Ad

திங்கள், 12 ஜூலை, 2021

தூத்துக்குடி: கூட்டுறவு சங்கக் கடன்கள்; தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் ஐ.பெரியசாமி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில், வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கடன் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் உள்பட பல அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கடன் வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க புதிய உறுப்பினர்கள் 847 பேருக்கு, ரூபாய் 4 கோடியே 87 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். பின்னர் பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் எவ்வளவு பேர் வந்து கடன் கேட்டாலும் அதை வழங்க வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு வழங்கத் தயாராக உள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், அனைவரும் பயன்பெறும் வகையில் பல்நோக்கு மையமாக மாற்றுவதற்கான திட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கல்விக்கடன், சுய உதவிக்குழு கடன் ஆகியவை அரசால் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது, மங்கிய நிலையில் இருக்கும் சிறு வணிகக் கடன் திட்டம் அதிகரிக்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு எல்லா வகை கடனும் கொடுக்க அரசு தயாராக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.33 கோடிக்கு நகைக்கடன் வழங்கியதாக கூட்டுறவு சங்கப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடந்திருக்ககூடிய முறைகேடுகள் குறித்து வரும் 15-ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என எல்லா மாவட்ட இணைப்பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடன் வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி

’கூட்டுறவு சங்கங்கள்’ மக்கள் சொத்து, அது மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.தமிழகத்தில் எந்தந்தப் பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் கட்ட வேண்டும் அதற்கான நிதி ஆதாரம் என்ன என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. தேவையான பகுதிகளில் கூட்டுறவு மருந்தகங்கள், விவசாய பொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு, விற்பனை நிலையம் அமைக்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-iperiyasamy-says-co-operative-society-loans-discount-notice-will-be-released-soon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக