Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

நெல்லை: வழக்கறிஞர் காலை உடைத்த போலீஸ்! - 3 ஆண்டுகளுக்கு பின்னர் 8 பேர் மீது வழக்கு

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள மாறன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் என்ற செம்மணி. வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்து வருகிறார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் அவர்  ஆஜராகி வந்தார்.

இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ்

கடந்த 2017-ம் ஆண்டு வள்ளியூர் டிஎஸ்பி குமார், பணகுடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் ஆகியோர் மீது வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட வகையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.அதனால் ஆத்திரமடைந்த ஸ்டீபன் ஜோஸ், அவர் வழக்குப் பதிவு செய்த அன்று இரவில் செம்மணியின் வீட்டுக்குச் சென்று அவரை அடித்து இழுத்துள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில், போலீஸாரின் அத்துமீறலை, வழக்கறிஞர் செம்மணியின் துணைவியார் செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறார். அதனால், அந்த போனை வாங்கி தரையில் அடைத்து உடைத்த இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஜ், பெண் என்று பாராமல் அவரையும் கையை முறுக்கித் தாக்கியுள்ளார். 

கால் உடைக்கப்பட்ட வழக்கறிஞர் செம்மணி

பின்னர், செம்மணியை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ராதாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு வைத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-கள் மற்றும் போலீஸார் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராதாபுரம் காவல்நிலையத்துக்கு வழக்கறிஞர்கள் திரண்டு வந்ததால் அவரை அங்கிருந்து உவரி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று அங்கு வைத்தும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவரை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். 

வழக்கறிஞர்கள் போராட்டம்

எந்தவித வழக்கும் இல்லாமல் செம்மணி கைது செய்யப்பட்டது தொடர்பாக வள்ளியூர் வழக்கறிஞர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், வள்ளியூர் குற்றவியல் நடுவரிடம் இதுகுறித்து முறையிட்டனர்.

நீதிபதியின் உத்தரவின்படி, 5 பேர் கொண்ட வழக்கறிஞர் குழுவினர், செம்மணியை மீட்க உவரி காவல் நிலையத்துக்குச் சென்றார்கள். அங்கு, செம்மணி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததைப் பார்த்தார்கள். 

வழக்கறிஞர்களுடன் செம்மணி

அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதில், இடது கால் எலும்பு முறிந்து நடக்க முடியாமல் இருந்ததைப் பார்த்தார்கள். காவல்நிலையத்தில் இருந்து அவரை மீட்ட வழக்கறிஞர்கள் குழுவினர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Also Read: சாத்தான்குளம்: `கண்ணைக்கட்டி, காட்டுப்பகுதியில் அடித்தனர்!’ - அடுத்த சர்ச்சையில் போலீஸார்

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒரு வாரம் அனுமதிக்கப்பட்ட செம்மணி தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார். செம்மணியை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனால், அவரிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

டி.எஸ்.பி குமார்

இந்த நிலையில், வள்ளியூர் டிஎஸ்பி-யாக இருந்து இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான டி.எஸ்.பி குமார் பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவங்கள் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 3 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இது தொடர்பாக வழக்கறிஞர் செம்மணி சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். அதனால், உயர் நீதிமன்றத்துக்குச் சென்று முறையிட்டு வழக்குப்பதிவு செய்வதற்கான ஆணையைப் பெற்றார். 

கால் உடைந்த நிலையில் வழக்கறிஞர் செம்மணி

அதனால், நெல்லை மாவட்ட சிபிசிஐடி போலீஸார் காவல்துறை டிஎஸ்பி-யான குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், 3 சப் இன்ஸ்பெக்டர்கள், மூன்று காவலர்கள் என 8 பேர் மீது கொலை முயற்சி உட்பட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு நியாயம் கிடைக்கும் என வழக்கறிஞர் செம்மணி நம்பிக்கை தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/nellai-cbcid-filed-case-against-police-officials-over-attacking-advocate-after-3-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக