Ad

சனி, 10 ஜூலை, 2021

``படைப்பாளிகளுக்கு பாடம் எடுக்கப் போகிறார்களா அரசியல்வாதிகள்?'' - நடிகை ரோகிணி கேள்வி

'ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா'வுக்கு எதிராக நாடு முழுக்க திரைப்படக் கலைஞர்கள் கொந்தளித்து வருகின்றனர். ''தொடர்ச்சியான சட்டத் திருத்தங்களின் வழியே ஒட்டுமொத்த நாட்டையும் அடிமைப்படுத்திவிடத் துடிக்கும் மத்திய அரசு, இப்போது கலைத்துறையின் மீதும் கைவைக்கத் துடிக்கிறது'' என்று குமுறுகின்றனர் இவர்கள்.

தமிழ்நாட்டில் நடிகர் சூர்யா, கமல்ஹாசன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களின் வரிசையில், இந்தப் புதிய சட்டத் திருத்தத்தை மிகக் கடுமையாக எதிர்த்துவரும் 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க'த்தின் மாநில துணைத்தலைவரும் நடிகையுமான ரோகிணியிடம் பேசினேன்....

''வழக்கம்போல், தணிக்கைத்துறை (Censor Board) செயல்படப்போகிறது. அதைத்தாண்டி மக்கள் ஆட்சேபிக்கிற படங்களை மட்டும்தானே மத்திய பா.ஜ.க அரசு ஆய்வுக்கு உட்படுத்தப்போகிறது. இதில் என்ன பிரச்னை?''

''தணிக்கைத்துறையில் யார், யார் இடம்பெற வேண்டும் என்ற தகுதியின் அடிப்படையிலான விதிமுறைகள் ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவந்தது. ஆனால், அந்த விதிமுறைகளை நீக்கிவிட்டு, யாரை வேண்டுமானாலும் மத்திய அரசே நியமித்துக்கொள்ளும் என்ற நடைமுறையை ஏற்கெனவே கொண்டுவந்துவிட்டார்கள். இதுவே மிகப்பெரிய அநீதி!

சூர்யா

அடுத்து, குறிப்பிட்ட ஒரு படத்துக்கு தணிக்கைத்துறை அனுமதி மறுக்கும் சூழலில், 'திரைப்பட சான்றிதழ் தீர்ப்பாய'த்தில் மேல் முறையீடு செய்து படைப்பாளிகள் தங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்கான நிலை இதுநாள்வரையில் இருந்துவந்தது. ஆனால், சமீபத்தில், அந்த தீர்ப்பாயத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் கலைத்துவிட்டது. இனி தீர்ப்பாயத்துக்குப் பதிலாக மத்திய அரசே சம்பந்தப்பட்ட படத்தைத் திறனாய்வு செய்யும் என்கிறார்கள். அரசாங்கத்தை அச்சுறுத்துகிற வகையில், அப்படி என்ன திரைப்படம் வெளிவந்திருக்கிறது? பின்னர் எதற்காக இப்படியான மாற்றங்களை மத்திய அரசு செய்துவருகிறது? திரைப்படங்களை தரப்படுத்துவதா மத்திய அரசின் வேலை?

இந்த திருத்தச் சட்டத்தின் வாயிலாக, திரைப்படங்கள் கண்காணிக்கப்படும் என்றால், அந்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெறப்போகிறவர்கள் யார், யார்? அவர்கள் எந்தவகையில் கண்காணிக்கப்போகிறார்கள்? இப்படி செயல்முறை குறித்த எந்த விவரங்களையும் மத்திய அரசு இதுவரை தெளிவுபடுத்தவேயில்லை!

ஒருவேளை, 'இப்படித்தான் படம் எடுக்கவேண்டும்' என இனிமேல் அரசியல்வாதிகள் பாடம் எடுக்கப்போகிறார்களா... என்னவோ!''

''கடந்த காலத்தில், சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி 'டேம் 999' என்ற திரைப்படத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. அப்போதெல்லாம் நீங்கள் தமிழக அரசை எதிர்த்து குரல் கொடுக்கவில்லையே?''

''இன்றைக்கு எனக்கு இருக்கிற புரிதலும் துணிச்சலும் அன்றைக்கு என்னிடம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும்கூட, 'டேம் 999', 'விஸ்வரூபம்' படங்களுக்கு தடை விதிக்கப்பட்ட அந்த காலகட்டத்திலும், கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் தங்களது எதிர்ப்பை நிச்சயம் பதிவு செய்திருப்பார்கள். ஏனெனில், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், தங்களுடைய தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக தடை விதிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது!

கமல்ஹாசன்

ஒருவர் தப்பாகவே பேசினாலும்கூட, அவர் தன் கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமை இங்கே இருக்கிறது. எனவே, 'அவர் பேசுவது தப்பான கருத்து; அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை' என்றுதான் நாங்கள் சொல்கிறோம். மற்றபடி, அவர் பேசவே கூடாது என்றோ அல்லது அவரது வாய்ஸையே சைலன்ஸ் பண்ணிவிட வேண்டும் என்றோ நாங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அதாவது கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள் என்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கேரளாவில் ராகுல்காந்தி - நரேந்திர மோடி ஆகியோர் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாயின. அந்த சமயத்தில், 'ராகுல் அல்லது மோடியிடம் நீங்கள் கேட்க விரும்புவது என்ன...' என்று யூட்யூப் பேட்டி ஒன்றில் என்னிடம் கேட்டார்கள். அதற்கு 'மோடியை போட்டியிட வேண்டாம் என நான் கேட்டுக்கொள்வேன்' என்று பதிலளித்திருந்தேன். அவ்வளவுதான்... இந்த சின்னப் பகுதியை மட்டும் வெட்டியெடுத்து, இணையத்தில் பரப்பிய பா.ஜ.க-வினர் என்னை மிகமோசமாக திட்டித் தீர்த்தனர்.

இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் எதிர்கொண்டு, என் கருத்து சுதந்திரம் பற்றி துணிச்சலுடன் பேசுவதற்கு எனக்கு இத்தனை ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது!''

Also Read: ராணிப்பேட்டை: `இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை!’ - திருமணம் முடிவான நிலையில் வங்கி அதிகாரி தற்கொலை

''அண்மையில், 'பேமிலிமேன் - 2' வெப் சீரிஸுக்கு தடை விதிக்குமாறு தமிழக அரசோடு இணைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த நீங்களே, இப்போது மத்திய அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புவது முரண்பாடாக இருக்கிறதே...?''

''எல்லோரும் அவரவர் கருத்துகளை முன்வைக்கிற சுதந்திரம் இருக்க வேண்டும். மாறாக 'யாரும் கருத்தே தெரிவிக்கக்கூடாது' என்று சொல்லக்கூடாது. அந்தவகையில், 'பேமிலிமேன் - 2' வெப்சீரிஸும் ஓ.டி.டி தளத்தில் முதலில் வெளியாகிவிட்டது. அதன்பின்னர்தான் அந்தத் தொடர் தமிழ் ஈழ போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகக்கூறி எதிர்ப்புக் குரல் எழுந்தது. இதைத்தொடர்ந்தே 'தடை விதிக்கவேண்டும்' என்று நாமும் கோரிக்கை வைத்தோம்.

சிலவருடங்களுக்கு முன்பு, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'மாதொரு பாகன்' புத்தகத்துக்கும் எதிர்ப்பு எழுந்தது... உடனே, அந்தப் புத்தகத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. இப்படி விமர்சனத்தை முன்வைப்பதற்கான இடம் இருப்பதுதான் உண்மையான ஜனநாயகம்!

ஃபேமிலிமேன் - 2

ஆனால், 'ஒளிப்பதிவாளர் திருத்த சட்டம்' என்பது 'சமூக பிரச்னைகளுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் முன்வைக்கக்கூடாது' என்ற அச்சுறுத்தலை படைப்பாளிகள் மத்தியில் முன்னரே உருவாக்கிவிடுகிறது. இது, மாற்றுக்கருத்து கொண்ட எந்தப் படைப்பையும் யாரும் உருவாக்கவே முடியாது என்ற சூழலை ஏற்படுத்திவிடும். ஆக, வெறுமனே ராஜா - ராணி கதைகளை மட்டும்தான் படமாக்க முடியும்.

இன்னும் கொடுமையாக... ஏற்கெனவே வெளிவந்த படங்களைக்கூட இந்தப் புதிய திருத்த சட்டம் மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தி, தடை செய்ய முடியும் என்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஆக, சமூக அநீதிகளுக்கு எதிராக கேள்வி கேட்ட - மக்களால் கொண்டாடப்பட்ட 'பராசக்தி' படத்தைக்கூட, இன்றைக்கு இந்தப் புதிய திருத்த சட்டம் தடை செய்யமுடியும் என்கிறபோது... இந்த சட்டத்தின் பின்னணியில் உள்ள ஆபத்து புரிகிறதுதானே?''

Also Read: சென்னை: ரூ.20 லட்சத்தை அபகரிக்க கடத்தல் நாடகம்! - நண்பனுடன் தனியார் நிறுவன அதிகாரி சிக்கியது எப்படி?

''அரசியல் ரீதியான எதிர்ப்புகளால், 'பம்பாய், விருமாண்டி' உள்ளிட்ட திரைப்படங்கள் சவாலை சந்தித்தன. இந்தச் சிக்கலைகளை எல்லாம் இப்போது மத்திய அரசே 'ஒளிப்பதிவு திருத்த சட்டம்' வழியே நேரடியாக கையாளப்போகிறது என்பது வரவேற்கத்தக்க அம்சம்தானே?''

''அப்படியென்றால், படைப்பாளிகளுக்கு எதிராக இதுநாள் வரையில் அரசியல் கட்சிகள் காட்டிய எதிர்ப்பையெல்லாம் இனி மத்திய அரசே செய்யப்போகிறதா? படத்தை மத்திய அரசிடம் போட்டுக்காட்ட வேண்டும், மத்திய அரசு சொல்கிற பெயரைத்தான் சூட்டவேண்டும் என்ற நிலையெல்லாம் வரும் என்கிறீர்கள். இதைத்தான் நாங்களும் சொல்லிவருகிறோம்.

பம்பாய்

பொதுவாக எல்லா படைப்பாளிகளுமே எதிர்ப்புகளை எதிர்கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்புகளில் எந்தளவு நியாயம் இருக்கிறது என்பதை யார் தீர்மானிக்கப்போகிறார்கள் என்பதுதான் இங்கே மிகப்பெரிய கேள்விக்குறி.

ஏனெனில், மத்திய அரசின் கடந்தகால செயல்பாடுகளை முன்வைத்துப் பார்க்கும்போது, படைப்பாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை! அதனால்தான் இத்தனை எதிர்ப்புகள்!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/are-politicians-going-to-teach-creators-actress-rohini-question

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக