Ad

திங்கள், 12 ஜூலை, 2021

சபரிமலை: ஜூலை 17 முதல் பக்தர்களுக்கு அனுமதி! ஆன்லைன் புக்கிங் - என்னென்ன கட்டுப்பாடுகள்?

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக நடை திறப்பது வழக்கம். அந்தச் சமயத்தில் நாடுமுழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைச் சென்று தரிசனம் நடத்துவார்கள். அதுபோல தமிழ் மாதம் ஒன்றாம் தேதி ஐந்தாம் தேதி வரை மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்படும். அப்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் நடத்துவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு சமயத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாது 48 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டதோடு பம்பையில் குளிக்க அனுமதி இல்லை, அதற்குப் பதிலாக பம்பை தண்ணீரில் ஷவர் மூலம் குளியல் என்பது போன்ற சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

சபரிமலை பயணம்

அதன்பிறகு பக்தர்கள் கோரிக்கையை ஏற்று தினமும் 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது கொரோனா அதிகரித்த சமயம் என்பதால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட சமயத்தில் ஏப்ரல் 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஏப்ரல் மாதத்தில் தினமும் பத்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் கொரோனா இரண்டாவது அலை தாக்கியதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. ஆடி மாத பூஜைக்களுக்காக வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கிறது. 17-ம் தேதி அதிகாலை முதல் வரும் 21-ம் தேதி இரவுவரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

சபரிமலை கோயில்

தினமும் 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இன்று முதல் (ஜூலை 12) ஆன்லைன் புக்கிங் தொடங்குகிறது. 48 மணி நேரத்துக்குள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் எடுத்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழுடன் வருபவர்களையும் தரிசனத்துக்கு அனுமதிப்பதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது.



source https://www.vikatan.com/spiritual/news/sabarimalai-temple-to-be-open-for-devotees-who-book-through-online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக