Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

`விவசாயிகளை இழிவுபடுத்திய மாநில நிதியமைச்சரை நீக்க வேண்டும்’ -நீதிமன்றத்தில் ஆஜரான பின் ஹெச்.ராஜா

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மேடை அமைக்க உயர் நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அனுமதி கொடுக்காத காவல்துறை மற்றும் நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். நீதிமன்றத்தை ஹெச்.ராஜா தரக்குறைவான வார்த்தைகளில் பேசுவது போன்ற வீடியோ அப்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஹெச்.ராஜா மீது திருமயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். திருமயம் நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், ஜூலை 23-ம் தேதி திருமயம் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, ஹெச்.ராஜா, ஜூலை 23-ம் தேதியான நேற்று திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவரின் மருமகன் சூர்யநாராயணனும் ஆஜரானார். ஹெச்.ராஜா தரப்பில் வக்கீல்களும் ஆஜராகினர். இந்த வழக்கானது நீதிபதி இந்திராகாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி, அடுத்த விசாரணையைச் செப்டம்பர் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நீதிமன்றத்துக்கு வெளியே ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இந்த வழக்கில் எனக்காக அனுபவம் வாய்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆஜராகி உள்ளனர். நீதிமன்றம் வழக்கைச் செப்டம்பர் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. தேசவிரோதமாகப் பேசுவது, பிரதமரை இழிவாகப் பேசுவது என்பது எல்லாம் தமிழகத்தில் தொடர்ந்து வருவது கண்டனத்துக்குரியது. நாட்டையும், பிரதமரையும், இந்து சமுதாயத்தினரையும் இழிவாகப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை காவல்துறை கைது செய்ய மெத்தனம் காட்டுகிறது. அவரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்து சமுதாயம் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்.

Also Read: 'பாரத மாதா குறித்த சர்ச்சைப் பேச்சு' ; இந்து இயக்கங்கள் எதிர்ப்பு; வருத்தம் தெரிவித்த பாதிரியார்!

நீதிமன்றமே நக்சலைட் என்று கூறிய ஸ்டேன் சாமிக்குத் தமிழக முதல்வர் அஞ்சலி செலுத்தியிருப்பது தவறானது. மேலும், கண்டிக்கத்தக்கச் செயல். அதற்கு முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளின் கொலை வழக்கை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நீதிமன்றங்களைச் செயல்பட வைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளைத் திருடர்கள் என்று இழிவுபடுத்திப் பேசிய தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, தமிழக முதல்வர், அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/news/tamilnadu/finance-minister-who-insulted-farmers-should-be-removed-says-h-raja

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக