Ad

திங்கள், 26 ஜூலை, 2021

கேரளா: குறையாத கொரோனா.. 16 நாளில் 50-ஐ கடந்த ஜிகா வைரஸ் பாதிப்பு!

நாட்டில் முதன் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரள மாநிலத்தில்தான். ஆரம்பத்தில் இருந்தே `பிரேக் தி செயின்’ உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து வந்தது. ஆனாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அங்கு அதிகரித்து வந்தது. இப்போதும் கேரள மாநிலத்தில் இரண்டாவது அலை முடிந்தபாடில்லை. தினமும் 10,000 முதல் 17,000 வரை ஏற்ற இறக்கத்துடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இப்போதைய கொரோனா பாதிப்புகள் இரண்டாவது அலையின் நீட்சியா, அல்லது மூன்றாவது அலை தொடக்கமா என்ற குழப்பம் மருத்துவர்களிடையே இருந்து வருகிறது. தினமும் கொரோனா புதிய நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கை, மருத்துவத்துறைக்கு ஆட்டம் காட்டிவருகிறது.

கொரோனா சிகிச்சை

நேற்று முன்தினம் (25-ம் தேதி) கேரளத்தில் 17,466 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 15,247 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். நேற்று புதிதாக 11,586 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 14,912 பேர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பினர். கேரளத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 1,36,814 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 4,33,215 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 31,29,628 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா காரணமாக 16,170 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

மேலும் கேரள தமிழக எல்லையான பாறசாலை பகுதியில் கடந்த 9-ம் தேதி ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. ஏடிஸ் கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் பாதிப்பு மெல்ல திருவனந்தபுரம் மாவட்டத்தை தொடர்ந்து கொல்லம் மாவட்டத்தில் பரவி வருகிறது. சுமார் 16 தினங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது. நேற்று மூன்றுபேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து கேரள மாநிலத்தில் மொத்த ஜிகா வைரஸ் பாதிப்பு 51 ஆக உயர்ந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

வீணா ஜார்ஜ்

கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் நோய்த்தொற்றுகளால் கேரளம் திணறி வருகிறது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "கேரளத்திற்கு மத்திய அரசு 1.66 கோடி தடுப்பூசி வழங்கியது. 45 வயதுக்கு மேல் உள்ள 76 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் வாக்ஸின் போடப்பட்டுள்ளது. 35 சதவீதம்பேருக்கு இரண்டாம் டோஸ் வாக்ஸின் போடப்பட்டுள்ளது. வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஜிகா வைரஸுக்கு எதிராக அனைத்து நடவடிகைகளிலும் ஈடுபட்டுள்ளோம். அடுத்த மாதம் 60 லட்சம் கொரோனா தடுப்பூசி வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்" என்றார்.

Also Read: கொரோனா பேரிடரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2.3 கோடி குழந்தைகள்! - தமிழகத்தின் நிலை என்ன?



source https://www.vikatan.com/news/india/kerala-is-suffering-from-both-corona-and-zika-viruses

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக