நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு எதிராக, பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு வரும் எட்டாம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் நீட் தேர்வு உருவாக்கிய பாதிப்புகளை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீட் தேர்வின் சாதக, பாதகங்கள் பற்றி மக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் 85,000-க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்திருக்கின்றன. இந்த சூழலில்தான், ‘நீட் கமிட்டிக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், ‘மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை அந்தக் குழுமத்திடம்தான் தெரிவிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இதை மீறும் வகையில் குழு அமைத்துள்ளது. இதை அனுமதிக்கக் கூடாது’’ என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த ஜூன் 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், `உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?’ என்று கேள்வியை எழுப்பியதுடன், விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Also Read: நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்த முயன்ற நந்தினி கைது; என்ன நடந்தது?
இந்தநிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து மத்திய அரசு வரும் எட்டாம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் பேசும்போது, ''இப்படியொரு கமிட்டியை நியமிப்பதற்கு சட்டப்படி உச்ச நீதிமன்றத்திடமோ, ஒன்றிய அரசிடமோ அனுமதி வாங்க வேண்டிய அவசியமே இல்லை. மாநிலப் பட்டியலில் வருகின்ற விஷயங்களாக இருந்தால் சட்டமியற்றிய பின் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றால் போதுமானது.
பொதுப்பட்டியலில் வருகின்ற விஷயங்களாக இருந்தால் சட்டமியற்றியபின் மத்திய அரசின் ஒப்புதல் வாங்கவேண்டும். அவசரச் சட்டம் என்றால் மட்டுமே, சட்டம் இயற்றுவதற்கு முன்பாக மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏ.கே.ராஜன் கமிட்டி இன்னும் முடிவுகளையே வெளியிடவில்லை. அதற்குள்ளாக பா.ஜ.க-வினர் அந்தக் கமிட்டியை எதிர்ப்பதை ஏற்க முடியாது’’ என்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/neet-exam-need-permission-from-the-sc-to-set-up-a-committee-what-does-the-law-say
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக