'தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உயிரை மாய்த்து கொள்வதாக காளி கோயிலில் வேண்டிய எடுத்த ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர், கடிதம் எழுதி வைத்துவிட்டு அந்த கோயிலில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததற்காக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த வனிதா எனபவர், தனது நாக்கை அறுத்து பரமக்குடி முத்தாலம்மன் கோயில் உண்டியலில் நேர்த்திக்கடன் செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கரூர் மனிதரின் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டம், லாலாபேட்டையைச் சேர்ந்தவர் உலகநாதன் (வயது: 60). போக்குவரத்துத்துறையில் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில், குடும்பத்தினரோடு, லாலாபேட்டையில் வசித்து வருகிறார். இவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மண்மங்கலம் புது காளியம்மன் ஆலயத்தில், தீக்குளித்து உயிரை காணிக்கையாக செலுத்துவதாக தனக்கு தானே பிரார்த்தனை செய்துள்ளார். இதுகுறித்து, யாரிடமும் தெரிவிக்காமல் ரகசியம் காத்து வந்துள்ளார். இந்த நிலையில், தி.மு.க ஆட்சி அமைத்ததால், தனது வேண்டுதலால் தான் தி.மு.க ஆட்சி அமைத்து, முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுள்ளதாக நினைத்து, புதுகாளியம்மன் கோயில் கருவறைக்கு பின்னே தீக்குளித்து அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நல்ல நாள் பார்த்து உலகநாதன் காத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஆனி அம்மாவாசையான நேற்று (ஜூலை - 9) கோவிலுக்கு, சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு, உலகநாதன் வெளியே சென்றுள்ளார்.
பின்னர், காலை 11 மணி அளவில் மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவிலுக்குள், பெட்ரோல் கேனுடன் நுழைந்துள்ளார். கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கு பணியிலிருந்த கோவில் ஊழியர்கள் தீயை அணைக்க கடும் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் முயற்சிக்கு பலனில்லாமல், உடல் முழுவதும் எரிந்து உலகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அறிந்த, வாங்கல் காவல் நிலைய போலீஸார், உலகநாதன் உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, அங்கிருந்த உலகநாதன் கைப்பட எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி, விசாரணையை தொடங்கினர்.
Also Read: கரூர்: 'பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பா.ஜ.கவினர்! - கடுகடுத்த ஆட்சியர்
அவர் எழுதிய கடிதத்தில், 'மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு வணக்கம். சட்டபேரவைத் தேர்தல் அறிவித்த உடனேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என எண்ணியிருந்தேன். கரூர் தொகுதியில் மாவட்ட செயலாளர் வி. செந்தில் பாலாஜி வெற்றி வாகை சூடி அமைச்சராக வேண்டும் என மண்மங்கலம் காளியம்மன் கோயிலில் வேண்டுதல் வைத்திருந்தேன். அதாவது, தி.மு.க தனிப்பெரும் எம்.எல்.ஏக்களை பெற்று, ஆட்சி அமைத்து, கரூர் அதிர்ஷ்ட வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்று, அன்பு தம்பி அமைச்சராக வேண்டும் என்று வேண்டினேன். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினை தரம் தாழ்ந்து பேசியது, மின்வெட்டு குறித்த விளம்பரம் ஆகியவற்றை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பியும் தி.மு.கவே வெற்றி பெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பெரும்பான்மையோடு, பதவி ஏற்றதை பார்த்த அண்ணியார் துர்கா ஸ்டாலின், ஆனந்தக் கண்ணீர் வடித்ததை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நிலையில், ஸ்டாலின் பதவியேற்பு சமயத்தில் கோவிட் - 19 தொற்று, 30 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. அதனால், தொற்று குறைந்து அனைவரும் நலமடைந்த பிறகு, என் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம் என என் வேண்டுதலை காலதாமதப்படுத்திவிட்டேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு தொண்டன் உயிர்மூச்சு உள்ளவரை, தி.மு.க ஆட்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
நான் காளியின் அருள் பெற்றவன். நான் சொல்வது நடந்துகொண்டே இருக்கும். நான் செய்த வேண்டுதல் நிறைவேறியதால், சுயநினைவுடன் உயிரிழப்பை தேடுகிறேன். மேலும், எனது இரண்டாவது மகன் விழுப்புரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலராக நல்ல முறையில் பணியாற்றி வருகிறான். அவனை கரூர் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நேரடி பார்வையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே எனது இறுதி ஆசை. போக்குவரத்துத்துறை நண்பர்கள், அலுவலர்கள், என் உறவினர்கள், திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வி.செந்தில் பாலாஜி ஆகியோருக்கு கோடான கோடி நன்றியுடன், தங்கள் அடிமட்ட தொண்டன், உலகநாதன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகநாதன்தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ள புதுகாளியம்மன் கோயில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் குலதெய்வக் கோயில் என்று சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜியின் சொந்த ஊரும் அங்கிருந்து மூன்று கிலோமீட்டரில் வரும் ராமேஸ்வரப்பட்டிதான். இந்த நிலையில், இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட கரூர் மக்கள், 'இதெல்லாம் முட்டாள்தனம். இதுக்காகவெல்லாம் போய் தற்கொலை பண்ணுவார்களா?. பாவம், அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகள் என்ன பாடுபடுவாங்க?' என்று கூறி, வருத்தபடுகிறார்கள். தி.மு.க கட்சி வெற்றி பெற்றதற்காக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
Also Read: மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல் - நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்திய பெண்!
source https://www.vikatan.com/news/crime/karur-old-man-suicide-for-dmk-victory-what-happened-in-karur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக