Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

கரூர்: 'கோபித்துக்கொண்டு சென்ற குழந்தைகள்; ரயிலேறும் நொடியில் மீட்ட போலீஸ்!' நடந்தது என்ன?

பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள் நான்கு பேர், வாட்ஸ்ஆப் உதவியுடன் சில மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம், அந்த குழந்தைகளின் பெற்றோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தைகள்

கரூர் மாவட்டம், வெங்கமேட்டில் உள்ள ரொட்டிகடை தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் இவரது மனைவி ரோகிணி. இந்த தம்பதிக்கு சிவராஜ், 4- வது படிக்கும் சிவானி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதேபோல், அதே தெருவைச் சேர்ந்த சண்முகராஜா, கார்த்திகா தம்பதிக்கு, ஆறாம் வகுப்பு படிக்கும் முகுந்தன் மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தேஜன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நான்கு பேரும், தங்கள் பெற்றோர் திட்டியதால் கோபித்துக்கொண்டு மதியம் ஒரு மணி அளவில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். இரண்டு பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை காணாமல் தவித்தனர். அக்கம்பக்கத்தில் உள்ள தெருக்களுக்கெல்லாம் சென்று தேடிய பெற்றோர், வாட்ஸ்அப் மூலம் குழந்தைகளின் புகைப்படத்தைப் பகிர்ந்து, உதவியை நாடினர்.

கரூர் ரயில்வே ஸ்டேஷன்

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை, பலரும் பார்த்தனர். இந்த நிலையில், கரூர் ரயில் நிலையத்தில் காவல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர்களான சக்திவேல், வீரமலை, சேகர், குழந்தைவேல் ஆகியோர் கரூர் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் பெற்றோர் உதவியின்றி ரயில் ஏறுவதற்காக காத்திருந்த நான்கு குழந்தைகளையும் கண்டனர்.

Also Read: கரூர்: 'வேண்டியபடி திமுக ஆட்சி; வேண்டுதலை நிறைவேற்றுகிறேன்!’ - கோயிலில் தற்கொலை செய்துகொண்ட முதியவர்

அதோடு, அந்த நான்கு குழந்தைகளின் புகைப்படங்களையும் வாட்ஸ்அப் குரூப்களில் பார்த்திருந்ததால், அந்தக் குழந்தைகளை அழைத்து விசாரித்தனர். அதற்கு அந்த குழந்தைகள், "பெற்றோர் எங்களைத் திட்டிக்கிட்டே இருக்காங்க. எங்களுக்கு அழுகை அழுகையா வருது. அதனால், பெற்றோருடன் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வந்துட்டோம். ரயில் ஏறி எங்கேயாச்சும் போகலாம்னு இருக்கோம்" என்று கூறியிருக்கிறார்கள். அதை கேட்டு அதிர்ந்த போலீஸார், குழந்தைகளுக்கு அறிவுரை கூறினர். அதோடு, அவர்களை கையோடு பெற்றோரின் வீட்டுக்கு அழைத்து வந்து, 4 பேரையும் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில், இதுகுறித்து போலீஸார், "செல்போன் மூலம் சமூக வலைத்தளத்தின் உதவியால் குழந்தைகள் வீடுதிரும்பியுள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தைகள்

எங்கள் பார்வையில் பட்டதால், ரயில் ஏற இருந்த கடைசி நொடியில் அந்த குழந்தைகளை தடுத்து நிறுத்து, அவர்களின் பெற்றோர்களுடன் ஒப்படைத்துள்ளோம். அதற்கு வாட்ஸ்அப் குரூப்களில் அந்த குழந்தைகளின் புகைப்படங்கள் வேகமாக பரப்பபட்டதும் ஒரு காரணம். அதனால், எங்கள் பார்வையில் புகைப்படங்கள் தெரிந்து, அந்த குழந்தைகளை மீட்க முடிந்தது. செல்போன் சமீபகாலமாக தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதேபோன் செல்போன் இங்கே காணாமல் போன குழந்தைகளை சில மணி நேரத்தில் மீட்க உதவியிருக்கிறது" என்றார்கள்.



source https://www.vikatan.com/news/central/karur-railway-police-found-4-children-and-handed-them-over-to-their-parents

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக