Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

கோவிட் 19: ஒரே நேரத்தில் இரு வேறு வேரியன்ட்டால் பாதிக்கப்பட்ட பெண்; சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

கொரோனா வைரஸின் அடுத்தகட்டம் குறித்து அவ்வப்போது வெளியாகும் புதிய தகவல்கள் நம் அச்சத்தை அதிகரிக்கின்றன. பெல்ஜியத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 90 வயது பெண், ஒரே நேரத்தில் ஆல்பா, பீட்டா என இருவேறுவகையான கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்ததாக வெளியாகியுள்ள தகவல் சமீபத்திய அதிர்ச்சி.

முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், கணிக்க இயலாத வகையில் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கிறது. புதிதாகக் கண்டறியப்படும் ஒவ்வொரு வேரியன்ட்டும் முன்னதைவிட வீரியம்மிக்கதாகவும், பாதிப்பை அதிகப்படுத்துவதாகவும் இருக்கின்றன. ஸ்பைக் புரோட்டீன், ஆர்.என்.ஏ என ஒவ்வொன்றிலும் தன்னை உருமாற்றிக்கொண்டிருக்கும் கொரோனாவின் அடுத்தகட்ட பாய்ச்சல் இரட்டைத் தாக்குதல்.

COVID-19 patient/ Representation Image

Also Read: கோவிட் 19 தடுப்பூசியால் உயிரிழந்த இந்தியாவின் முதல் நபர்; அதிகாரபூர்வமாக அறிவித்த அரசு!

ஆம்! முன்பெல்லாம் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர் ஏதாவதொரு கொரோனா வேரியன்ட்டால்தான் பாதிக்கப்படுவார். இப்போது இரண்டு வேரியன்ட்டுகள் சேர்ந்து ஒருவரைத் தாக்குவது பெல்ஜியத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தைச் சேர்ந்த 90 வயதுப் பெண் தனியாக வசித்து வந்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம், நிற்க முடியாமல் மீண்டும் மீண்டும் கீழே விழுந்திருக்கிறார்.

உடனடியாக பெல்ஜியத்தின் ஆல்ஸ்ட் நகரில் அமைந்துள்ள ஓ.எல்.வி (OLV) மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அப்போது அவரது சுவாசம் நன்றாக இருந்திருக்கிறது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் சாச்சுரேஷனும் சரியாக இருந்திருக்கிறது. இந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நன்றாக இருந்த அவர் அடுத்த ஐந்து நாள்களில் உடல்நிலை மிகவும் மோசமாகி உயிரிழந்திருக்கிறார்.

தங்கள் மருத்துவமனையில் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகள், எந்த வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்வதை ஓ.எல்.வி மருத்துவமனை வழக்கமாக வைத்திருக்கிறது. அதனடிப்படையில், அந்தப் பெண்மணியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்து ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வின் முடிவுதான் அதிர்ச்சிகரமானதாக இருந்திருக்கிறது. அந்த 90 வயதுப் பெண், பிரிட்டன் வேரியன்ட்டான ஆல்பா மற்றும் தென்னாப்பிரிக்க வேரியன்ட்டான பீட்டா ஆகிய இரண்டு வகையான கொரோனா வைரஸ்களாலும் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

``ஒரே நேரத்தில் இரட்டைத் தாக்குதல் எப்படி நிகழ்ந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அந்தப் பெண் பாதிக்கப்பட்ட நேரத்தில் பெல்ஜியத்தில் ஆல்பா மற்றும் பீட்டா வைரஸ்கள் இரண்டும் பரவிக்கொண்டிருந்தன. ஆகையால், இரண்டு நபர்களின் மூலம் அந்தப் பெண்மணி பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம்.

Corona Virus - Representational Image

Also Read: Covid Questions: நம்பிக்கை அளிக்கும்படி கொரோனாவுக்கு புதிய மருந்துகள் ஏதேனும் விரைவில் வருமா?

அதாவது, ஆல்பாவால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து ஆல்பா வைரஸும் பீட்டாவால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பீட்டா வைரஸும் தொற்றியிருக்கலாம். ஆனால், இப்படியான பாதிப்பு விதிவிலக்கானதுதான். இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன" என்கின்றனர் அங்குள்ள வல்லுநர்கள்.

இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வையடுத்து, `கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களுக்கு இப்படியான சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் கொரோனாவின் போக்கைக் கணித்து நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்' என்று கோரிக்கை எழுந்துள்ளது.



source https://www.vikatan.com/health/international/belgium-woman-who-contracted-two-different-covid-variants-passed-away

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக