Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தில் சிறப்பு ருத்ர த்ரிசதி அர்ச்சனை... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

தோஷங்களை எல்லாம் நீக்க வல்லது பிரதோஷ வழிபாடு. ஆலமுண்டு நீலகண்டராக நம் ஈசன் தியாகத் திருவடிவாக உருமாறிய வேளை பிரதோஷ காலம் எனப்படுகிறது. தாக்க வந்த ஆலகால விஷத்திலிருந்து தம்மை காக்கவென்று கயிலையில் தேவ அசுர கூடியிருந்த வேளை பிரதோஷம். இந்த வேளையில் நாமும் சிவபூஜை செய்கின்ற தருணம் அமைந்தால் அபாயம் எதுவாயினும் ஈசனின் திருவருளால் நீங்கி நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.

வரும் 21-7-2021 புதன்கிழமை அன்று ஆடி மாத வளர்பிறை பிரதோஷ காலம் வருகின்றது. ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் அற்புதமான விசேஷ காலம் என்பார்கள். அந்த நாளில் ஈசனிடம் இருந்து வரங்களைப் பெற, அன்னை சக்தியே முன் நின்று பிரதோஷ பூஜைகள் செய்தாள் என்கின்றன புனித நூல்கள். இந்நாளில் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு ருத்ர பாராயண வழிபாட்டில் கலந்து கொள்வதும் விசேஷம். திருமணத் தடைகள் நீங்க வேண்டுதல், மகப்பேறு வேண்டுதல், குடும்ப ஒற்றுமை வேண்டுதல் என உங்கள் பிரார்த்தனைகள் யாவும் இந்நாளில் செய்யும் சிறப்பு சங்கல்பத்தால் நிறைவேறும் என்பது உறுதி.

சிவ வழிபாடு

வாசகர்கள் இந்த அற்புத அர்ச்சனை மற்றும் ஆராதனை விழாவில் பங்கு கொள்ள சக்தி விகடன் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தில் சிறப்பு ருத்ர த்ரிசதி அர்ச்சனை வைபவம் நடைபெற உள்ளது. சிவமே உயர்பொருள் என்று எண்ணி வாழ்ந்த பிருங்கி முனிவர் சிவபெருமானைக் காண பரங்கிமலை என்று வழங்கப்படும் பிருங்கி ஒருமுறை மலையில் கடும் தவம் புரிந்திருக்கிறார். பிருங்கி முனிவரின் கடும் தவத்தை மெச்சிய ஈசன், நந்தி ரூபத்தில் காட்சி தந்து வரங்களை நல்கியிருக்கிறார். ஈசன் காட்சி தந்த இடமே திருத்தலமானது.

அப்போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் ‘ஆதணி’ என்ற மன்னன் இந்த சம்பவத்தை அறிந்து மெய்சிலிர்த்து, ஈசனுக்குக் கோயில் எழுப்பினான் என்கிறது தல புராணம். ‘ஆதணி’ என்ற மன்னன் பெயராலேயே ஆதணிபாக்கம் என அழைக்கப்பட்டு, அது திரிந்து ‘ஆதம்பாக்கம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது. இந்த பெருமை மிக்க ஆலயத்தில் மூலவர் அருள்மிகு நந்தீஸ்வரர்; அம்பாள் ஆவுடைநாயகி. கோயிலின் வரலாற்றைச் சொல்லும் கல்வெட்டுக்கள் இன்றும் கோயிலின் பிராகாரங்களில் கம்பீரமாக மிளிர்கின்றன என்பதும் விசேஷம்.

சுவாமி நந்தீஸ்வரர் 4 அடி உயரத்தில், பிரமாண்ட லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். இறைவி ஆவுடைநாயகி தென்திசை நோக்கியவண்ணம் தன் கருணைக் கடாக்ஷத்தை பக்தர்களுக்கு அளிக்கிறாள். அம்பிகை ஆவுடையாகவும், ஈசன் நந்தியாகவும் பெயர் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் இது என்பது சிறப்பு. மேலும், இங்கு ஈஸ்வரன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் தனித்தனி சந்நிதிகள் இருப்பதும் சிறப்பு.

நந்தீஸ்வரர்

திருக்கோயில் முழுவதும் நந்தி, நர்த்தன விநாயகர், சுந்தர விநாயகர், ஸித்தி விநாயகர், பாலமுருகன், மஹாவிஷ்ணு, வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியன், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், சூரியன், நாகதேவதை, காளஹஸ்தீஸ்வரர், பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் என ஏகப்பட்ட சந்நிதிகள் உள்ளன. தூண்களில் உள்ள மீன் சிற்பம், கண்ணப்ப நாயனார், காமதேனு, மாருதி, நரசிம்மர் போன்றவை இத்தலத்தின் பழைமையைப் பறைசாற்றுகிறது.

இந்த ஆலயத்தின் விசேஷமே [பிரதோஷ வழிபாடுகள் தான் என்கிறார்கள் ஊர் மக்கள். பிரதோஷ வேளையில் ருத்ர த்ரிசதி அர்ச்சனையும் மஹா தீபாராதனையும் சிறப்பாக நடைபெறுகின்றன. அப்போது இங்கு பசு வலம் வருவது அற்புதமான நிகழ்ச்சி! உற்ஸவ மூர்த்திகள் திருவுலா, பதிக பாராயண முற்றோதுதல் போன்றவையும் அப்போது சிறப்பாக நடைபெறுகின்றன.

இந்த முறை சிறப்பு வாய்ந்த ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தில் மகா ருத்ர பாராயண சங்கல்ப பூஜையும் நடைபெற உள்ளது. இந்த விசேஷத்தில் சங்கல்பித்துக் கொள்வதால் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பெரியோர் சொல்லும் வாக்கு. குறிப்பாக கடன் தீர, வேலை கிடைக்க, வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெற இந்த வைபவம் துணை புரியும். எல்லோரும் சகல நன்மைகளையும் பெற்று வாழ இந்த சிறப்பு வைபவத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

சிவபெருமான்

வாசகர்கள் கவனத்துக்கு:

முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர் - நட்சத்திரம் கூறி உரிய சங்கல்பத்துடன் சமர்ப்பிக்கப்படும்.

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி இந்த வைபவம் நிகழவுள்ளது. ஆகவே, வாசகர்கள் நேரில் தரிசிக்க இயலாத நிலையில், இந்த வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

இந்த நிகழ்வில் நீங்களும் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/gods/sakthi-vikatan-to-conduct-rudra-trishati-poojai-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக