Ad

சனி, 10 ஜூலை, 2021

டார்கெட் கொங்கு.. தி.மு.க - பா.ஜ.க பிளான் என்ன?

தொகுதிகள்.. சமூகங்கள்..

தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்தில், 10 நாடாளுமன்றத் தொகுதிகளும், 61 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.

கோவை

என்னதான் சாதிகளைப் பார்க்கக்கூடாது என்று சொல்லப்பட்டாலும், சாதிகளை மையப்படுத்தியே தமிழக அரசியல் களம் இயங்கிவருகிறது. தேர்தல்களில் சாதிகளை வைத்துதான் வேட்பாளர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். பூகோள ரீதியாகவே தமிழகத்தில் நிலப்பரப்புக்கு ஏற்ற சாதி சமூகங்கள் அமைந்திருக்கின்றன.

தமிழகத்தை மொத்தம் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கிறார்கள். வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் மேற்கு. இதில் வடக்கு மண்டலத்தில் வன்னியர் சமூக மக்களும், எஸ்.சி பிரிவில் பறையர் சமூக மக்களும், முதலியார், செட்டியார் போன்ற சமூக மக்களும் வாழ்கிறார்கள். தெற்கு மண்டலத்தில் முக்குலத்தோர் சமூக மக்களும், தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களும், நாடார், யாதவர் உள்ளிட்ட சமூக மக்களும் வாழ்கிறார்கள்.

மத்திய மண்டலமான டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை முக்குலத்தோர், மயிலாடுதுறையில் வன்னியர், தாழ்த்தப்பட்டோர் என கலந்து வசிக்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் வெள்ளாளக் கவுண்டர் சமூக மக்களும், எஸ்.சி பிரிவில் அருந்ததியர் சமூக மக்களும், குறிப்பிடத்தக்க அளவு வன்னியர் சமூக மக்களும் வசிக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி - ஸ்டாலின்

தி.மு.க பிளான் என்ன?!

தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரு கட்சிகளுக்கு மட்டும்தான் மாநிலம் முழுக்கவே கட்சிக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. இருந்தபோதிலும் கொங்குப் பகுதியில் மட்டும் தி.மு.க தொடர்ச்சியாக தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோதிலும், கொங்குப் பகுதியில் அ.தி.மு.க கையே ஓங்கியது.

அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தினால் மட்டுமே கொங்குவில் தி.மு.க முன்னேற முடியும் என்பதால் அதற்கான வேலைகளில் தி.மு.க இறங்கியிருக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க வந்து அமைச்சராக ஆகியிருக்கும் செந்தில் பாலாஜிக்கு இதுகுறித்த அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கொங்குப் பகுதியிலிருக்கும் அ.தி.மு.க., அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை தி.மு.க-வில் இணைக்க பகீரத முயற்சியில் இறங்கியுள்ளார் செந்தில் பாலாஜி.

Also Read: தி.மு.க-யில் இணைந்த மகேந்திரன்; ஸ்டாலினின் கொங்கு கணக்கு | Elangovan Explains

அதன்பலனாக சமீபத்தில் கொங்குப் பகுதி அ.தி.மு.க-வினர் கட்சியில் இணைந்தனர். அடுத்ததாக, கொங்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. மூன்று எம்.எல்.ஏ-க்களை முதற்கட்டமாக தூக்குவதுதான் பிளானாம். கட்சி மாறினால் கட்சித்தாவல் தடைச்சட்டம் பாய்ந்தாலும் அதே தொகுதியில் அவர்களை நிறுத்தி வெற்றி பெற வைப்பதுதான் பிளான் என்கிறது கரூர் வட்டாரம்.

பா.ஜ.க பிளான் என்ன?

தி.மு.க ஏற்கெனவே கொங்குவில் வீக் என்பதால், பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க-வை டேமேஜ் செய்வதுதான் முதல் எண்ணம். அதேநேரம், தி.மு.க-வை கார்னர் செய்வதற்கும் பிளான் வைத்துள்ளது பா.ஜ.க. கொங்குக்கு முக்கியத்துவம் அளித்துதான் கவுண்டர்களுக்கு இணையாக அப்பகுதியில் வசிக்கும், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகனை மாநிலத் தலைவராக அமரவைத்தது பா.ஜ.க. இதனால் சமீபத்தில் நடந்த தேர்தலில் முருகன் தோற்றாலும், அச்சமூக மக்களின் ஆதரவு முன்பைவிட பா.ஜ.க-வுக்கு சற்று அதிகரித்ததாக கணக்கிட்டுள்ளனர். அதனை மேலும் வலுப்படுத்த தற்போது எல்.முருகனை மத்திய இணை அமைச்சராக உயர்த்தியிருக்கிறது டெல்லி பா.ஜ.க.

அண்ணாமலை - எல்.முருகன்

அதேநேரம், அப்பகுதி கவுண்டர் சமூக மக்களுக்கு பா.ஜ.க மீது வெறுப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தால், அண்ணாமலையை மாநிலத் தலைவராக அமர்த்தியிருக்கிறது பா.ஜ.க. கொங்குவில் ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி கவுண்டர் சமூகத் தலைவராக உருவெடுத்துவிட்டதால், அவருக்கு இணையாக அண்ணாமலையை வளர்க்கவும் இந்த பிளான் உதவும்.

ஒன்றிய அரசு, ஜெய்ஹிந்த் போன்ற விவகாரங்களில் தி.மு.க தொடர்ந்து மத்திய பா.ஜ.க அரசை வம்பிழுப்பதால், தி.மு.க-வை சரிகட்ட கொங்கு நாடு எனப் பிரிக்கலாமா என்றொரு சிந்தனையிலும் இருக்கிறதாம் பா.ஜ.க. அதற்கு என்ன ரியாக்‌ஷன் இருக்கும் என்று அறியத்தான் பத்திரிகை ஒன்றின் மூலம் செய்தியை கசியவிட்டிருக்கிறது அக்கட்சி. இதனை மையப்படுத்தியே தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் நியமனம் எல்லாம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாகவே மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற எல். முருகனைப் பற்றிய குறிப்புகளில், கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றதாம். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முருகனுக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்தது, வானதி சீனிவாசன் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டது, அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டது எல்லாம் இந்த ‘கொங்கு நாடு’பின்னணியில்தான் என்று சொல்பவர்களுமுண்டு.

வானதி சீனிவாசன்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாம் சட்டப்பிரிவு, இந்திய ஒன்றிய அரசுக்கு, தன் எல்லைக்குட்பட்ட நிலங்களை மாநிலங்களாகப் பிரிக்க, மாநிலங்களின் பரப்பளவை அதிகரிக்க அல்லது குறைக்க, மாநில எல்லைகளில் மாற்றம் ஏற்படுத்த, மாநிலங்களின் பெயர்களில் மாற்றம் செய்ய அதிகாரம் வழங்குகிறது. அதேசமயம், இதனை நிறைவேற்ற அம்மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலும் தேவை என்ற ’செக்’கும் உள்ளது.

இவர்கள் போடும் கணக்குக் கனவு, பலிக்குமா கலையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!



source https://www.vikatan.com/news/politics/target-kongu-what-was-dmk-and-bjp-plan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக