Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

Covid Questions: சித்த மருத்துவ சிகிச்சையில் இருப்போர் தடுப்பூசி போடக் கூடாது என்பது உண்மையா?

Covid Question: சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டால் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்களே... இது எந்த அளவுக்கு உண்மை? கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது சித்த மருந்துகளை நிறுத்த வேண்டுமா? சித்த மருந்துகளை நிறுத்த முடியாதவர்கள் எப்படி கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது ?

- சுப. பொன்செல்வன் (விகடன் இணையதளத்திலிருந்து)

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

``சித்த மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது தடுப்பூசி போடக் கூடாது என்பது தவறான தகவல். சித்த மருந்துகளில் மூலிகை சார்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் எந்த வித பயமும் தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மருத்துவரின் மேற்பார்வையில் எடுக்கப்படும் மூலிகை சார்ந்த மருந்துகளால் drug interaction ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதேநேரம், நாள்பட்ட நோய்களுக்காக நீண்டகாலமாக மருந்துகள் எடுப்பவர்கள் தாங்கள் சிகிச்சை பெறும் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி முடிவு செய்யலாம்.

சித்த மருத்துவர் என்பவர் சித்த மருத்துவப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றவர் அல்லது அனுபவம் வாய்ந்த பாரம்பர்ய சித்த மருத்துவராக இருப்பது அவசியம். போலி மருத்துவர்களின் தவறான ஆலோசனைகளை நம்ப வேண்டாம். வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆதாரமற்ற பகிர்வுகளை நம்பி ஏமாறுவதும் தவறு. இக்கட்டான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் தெளிவாக எடுப்பது அவசியம்.

கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டவுடன் காய்ச்சல் ஏற்படுகிறதெனில் மருத்துவர் ஆலோசனைப்படி கபசுர குடிநீர் அல்லது நிலவேம்புக் குடிநீர் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சலுக்காகப் பரிந்துரைக்கப்படும் மற்ற சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம். அதே போல தடுப்பூசியால் ஏற்படும் உடல் சோர்வுக்கு, சித்த மருந்துகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தலாம். நீரிழிவு பாதிப்புக்காகவோ, உயர்ரத்த அழுத்த நோய்க்காகவோ சித்த மருந்துகளை எடுப்பவர்களும் எவ்வித மனத்தடையும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட தொற்றா நோய்களுக்காகப் பெரும்பாலும் மூலிகை சார்ந்த மருந்துகளே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

நிலவேம்பு குடிநீர் பருகும் முதியவர் (மாதிரி படம்)

Also Read: Covid Questions: சிகிச்சை முடிந்து 2 மாதங்கள் ஆன பின்னும் தொடரும் இருமல்; விடுபட என்ன வழி?

இதயம் சார்ந்த நோய்களுக்காகவோ, ரத்த உறைதல் பிரச்னைக்காகவோ ஒருங்கிணைந்த சித்த மற்றும் ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரின் தெளிவான அறிவுரையோடு தடுப்பூசி செலுத்த முற்படுவது அவசியம்.

பல்வேறு சித்த மருந்துகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மை கொண்டவை. எனவே, தகுதியான சித்த மருத்துவரை ஆலோசித்து மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். சித்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்பது தவறான கருத்து."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/persons-who-undergoing-siddha-treatment-can-take-covid-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக