உடைந்த கொம்பன், சங்கர் ஆகிய பெயர்களில் பந்தலூர் மக்களால் அழைக்கப்பட்டு வந்த பிரமாண்டமான ஆண் காட்டுயானை ஒன்று, கடந்த ஆண்டு இறுதியில் அடுத்தடுத்து மூன்று நபர்களை தாக்கி கொன்றது. இந்த காட்டுயானையால் மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நடைபெறும் என எண்ணிய வனத்துறையினர், இந்த யானையைப் பிடிக்க `ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்' என்ற பெயரில் களமிறங்கி 3 மாதங்கள் போராடி இந்த காட்டுயானையை கடந்த பிப்ரவரி மாதம் பிடித்தனர்.
Also Read: மயக்க ஊசி; தீவிர கண்காணிப்பு; ‘உடைந்த கொம்பன்’ சங்கர் மீட்கப்பட்ட பின்னணி! #VikatanPhotoStory
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயரண்யம் பகுதியில் பிரத்யேக `க்ரால்' எனப்படும் மரக்கூண்டில் அடைத்தனர். மரக்கூண்டில் அடைக்கப்பட்டும் பல நாள்களாக ஆக்ரோஷம் குறையாமல் இருந்த இந்த யானை,உணவு உட்கொள்ளாமல் இருந்தது. படிப்படியாக யானையின் அருகில் நெருங்கி உணவு,தண்ணீர் கொடுக்க ஆரம்பித்தனர். பின்னர் கும்கி பயிற்சியும் அளித்து வந்தனர்.
தற்போது பாகனின் கட்டளைக்கு கட்டுப்படத் துவங்கியுள்ளது. இனி கூட்டில் வைக்க வேண்டிய தேவை இல்லை என்பதால்,தொடர்ந்து 140 நாள்களாக மரக்கூண்டு சிறையில் அடைப்பட்டிருந்த காட்டுயானையை கும்கியாக மாற்றி நேற்று காலை க்ராலில் இருந்து முதல் முறையாக வெளியில் அழைத்து வந்தனர்.
இந்த யானையை அடைத்து வைக்கப்பட்டிருந்த க்ராலைச் சுற்றி பாதுகாப்புக்காக 7 வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டு, பாரம்பரிய வழக்கப்படி வழிபாடு செய்து கரும்புகளை கொடுத்து வெளியில் அழைத்து வந்தனர். இந்த யானையின் முதல் பாகனாக 29 வயதான விக்ரம் என்ற பழங்குடி இளைஞர் பொறுப்பேற்றுள்ளார். சோமன் என்ற மற்றொரு பழங்குடியை காவடியாக நியமித்துள்ளனர்.
140 நாள்களாக க்ராலுக்குள் பயிற்சி அளித்து வந்த பாகன் விக்ரம் நம்மிடம் பகிர்கையில், ``ஆரம்பத்துல ரொம்ப முரண்டு பிடிச்சது. படிப்படியா குறைஞ்சு இப்போ பழக்கத்துக்கு வந்துருச்சி. நல்லா பேச்சை கேக்க ஆரம்பிச்சது. அதனால வெளிய கொண்டுவர முடிவு செஞ்சி, நேற்று காலைல வெளிய கொண்டுவந்தோம். முதல் முறையா வெளிய வந்ததும் ஒரு பிரச்சனையும் செய்யாம சாப்பிட ஆரம்பிச்சது. இன்னும் சில மாசம் தொடர்ந்து கும்கி பயிற்சி கொடுத்தால் முழு கும்கியாக இது மாறிடும்"என்றார்.
Also Read: ̀ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே!' - வனத்துறையை பின்வாங்க வைத்த `பாகுபலி' யானை
இந்த யானை குறித்து பேசிய முதுமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் கவுஷல், ``மூணு பேர தாக்கி கொன்றதாலேயே இந்த காட்டுயானையைப் பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இனி இதை கூண்டுக்குள் அடைத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த யானைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இன்னும் ஒருசில மாதங்களில் கும்கியாக பயன்படுத்தப்படும்"என்றார்.
source https://www.vikatan.com/news/animals/elephant-shankar-released-from-cage-after-140-days-now-it-turned-into-kumki
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக