'மாம்பழம்' என்றாலே சேலத்தைத்தான் அடையாளப்படுத்துவார்கள். ஆனால், திருச்சிக்கும் மாம்பழத்திற்கும் 100 ஆண்டுகளுக்கும் மேல் நீண்ட நெடிய பந்தம் இருந்து வருகிறது. திருச்சி, மாம்பழச் சாலையில் உள்ள 'தாத்தாச்சாரியார் தோட்ட மாம்பழக் கடை'யைப்பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. இங்கு விளையும் மாம்பழங்கள், குடியரசுத் தலைவர் முதல் தமிழக முதல்வர் வரை.. பலருக்கும் செல்கின்றன என்றால் ஆச்சர்யம்தானே? இந்த மாம்பழச்சாலை, பலரது 'மீட்டிங் ஸ்பார்டாக'வும் இருந்து வருகிறது.
'பழங்களின் அரசன்' மாம்பழம். நம்முன்னோர்கள், 'முக்கனி'களில் இதற்கே முதல் இடம் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவக் குணம் நிறைந்தது, சப்புக்கொட்டி சாப்பிடவைப்பது என மொத்தத்தில் அனைவரையும் சுவையால் மயங்கவைக்கும் 'மந்திரப்பழம்'தான் இந்த மாம்பழம்!
உலக அளவில் மாம்பழத்துக்கு அதிக மவுசு உண்டு. இதன் சுவைக்கு உலகின் மூலை, முடுக்கிலெல்லாம் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்நிலையில், திருச்சியில் விளையும் மாம்பழத்தைப் பற்றியும் அதற்குப் பெயர்போன இடம் எனச் சொல்லக்கூடிய 'தாத்தாச்சாரியார் தோட்ட மாம்பழக்கடை'யைப் பற்றியும் அதிகமாகப் பேசுகிறார்கள் திருச்சி மக்கள். அப்படி அதில் என்னதான் விஷேசம் என்று விசாரித்தோம்.
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது மாம்பழச்சாலை. அதுவும் காவிரிக் கரையில் உள்ள தோட்டங்களில் விளையும் மாம்பழத்திற்கு எப்போதும் தனிச்சுவை உண்டு. அந்த வகையில், இந்தத் தாத்தாச்சாரியார் தோட்டங்களில் விளையும் மாம்பழங்களுக்கு என தனிச்சுவை உள்ளதாகவும் சொல்கிறார்கள் மாம்பழப் பிரியர்கள்.
ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து காவிரி பாலம் வரை இவர்களது மாம்பழத் தோட்டங்கள் உள்ளன. சீசனுக்கு அனைத்து விதமான மாம்பழங்களுக்கும் கடுமையான கிராக்கி இருக்கும். முக்கியமாக இங்கு மட்டுமே ஸ்பெஷலாகக் கிடைக்கும் 'இமாம்பசந்த்' மாம்பழத்தின் சுவை அலாதியானது என்கிறார்கள்.
மிக பழைமை வாய்ந்த, தாத்தாச்சாரியார் தோட்ட மாம்பழ கடையின் மேலாளரான சதீஷிடம் பேசினோம், ”தாத்தாச்சாரியார், சுதந்திரத்திற்கு முன்னாலயே அதாவது, 1940-ம் வருசம் வாக்குலயே பல ரக 'மாம்பழ தோட்ட'த்தை உருவாக்கி அந்த மாம்பழத்தை விற்க ஆரம்பிச்சாங்க.
1885-களிலேயே தாத்தாச்சாரியார் குடும்பத்தினர் 75 ஏக்கருக்கும் மேல் நிலத்தை வாங்கியிருக்காங்க. கிட்டத்தட்ட மூணு தலைமுறையைத் தாண்டி மாம்பழ வியாபாரம் செஞ்சுட்டு இருக்காங்க. இங்க இருக்கும் கடை, 1984-ல ஆரம்பிச்சது. இன்ன வரைக்கும் நம்ம கடைதான் இந்தப் பகுதியோட முகவரி, அடையாளம்!
இந்த மாம்பழத் தோட்டம், காவிரி ஆத்தோட கரையோரமா இருக்குது. மட்கிய தொழுவுரம், கால்நடைகளின் கழிவுகளைத்தான் அடியுரமாகப் போட்டு வளர்க்குறோம். எந்தவித ரசாயன இடுபொருளும் கொடுக்காம, இயற்கை முறையிலயே வளர்த்து பராமரிக்கிறோம். அதனாலதான், இந்தப் பழங்களோட சுவை அலாதியா இருக்குது.
அதுமட்டுமில்லாம பறிக்குற காய்களை, கருங்கல் மண்டபத்துக்குள்ள வைக்கோலைப் பரப்பி இயற்கை முறையில பழுக்க வைக்கிறதுனால, பழங்களை 7 நாள் வரைக்கும் இருப்பு வச்சு சாப்பிடலாம். எங்க தோட்டத்துல 'இமாம் பசந்து', 'செந்தூரம்', 'பங்கனப் பள்ளி', 'அல்போன்சா', 'நீலம்', 'காவேரி', இமாம்பசந்தோட இன்னொரு வகை மாம்பழம், 'கல்லாமணி', 'ரூமானி'ன்னு 10-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் விளைவிக்கிறோம். சுவை, மணம் ரெண்டுக்காகவும் நிறைய சாப்பிட்டு பார்க்கத் தோணும்.
எங்க மாம்பழத்துக்கு திருச்சி மட்டும் இல்லாம, வெளியூர், வெளி மாநிலம்ன்னு வாடிக்கையாளர்கள் இருக்காங்க. ஊறுகாய், ஜூஸ் எல்லாத்துக்கும் வாங்கிட்டுப் போறாங்க. முக்கியமா 'ஸ்ரீரங்கத்து கற்கண்டு'ன்னு சொல்லுற இமாம்பசந்த் மாம்பழத்துக்கு வெளிநாடுகளில் இருந்தும் கூட வாடிக்கையாளர்கள் இருக்காங்க.
'இமாம்பசந்த்' மாம்பழத்தை மட்டும்தான் எந்த ஸ்டேஜ்ல நாம சாப்பிட்டாலும் அதோட சுவை குறையாம இருக்கும். தமிழ்நாட்டிலேயே எங்க தோட்டத்துல மட்டும் ஸ்பெஷலா விளையிற 'ஆப்பிள் பச்சரிசி' என்ற மாங்காவை பழுக்க வைக்காமல் அப்படியே சாப்பிடலாம். அதன் சுவை வேற லெவல்ல இருக்கும்.
இங்க மட்டுமே கிடைக்குற இந்த மரத்தோட செடி கூட எங்கயும் இருக்காது. எங்களுக்கே ரொம்ப கம்மியா கிடைக்குற இந்த மாம்பழத்தை, தோட்டத்துலயே வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. இதுமட்டும் இல்லாம 'மாம்பழச் சாலை'ன்னு சொன்னாலே அடையாளமா இருக்குறது எங்க கடைதான்!" என்கிறார் பெருமையாக.
நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே காரிலிருந்து மாம்பழங்களை வாங்க வந்த வாடிக்கையாளாருக்கு 'ரூமானி' ரக பழத்தை விற்பனை செய்துவிட்டு, மீண்டும் பேசத் தொடங்கினார் சதீஷ். "தோட்டத்துல இருந்து நல்ல பழுக்கப்படும் நிலையில் இருந்துதான் பழத்தை ஆள் வச்சி பறிப்போம். ஆனா, எல்லாரும் அப்படி பண்றது இல்லை.
எந்த செயற்கை பொருள்களும் இல்லாம, கல் வச்சிலாம் பழுக்க வைக்காம இயற்கையாவே பழுக்க வச்சி விற்பனை செய்றோம். இதுனாலயே மாம்பழங்கள் ரொம்ப சீக்கிரமா அதோட முடிவுக்கு போற ஸ்டேஜ் வந்துடும். பெரும்பாலானோர் மாம்பழத்தைப் பதப்படுத்தியோ, கல் போட்டோதான் பழுக்க வைப்பாங்க. அப்படி பண்ணுனா சீக்கிரம் பழம் அழுகாது. ஆனா, நாங்க அப்படி பண்றதுல்ல. லாபம் குறைஞ்சாலும் எங்களுக்குத் தரம்தான் முக்கியம்னு இயற்கையாவே பழுக்க வைக்கிறோம்.
டோர் டெலிவரி கேட்குறவங்களுக்கு, பெட்டியில் வைக்கோல் நிரப்பி அதுக்குள்ள பழத்தைப் போட்டு ரொம்ப பாதுகாப்பா, பாக்ஸ் பாக்ஸா டெலிவரி கொடுக்குறோம்.
Also Read: "சிவாஜி சார் திருச்சி வந்தா இங்கதான் ஜிகர்தண்டா குடிப்பார்!" - 3 தலைமுறைகளாக இயங்கும் ஜிகர்தண்டா கடை
மாம்பழம் வாங்க வந்த வாடிக்கையாளர் நாகராஜிடம் பேசினோம், "என்னோட ஊரு துறையூர். இங்க இருந்து ஒரு 40 கிலோமீட்டர் போகணும். நான் தொடர்ந்து பல வருசமா இங்க மாம்பழம் வாங்குறேன். எங்க அப்பா காலத்துல இங்க வாங்கிட்டு வந்து பழக்கி விட்டுட்டாரு.
இங்க கிடைக்குற மாம்பழ சுவை நாக்குலயே நிற்கும். இதுக்காகவே இங்கதான் வந்து வாங்கிட்டு போவேன். எங்க குடும்பத்துல இருக்கவங்க ஊறுகாய் செய்யுறதுல இருந்து, நாங்க சாப்பிடுறது வரை தாத்தாச்சாரியர் தோட்டத்து மாம்பழம் மட்டும்தான்" என்றார்.
திருச்சிக்குப் போனா கண்டிப்பா இந்த மாம்பழத்தைத் யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!
source https://www.vikatan.com/food/food/this-place-in-trichy-is-famous-for-yummy-and-unique-variety-of-mangoes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக