Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

`உலகின் முக்கிய தருணங்களை நம் கண்முன் நிறுத்திய டேனிஷ் சித்திக்... கொண்டாடப்பட வேண்டியவர்' - ஏன்?!

மொழிகளின் துணையோடு எழுத்தின் வழி செய்தி சொல்லலாம். ஆனால், மொழிகளைக் கடந்தும் புகைப்படங்களால்தான் செய்தி சொல்ல முடியும். அவ்வாறு புகைப்படங்கள் வழி உலகின் முக்கியத் தருணங்கள் பலவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்.

பணியின் பொருட்டு ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற சித்திக், தாலிபன்களால் கொல்லப்பட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் மெல்ல மெல்லக் கைப்பற்றிவருவதாகச் செய்திகள் வர, அது குறித்துச் செய்தி சேகரிக்க நேரடியாக அங்கு சென்றார் சித்திக்.

புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்

Also Read: தாலிபன்- ஆப்கன் மோதல்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்!

ஆப்கன் காவல்துறையினர் சிலரைப் பிடித்துவைத்திருந்தது தாலிபன் படை. ஜூலை 13-ம் தேதியன்று அவர்களை மீட்கச் சென்ற மிஷனில் ஆப்கன் ராணுவத்தினருடன் இணைந்து சென்றிருக்கிறார் டேனிஷ். அப்போது ஆப்கன் ராணுவ வாகனங்களை வெறிகொண்டு தாக்கியிருக்கிறார்கள் தாலிபன்கள். டேனிஷ் இருந்த வாகனமும் தாக்கப்பட்டிருக்கிறது. அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவர், அது குறித்த தனது அனுபவங்களை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அன்றிலிருந்து இரண்டு தினங்கள் கழித்து, ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் நடந்த மற்றொரு மிஷனில் ஆப்கன் ராணுவத்துக்கும், தாலிபன்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பரிதாபமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் சித்திக்.

அழுகை, மகிழ்ச்சி, கோபம், காதல் உள்ளிட்ட அத்தனை உணர்ச்சிகளையும் தன் கேமரா வழி பதிவு செய்திருக்கிறார் டேனிஷ் சித்திக். சமூக வலைதளங்களில், நாம் பார்த்த, நாம் பகிர்ந்த புகைப்படங்களில் பலவும் இவர் எடுத்ததாக இருக்கலாம். நமக்கே தெரியாமல் நம்முடன் புகைப்படங்களின் வழியே சிறு பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டவர் சித்திக்.

மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்திக், டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் ஏ.ஜே.கே ரிசர்ச் சென்டரில் மாஸ் கம்யூனிக்கேஷன் பட்டம்பெற்றவர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய சித்திக், உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பயணப்பட்டு தன் கேமரா லென்ஸ் வழியே பல செய்திகளைச் சொல்லியிருக்கிறார்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் கொல்லப்பட்டதையும், அவர்கள் அகதிகளாக்கப்பட்டு, கடல் கடந்து வங்கதேசம் வந்ததையும் படம் பிடித்தவர் இவரே. அவற்றில் ஒரு புகைப்படம் உலகப் புகழ்பெற்றது. அகதியாக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் கடல் கடந்து வந்த பெண் ஒருவர், கடல் மண்ணைத் தொட்டுப் பார்ப்பதுபோல இருக்கும் புகைப்படம்தான் அது.

Rohinghya refugee

`இதைத்தான் இந்த உலகுக்குக் காட்ட நினைத்தேன்' என்று அந்தப் புகைப்படம் பற்றிப் பகிர்ந்திருந்தார் சித்திக். ரோஹிங்கியா மக்கள் பட்ட கஷ்டங்களை உலகறியச் செய்த புகைப்படங்களுக்காக, பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான `புலிட்சர்' விருதைப் பெற்றார்.

`புலிட்சர்' விருதுபெற்ற முதல் இந்தியப் புகைப்படக் கலைஞர் என்ற பெருமையை அட்னான் அபிடியுடன் (Adnan Abidi) பகிர்ந்துகொண்டார் சித்திக்.
டெல்லி கலவரம்

ஆப்கன் உள்நாட்டுப் போர், ஹாங்காங் போராட்டம், இராக் போர், நேபாள நிலநடுக்கம் உள்ளிட்டவற்றைத் தன் உயிரைப் பணயம்வைத்து படம் பிடித்தவர் சித்திக். 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த டெல்லி கலவரத்தில், துப்பாக்கி எடுத்து நீட்டிய இளைஞரைக் கண்டு காவலர்களே சற்று விலகி நின்றனர். ஆனால், துப்பாக்கி ஏந்திய நபருக்கு எதிராக நின்று தன் கேமராவை ஏந்திப் படம் பிடித்தார் சித்திக்.

அகதிகள்

கொரோனா ஊரடங்கால் செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சாலைகளில் இறங்கி நடந்தே தங்கள் மாநிலங்களுக்குச் சென்றனர். அந்தக் காட்சிகளைப் படம்பிடித்து, புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களில் சித்திக் முக்கியமானவர்.

அதேபோல, இந்தியாவில் கோரத் தாண்டவம் ஆடி, பல உயிர்களை பலிகொண்ட கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை, ஒற்றைப் புகைப்படத்தின் வழி உலகறியச் செய்தார் சித்திக். அந்தச் சமயத்தில் கொத்துக் கொத்தாகப் பிணங்கள் எரிக்கப்பட, அதைத் தன் கேமராக்களில் படம் பிடித்தார் சித்திக். இதன் மூலம் இந்தியாவில் நிகழும் கொரோனா உயிரிழப்புகளை வெளிச்சம்போட்டுக் காட்டினார். சர்வதேச ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் ஊடகங்கள் வரை சித்திக் எடுத்த இந்தப் புகைப்படங்களைவைத்து செய்திகள் வெளியிட்டன.

டேனிஷ் எடுத்த புகைப்படம்

Also Read: தென்னாப்பிரிக்கா கலவரம்: `ஜூமா கைது', `பெருந்தொற்று', `வறுமை' - உண்மை பின்னணி என்ன?!

போட்டோ ஜர்னலிசத்தின் மீதிருக்கும் காதலால், தன் உயிரைப் பற்றிக்கூடக் கவலைகொள்ளாமல், மக்கள் பிரச்னைகளை முன்னின்று படம் பிடித்து உலகுக்குக் கொண்டு சேர்த்தார்.

இன்று சித்திக் மறைந்திருந்தாலும், அவரது புகைப்படங்கள் எதிர்காலச் சந்ததியினருக்குப் பல கதைகள் சொல்லும். புகைப்படக் கலைஞராக ஆக விரும்பும் ஒவ்வொரு இளைஞருக்கும் சித்திக் முன்மாதிரியாக இருப்பார். எனவே, காலம் கடந்தும் கொண்டாடப்படும் கலைஞர்களுள் ஒருவராக டேனிஷ் சித்திக்கின் பெயர் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை!


source https://www.vikatan.com/social-affairs/miscellaneous/article-about-photo-journalist-danish-siddiqui

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக