிங்... அப்போது நிகழ்ந்தது அந்த விபத்து!


எனது காருக்கு சுமார் இருபதடி முன்னால், எதிரெதிராக பைக்கில் வந்த இருவரும் மோதிக்கொண்டு சாலையின் நடுவே கீழே விழுந்தனர். கண்முன்னே நடந்த அந்த விபத்தில் ஒருகணம் பதைபதைத்துப் போய், உடனடியாக சுதாரித்துக் கொண்டு எனது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினேன். காரிலிருந்து இறங்கி, வேகமாக ஓடிச்சென்று, இரண்டு பேரையும் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கை மற்றும் காலில் பலத்த அடி... மற்றவருக்கு தலையில் அடி என்பது தெரிந்தது.சாலையில் அப்போது வேறு யாரும் உதவிக்கு இல்லை.

இருவருமே வலியில் கதறிக் கொண்டிருக்க, இருவரிடமும் அவர்களது பெயர் மற்றும் விலாசத்தைக் கேட்டதில், இருவரும் அருகாமை ஊர்க்காரர்கள் என்று தெரிந்தது. உடனடியாக தனியார் ஆம்புலென்ஸுக்கு (108 இல்லாத காலம்) ஃபோன் செய்து விவரத்தைச் சொல்லி, விபத்து நடந்த இடத்திற்கு சீக்கிரமாக வருமாறு சொல்லிவிட்டு, காரிலிருந்த ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் உதவியுடன் தலையில் அடிபட்டவருக்கு முதலுதவி அளிக்க ஆரம்பித்தேன்.

விபத்து

அதேசமயம், அறுவை சிகிச்சைக்கு நான் செல்லவேண்டிய மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர, நிலைமையைச் சொல்லி, "சீக்கிரம் வந்துடறேன்" என்று பேசிக் கொண்டிருந்தேன். அதற்குள் சாலையில் போனவர்கள், வந்தவர்கள் திடீரென்று கூட்டம் கூடினர். அங்கு நின்றிருந்த கார் என்னுடையது... அதை ஓட்டி வந்தது ஒரு பெண் என்று புரிந்ததும், நான் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒருவர், "என்ன... கார்ல வந்து இடிச்சுட்டயா... இப்படி இரண்டு பேரும் விழுந்து கிடக்க, அடிச்சுட்டு அப்படியே ஓடிப்போகலாம்னு பாக்கறியா?" என்று நேரடியாக ஒருமையில் பேச ஆரம்பித்தார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது.


"எனக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லைங்க. நான் ஒரு டாக்டர்... இவங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் வண்டியை நிறுத்தினேன்!" என்றேன்.


"டாக்டரா... அப்பறம் என்ன... உன் கார்லயே ஏத்திட்டு ஹாஸ்பிட்டல் போகலாம் தானே?" என்று இன்னொருவர் மிரட்டல் தொனியில் ஆரம்பிக்க..."அதானே.. தூக்குடா... ரெண்டு பேரையும் அவங்க கார்லயே ஏத்தலாம்" என்றார் மற்றொருவர்.

"அவருக்கு கால்ல அடிபட்டிருக்கு.. அந்தக் காலை மடக்கக் கூடாதுங்க.. அதனால தான் ஆம்புலன்ஸ்.' என்று நான் கத்திச் சொன்னதை யாரும் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

ஒரு பெண், அதிலும் ஒரு மருத்துவர், அவர் எதற்காக சொல்கிறார் என்பதெல்லாம் கேட்கும் மனநிலை அவர்களிடத்தில் சிறிது கூட இல்லை. கூட்டமும், கூச்சலும் கூடிக்கொண்டே இருந்தது. அடிவாங்காத குறை ஒன்றுதான். எதற்காக காரை நிறுத்தினேன் என்று வருத்தமாகக் கூட இருந்தது.

நல்லவேளையாக அந்த தனியார் ஆம்புலன்ஸ் அதற்குள் அங்கு வந்துசேர, ஆம்புலன்ஸ டிரைவரிடம் விவரங்களை சொல்லிவிட்டு, சட்டென்று அங்கிருந்து புறப்பட்டு, எனது அடுத்த பணிக்குச் சென்றேன். இத்தனையும் நடந்தது வெறும் அரை மணிநேரத்தில்.
ஆனால், அப்போது நடந்த நிகழ்வுகளால் என்னால் இயல்பாக காரை ஓட்டக்கூட முடியவில்லை. வருத்தத்துடன் விஷயத்தைப் பகிர்ந்தபோது மருத்துவமனையில் நண்பர்கள், வீட்டில் கணவர், அம்மா, அப்பா என்று அனைவரும் என்னைத்தான் திட்டினார்கள்.

"யாரும் உன்னை ஹெல்ப் பண்ண வேண்டாம்னு சொல்லல. ஆனா தேவையில்லாம, நீயா போய் சிக்கல்ல மாட்டிக்காதே. அவ்வளவு தான்" என்ற சாராம்சத்தோடு அந்த நிகழ்வு அன்று நிறைந்தது.

விபத்து

ஆனால், பின்னர் வந்த தகவல்களால் எனது வருத்தம் மறைந்தே போனது. "அடிபட்ட இருவரில் தலையில் அடிபட்டவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவின் காரணமாக இறக்க வாய்ப்பிருந்து சரியான சமயத்தில் மருத்துவமனைக்கு சென்றதால், அவசர சிகிச்சையின் உதவியால் பிழைத்திருக்கிறார். மற்றவருக்கு காலில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக இருக்கிறார். அந்த இருவரின் குடும்பத்தினரோடு, நாங்களும் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறோம்" என்று மருத்துவமனையின் தலைமை மருத்துவர் என்னை அழைத்துச் சொன்னதோடு, "Golden hour always matters. Thank you Doctor" என்று அவர் சொன்னது உண்மையிலேயே மனநிறைவாக இருந்தது.


கோல்டன் ஹவர்!

ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் இந்த கோல்டன் ஹவர் என்ற முதல் ஒரு மணிநேரம் தான், வாழ்விற்கும் சாவிற்குமான இடைவெளியாக பல சமயங்களில் உள்ளது.

"You can't afford to be slow in an Emergency" என்பார்கள். அதாவது தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தானது என்பதால், அடிபட்ட முதல் மணிநேரத்தை 'கோல்டன் ஹவர்' என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள்.

முதலாம் உலகப்போரின் போது பிரெஞ்சு போர் வீரர்களின் உயிர்காத்த மருத்துவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த 'கோல்டன் ஹவர்' கான்செப்ட், விபத்துகள் மற்றும் போர்முனைக் காயங்களில் மட்டுமன்றி ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், விஷக்கடி, தற்கொலை முயற்சி ஆகிய அனைத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. இதுபோன்ற சூழல்களில் உயிர்காக்கும் சிகிச்சைகள், முதல் மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்படும் போது, மரணங்களின் எண்ணிக்கை 22 % வரை குறைகிறது என்கிறது மருத்துவ அறிவியல்.


எல்லாம் சரி... அன்று அந்த நேரத்தில் எனக்கு நடந்ததை விடுங்கள். விபத்தில் அடிபட்ட யாரோ ஒருவருக்கு உதவப்போய், தேவையில்லாமல் போலீஸ் ஸ்டேஷன், விசாரணைகள், கோர்ட், கேஸ் என்றெல்லாம் பின்னர் அலைய வேண்டி வருமே... அதற்கு என்ன செய்வது? இந்த பயத்தினாலேயே பலரும் அடிபட்டவர்களுக்கு உதவிட பயப்படுகிறார்களே, அதற்கு என்ன செய்வது... என்ற கேள்விகள் எழுகிறதல்லவா?


உண்மைதான். நானே மருத்துவராக இல்லாமல் இருந்திருந்தால், எனக்கும் அன்று அந்தத் தொல்லைகள் எல்லாம் சேர்ந்து வந்திருக்கும். ஆனால், உண்மையில் இப்போது நிலைமை அப்படியில்லை. விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவுபவர்களைத் தொல்லைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே வந்திருக்கிறது 'குட் சமாரிட்டன் சட்டம்.'


மார்ச் மாதம் 2016-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், விபத்தில் படுகாயமுற்றவர்களின் உயிர்காக்கவும், அவர்களுக்கு உதவுபவர்களை ஊக்கப்படுத்தவும் உதவும் முக்கியமான சட்டமாகும்.
இதன்படி விபத்தில் அல்லது மற்ற அசம்பாவிதங்களில் உதவும் குட் சமாரிட்டன்களை விசாரணைகளில் போலீஸ் இணைக்கக்கூடாது.

* இவர்கள் தங்களது அடையாளத்தை போலீசிற்கும், மருத்துவமனைக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை.

* இந்த குட் சமாரிட்டன்களுக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

* முக்கியமாக, மருத்துவமனைகள் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை மறுக்கக் கூடாது. முதலுதவிக்கு கட்டணமும் பெறக்கூடாது.

* சாட்சியளிக்க தாமாகவே முன்வந்தால் ஒழிய, இந்த குட் சமாரிட்டன்களை கட்டாயப்படுத்தக் கூடாது.

- என்று கூறும் இந்த குட் சமாரிட்டன் சட்டம், 2019-ம் ஆண்டு முதல் மோட்டார் வாகன சட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகளவில் மிக அதிகமாக, நமது நாட்டில் ஒருநாளில் மட்டுமே 1,317 சாலை விபத்துகளும், அதில் 413 மரணங்களும் நிகழ்வதாகச் சொல்கிறது புள்ளிவிவரங்கள். அதாவது ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும் ஐம்பதிற்கும் அதிகமான விபத்துகள், அதில் உத்தேசமாக இருபது மரணங்கள் எனும்போது, இவற்றைத் தடுக்கும் முறைகளை அரசு மேற்கொண்டு தான் வருகின்றன.


அரசின் வழிமுறைகள் தடுப்பதற்கு என்றிருக்க, நடந்த விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை சீக்கிரமே மருத்துவமனையில் சேர்ப்பது இன்னும் உயிரிழப்பைக் குறைக்கும் என்பதால், நம் அனைவருக்கும் இந்த கோல்டன் ஹவரின் முக்கியத்துவமும், அப்படி உதவுபவர்களுக்கு உதவும் 'குட் சமாரிட்டன் சட்டம்' பற்றிய தகவலும் நிச்சயம் தெரிந்திருக்கவும் வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு உயிரும் மிக முக்கியமானது!


பின்குறிப்பு : பதினைந்து வருடங்களாக, ஒருவர் அவருடைய பிறந்த நாளன்று எனக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்பிக் கொண்டிருக்கிறார். அன்றைய சாலை விபத்தின்போது, கோல்டன் ஹவரில் நான் அவருக்கு உதவியதற்கு நன்றி கூறும் விதமாக. இன்று அவரது வாழ்த்து அட்டை கிடைக்கப் பெற்றவுடன் தான், அனைவருக்குமான இந்த 'கோல்டன் ஹவர் - குட் சமாரிட்டன் சட்டம்' பதிவு!



source https://www.vikatan.com/news/general-news/what-we-should-know-about-good-samaritan-law-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக