Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

`பெயர் வைப்பதற்காக ஒரு பல்கலைக்கழகமா?’ -ஜெயலலிதா பல்கலை., விவகாரத்தில் பொன்முடி காட்டம்

ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு நிகழ்ச்சி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள சில கிராமப் பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

தொடர்ந்து கக்கனூர் கிராமப்பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் இவ்விரு அமைச்சர்களும். முதலில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், "முதல்வரின் கட்டளையை ஏற்று ஊரக மற்றும் கிராமப் பகுதிகளுக்கு நேரில் சென்று திட்டங்கள் எந்த நிலையில் உள்ளது என ஆய்வு செய்து, துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து நிறைவேற்றி வருகிறோம்.

பழைய திட்டங்களின் செயல்பாடுகளில் தேக்கநிலை மற்றும் குழப்பங்கள் இருக்கிறது. அவற்றை தீர்த்து வைப்பதற்காக ஆலோசனைகளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மக்களின் கோரிக்கைகளை உடனடியாக ஆங்காங்கே நிறைவேற்றுவதற்கு தேவையான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. நகரங்களுக்கு இணையான வசதிகளை கிராமங்களுக்கும் கொண்டுசேர்க்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார்கள். அதை செயல்படுத்தி வருகிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தும்படி சொல்லியிருக்காங்க. அதை இந்த அரசு நிச்சயமாக நிறைவேற்றும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் 250 ரூபாய் என இருந்த தொகை இப்போது 273 ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்த ஊதியம் 300 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்ன சொல்லியிருக்காங்க. அது விரைவில் பரிசீலிக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார்" என்றார்.

விழுப்புரத்தில் துவங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26-ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார் சி.வி.சண்முகம்.

இதைப்பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த பொன்முடி, "இங்கு ஜெயலலிதா பல்கலைக்கழகம் எங்கு இருக்கு? எங்க துவங்கி வச்சிருக்காங்க.. ஒன்றுமே இல்லை. பேருக்காக அறிவித்தார்கள் அவ்வளவுதான். அதை ஆரம்பித்தார்கள் என்று கூட சொல்ல முடியாது. ஆனால், இப்போது 4 மாவட்ட மாணவர்கள் பயன்படும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றி இருக்கிறோம். ஜெ.ஜெ.பல்கலைக்கழகம் என பெயர் வைத்தவர்கள் எதையும் மாற்றவில்லையா..? கலைஞர் கட்டிய சட்டமன்றத்தின் பெயரையே மாற்றவில்லையா..! அந்த மாதிரி எல்லாம் அவர்கள் செய்ததுண்டு.

Also Read: விழுப்புரம்: பழைய தாலுக்கா அலுவலகத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம்! பின்னணி என்ன?

ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், விழுப்புரம்

நாங்க அண்ணா பல்கலைக்கழகத்தை நான்காக வைத்திருந்தோம். அதில் மூன்றை நீக்கிவிட்டு ஒன்றாக மாற்றினார்கள். ஜெ.ஜெ.பல்கலைக்கழகம் தேவை இல்லாத ஒன்று. அண்ணாமலை பல்கலைக்கழகம் நூறு ஆண்டுகளாக இயங்கும் சிறந்த பல்கலைக்கழகமாக நிகழ்வதுண்டு. அதோடு இணைக்கப்படுவதை தான் விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாணவர்கள் விரும்புவார்கள். இதில் எந்த பிரச்னையும் கிடையாது. அவர், கடைசியாக போகின்ற நேரத்துல பேர் வைக்கணுமே என்று வைத்திருக்கிறார். விழுப்புரத்தில் இருப்பது கோவில்குளம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அதற்கும் 'அம்மா குளம்' என பெயர் வைத்திருக்கிறார்.

Also Read: பெயர் சர்ச்சையால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குகிறதா தி.மு.க?! - என்ன நடக்கிறது?

'பேர் வைப்பது அவங்களுக்கு பேஷன்'. எதையும் செயல்படுத்த வேண்டும் என்பது கிடையாது..! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1000 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. புதிய கட்டிட வசதியும் உள்ளது. அங்கே போனால்.. செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அதை தேர்ந்தெடுப்பார்கள்...! அதை விட்டுவிட்டு, தேவையில்லாமல் பெயர் வைப்பதற்காக ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கவா முடியும். இது உயர் கல்வி வளர்ச்சிக்காக எடுக்கப்படும் முடிவு தானே தவிர, பெயர் சார்ந்த எந்த வேறுபாடும் கிடையாது.

சி.வி.சண்முகம், பொன்முடி

மாற்றம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுவது. அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதை மாணவர்களும், ஆசிரியர்களும் விரும்புகிறார்கள். பெயருக்கென வைத்துள்ள ஜெ.ஜெ.பல்கலைக்கழகம் தேவையில்லாத ஒன்று என்பதை சட்டமன்றத்திலேயே துரைமுருகன் பேசியிருக்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கும், அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செலுத்தும் கட்டணம் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டிலிருந்து அமலுக்கு வரவுள்ளது. உயர்கல்வி வளர்ச்சியில் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது இந்த அரசு. பேருக்காக மட்டுமே நடத்துபவர்கள் அல்ல. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதி குறைவான பேராசிரியர்கள் நியமனம் பற்றி விசாரிக்க குழு அமைத்துள்ளோம். தகுதி அற்றவர்கள் நீக்கப்பட்டு வயது மூப்பு அடிப்படையில் பணியை நிரப்பிட வேண்டும், என சொல்லியிருக்கிறோம்" என்றார்.

Also Read: ``வாய மூடிட்டு இருந்தா சரிவராது!” - வெடித்த சண்முகம்; வெளியான அறிவிப்பு



source https://www.vikatan.com/government-and-politics/politics/ponmudi-talks-in-villupuram-about-jayalalithaa-university-being-merged-with-annamalai-university

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக