Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

சிறார் வதை: அச்சுப்பிழையால் விடுவிக்கப்பட்ட குற்றவாளி! - மேல்முறையீட்டில் தண்டனை விதித்த நீதிமன்றம்

சென்னை போக்சோ நீதிமன்றத்தில் 2017-ல் விசாரணைக்குவந்த ஒரு சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தட்டச்சாளர், கவனக்குறைவாக ஆங்கிலத்தில் 'Semen' என்ற வார்த்தைக்கு பதிலாக 'Semman' என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருந்தார். தமிழில் Semman என்பதற்கு 'செம்மண்' என்பது பொருள்படும் என்பதால் குற்றம்சாட்டப்பட்ட நபரை நீதிபதிகள் வழக்கிலிருந்து விடுவித்தனர். பாலியல் குற்றவாளி விடுவிக்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில் நீதிபதிகள் முன்னதாக போக்சோ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கின்றனர்.

2017-ல் சென்னை போக்சோ நீதிமன்றத்தில் ஒரு பாலியல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்த, சென்னையைச் சேர்ந்த இளம்பெண் அதில், ``என்னுடைய 3 வயது பெண் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மளிகைக் கடைக்குச் சென்றிருந்தேன். அப்போது வீடு திரும்பியபோது குழந்தை வீட்டில் இல்லாததால் அக்கம் பக்கம் தேடிய போது, அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் குழந்தையை ஒப்படைத்துவிட்டு வேகமாக ஓடினார்.

நானும் குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டேன். ஆனால், சிறிது நேரத்தில் குழந்தை அழத் தொடங்கியது. நாள் முழுக்க உணவும் சாப்பிடவில்லை. தொடர்ந்து, அந்தரங்க உறுப்புகளில் வலி இருப்பதாக குழந்தை அழுதது. அதையடுத்து, குழந்தையின் உள்ளாடைகளைப் பரிசோதித்துப் பார்த்தபோது அதில் வெள்ளை நிறத்தில் 'விந்து' கறை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக, வெளியிலிருந்த எனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்தேன். பின்னர், காவல் நிலையத்துக்குச் சென்று இது தொடர்பாகப் புகார் அளித்தோம்.

போக்சோ

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், குழந்தை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கைதுசெய்து சென்னை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசுத் தரப்பு சம்பந்தப்பட்ட நபர் மீதான குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுவித்தனர்.

ஆனால், நீதிமன்ற விசாரணையின்போது தட்டச்சாளர் குழந்தையின் ஆடைகளிலிருந்த வெள்ளைக் கறையை ஆங்கிலத்தில் 'seman' என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 'semman' என்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில்தான் நீதிபதிகள் குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்தனர். எனவே, இந்த வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தற்போது மேல்முறையீடு செய்திருக்கிறேன். மேற்கொண்டு முறையாக வழக்கை விசாரித்துத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இளம்பெண்ணின் மேல்முறையீட்டு மனு அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ``பாலியல் வழக்கில் காவல்துறை தரப்பில் சிறுமியின் உள்ளாடைகளில் வெள்ளை நிற திரவம் கண்டறியப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 2017-ல் வழக்கு விசாரணையின்போது நீதிமன்ற தட்டச்சாளர் தவறுதலாக 'செமன்' என்ற வார்த்தைக்கு பதிலாக 'செம்மண்' என்று குறிப்பிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல், மருத்துவப் பரிசோதனை அறிக்கையிலும் சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஒரு வார்த்தையின் மூலம் தண்டிக்கப்பட வேண்டிய பாலியல் குற்றவாளி ஒருவர் சுமார் மூனேஉ ஆண்டுகள் வெளியில் நிரபராதியாக வலம் வந்துகொண்டிருந்திருக்கிறார்.

ஆங்கில வார்த்தைகளைக் கையாள்வதில் நீதிமன்றம் இவ்வளவு கவனக் குறைவாக இருந்திருக்கக் கூடாது. அந்த ஒரு வார்த்தையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு எதிர்த் தரப்பினர் குற்றவாளியை நீதிமன்றத்தில் நிரபராதியாக மாற்றிவிட்டனர். நீதிமன்றங்களும் சில சமயங்களில் இது போன்ற வழக்குகளில் மறு ஆய்வு செய்யாமல், விசாரணையை முழுமையாக மேற்கொள்ளாமல், நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு ஆதாரங்களைத் தேடுகின்றன. இத்தகைய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தின் விசாரணைக் குறைபாட்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

போக்சோ சட்டம்

வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் படிப்பறிவில்லாதவர் என்று தெரிகிறது. அதனால், அவரால் உடனடியாக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாமல் போயிருக்கிறது. மேலும், இந்தத் தீர்ப்பு முழுமையாக விசாரிக்கப்படாமல் தவறுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றவாளி என்று தற்போது உறுதியாகியிருப்பதால் அவரை விடுதலை செய்து முன்னதாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி இந்த வழக்கை முடித்துவைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

அச்சுப்பிழை காரணமாக நீதிபதிகள் குற்றவாளியை விடுதலை செய்திருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Also Read: திருமணம் செய்வதாக மாணவி சிறார் வதை... தோழியுடன் எஸ்கேப் ஆன பா.ஜ.க பிரமுகரின் மகன்!



source https://www.vikatan.com/news/judiciary/madras-hc-fixes-error-after-semen-mistype-gets-man-acquitted

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக