கட்சிக்குள் என்ட்ரி கொடுத்த இரண்டு ஆண்டுக்குள் மாநில தலைவர் என்கிற பவர்ஃபுல் பதவியைப் பிடித்துள்ளார் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை. இதற்கு பின்னால் நடந்த அரசியலை விட இனி நடக்கபோகும் அரசியல் என்ன என்கிற கேள்வியே தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்த அண்ணாமலை, ஐ.பி.எஸ் வேலையை உதறிவிட்டு, தமிழகத்திற்குத் திரும்பினார். ஆரம்பத்தில் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தவர், ஒருகட்டத்தில் பா.ஜ.க-வில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியவருக்கு இப்போது தமிழக மாநில பாஜக தலைவர் என்கிற உயர்ந்த பதவியை வழங்கியுள்ளது பாஜக-வின் அகில இந்திய தலைமை.
ஆனால், அண்ணாமலையின் அரசியல் பயணம் முதல் அவர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது வரை எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்கிறார்கள் பாஜகவுக்கு நெருக்கமானவர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லி பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமானவர்கள், “அண்ணாமலை அவராக பதவியை ஒன்றும் ராஜினாமா செய்யவில்லை. கர்நாடாகாவில் நடந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மரணம் குறித்த விசாரணை அதிகாரியாக அண்ணாமலை இருந்தார். அந்த மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கர்நாடக அரசியலில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள். அதோடு அப்போது பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமான ஒரு வி.ஐ.பியின் ஆதரவு அந்த கர்நாடக மாஃபியாக்களுக்கு இருந்தது.
இந்த நெருக்கடியால் அண்ணாமலையால் அந்த காவல்துறை அதிகாரியின் மரண வழக்கினை முறையாக விசாரிக்க முடியாத நிலை இருந்தது. தனக்கு வரும் அழுத்தங்கள் பற்றி அப்போது கர்நாடக பா.ஜ.க-வில் இருந்த மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷிடம் சொல்லியிருக்கிறார். அவரும் அண்ணாமலைக்கு சில அறிவுரைகள் வழங்கிவந்த நிலையில்தான் அரசியல் பாதைக்குத் திரும்பும் முடிவை அண்ணாமலை எடுத்தார். அதற்கு அடிப்படையாக அமைந்தது பி.எல்.சந்தோஷ் நட்பு. அவர் மூலம் ஆர்.எஸ்.எஸ் முக்கிய பிரமுகர்களுடனும் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார் அண்ணாமலை. கர்நாடக மாநில அரசியலில் களம்காணவே அண்ணாமலை ஆசைப்பட்டார். ஆனால், தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். அதனால் தமிழக அரசியல் களத்தில் பயணிக்கலாம் என்று அண்ணாமலையை தமிழகத்திற்கு அனுப்பியதும் சந்தோஷ்தான்” என்கிறார்கள்.
அண்ணாமலை கட்சிக்குள் சேர்ந்த உடனே அவருக்கு துணைத் தலைவர் பதவியை வழங்கியது தலைமை. அதன்பிறகு சட்டமன்றத் தேர்தலில் முருகன் தலைமையில் பா.ஜ.க தேர்தலை சந்தித்தாலும், பா.ஜ.கவின் முக்கிய முகமாக அண்ணாமலை கருதப்பட்டார். தமிழக பா.ஜ.க தலைவர்கள் பெரும்பாலும் டெல்லி தலைமையுடன் சரளமான தொடர்பினை வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அண்ணாமலைக்கு பலமே டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையின் ஆதரவாக இருந்தது. கட்சிக்குள் அண்ணாமலை வந்தபோதே, “தமிகத்தில் மிகப்பெரிய பொறுப்பினை உனக்கு வாங்கித்தருகிறேன்” என்று உறுதி கொடுத்திருந்தார் சந்தோஷ். அதற்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் அமைச்சரவை மாற்றம் என்கிற முடிவை மோடி எடுத்தார்.
பா.ஜ.க-வின் அமைப்பு செயலாளர் என்கிற பவர்புல் பதவியில் உள்ள பி.எல். சந்தோஷ் இந்த சந்தர்ப்பதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முருகனை மத்திய அமைச்சராக கொண்டுவந்தார். அந்த இடத்தில் தனது ஆளான அண்ணாமலையை எந்த சிக்கலும் இல்லாமல் அமர வைத்துவிட்டார்” என்கிறார்கள். அதேபோல் அண்ணாமலைக்கு பெரிய அசைன்மென்ட் டெல்லி தலைமையால் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலில் அவர் இருந்தாலும் சத்தமில்லாமல் இனி ஐ.பி.எஸ் அதிகாரிக்கான வேலையையும் செய்ய வேண்டும். ஆம்... தி.மு.கவுக்கு எதிரான வழக்குகள், அவர்கள் மீது எழும் சர்ச்சைகள் குறித்து எல்லாம் தனியாக பைல்களை தயார் செய்ய சொல்லியுள்ளார்கள்.
Also Read: அண்ணாமலை தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
அதே போல் அ.தி.மு.க-வை அடுத்த இரண்டு ஆண்டுக்குள் அடக்கி வைத்துவிடவேண்டும் என்கிற கட்டளையும் கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.கவிற்கு நெருக்கடி கொடுக்கும் வேலையை செய்துக்கொண்டே, அ.தி.மு.க-வை அடக்கும் வேலையும் அண்ணாமலை இனி மேற்கொள்ளவேண்டும். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் இந்தப் பணிகளை அவர் முடித்து தேர்தல் களத்தை பாஜகவுக்கு சாதகமாக கொண்டுவரவேண்டும் என்று டெல்லி தலைமையில் உத்தரவிட்டுள்ளார்கள். ஏற்கனவே கொஞ்சம் கறார் பேர்வழியான அண்ணாமலை இப்போது அதிகாரத்தோடு பவனி வரப்போவதால் பா.ஜ.கவிற்குள்ளேயே பல காய் நகர்த்தல்களை இனி எதிர்பார்க்கலாம்.
பா.ஜ.கவின் திட்டம் சரியா, இதனால் தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை கமெண்டில் கூறுங்கள்.
source https://www.vikatan.com/news/politics/the-agenda-behind-kannamalais-appointment-as-a-tamilnadu-bjp-state-president
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக