Ad

சனி, 10 ஜூலை, 2021

`குழந்தை வேண்டும்' என நிர்பந்திக்கும் குடும்பம்; முடிவு `என் உரிமை' இல்லையா?! #PennDiary - 23

எங்கள் வீடு கூட்டும் குடும்பம். பெரியப்பா, அப்பா இருவரும் இப்போது வரை ஒரே வீட்டில் வசிக்கின்றனர். பெரியப்பாவுக்கு இரண்டு மகன்கள். இருவரும் திருமணம் முடிந்து வெளிநாட்டில் வசிக்கிறார்கள். எங்கள் வீட்டில் அக்காவும் நானும் என இரண்டு பெண் பிள்ளைகள். எங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் வேறு வேறு நகரங்களில் வசிக்கிறோம்.

எனக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. யூ.பி.எஸ்.சி பரீட்சை எழுதி, மத்திய அரசுப் பணி பெற வேண்டும் என்பது என் லட்சியம். ஆனால் எங்கள் வீட்டில், `பிள்ளைகளை திருமணம் முடித்து எங்கள் கடமையை முடிக்க வேண்டும், நீ திருமணத்துக்குப் பின் படித்துக்கொள்' என்று கூறி, மாப்பிள்ளை பார்த்து, திருமணம் முடித்தனர். திருமணத்துக்கு முன் என் கணவரிடம், என் யூ.பி.எஸ்.சி முயற்சி பற்றி கூறினேன். `தாராளமாக திருமணத்துக்குப் பின் படி. என் மனைவி ஐ.ஏ.எஸ்/ஐ.ஆர்.எஸ் என்று வெற்றிபெற்றால், அது எனக்கு எவ்வளவு பெருமை' என்றார்.

Marriage (Representational Image)

என் மாமனார், மாமியார் சொந்த ஊரில் இருக்க, நானும் என் கணவரும் அவரது வேலை காரணமாக ஆந்திராவில் ஒரு நகரத்தில் இருக்கிறோம். நான் என் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருப்பதால், குழந்தை இப்போது வேண்டாம் என்று முடிவெடுத்தேன். கணவர் சம்மதித்தார். நான் ஒரு கல்லூரியில் பேராசிரியராகவும் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்த வருமானம், என் தேவைகளுக்கு என் கணவரை நான் எதிர்பார்த்து இருக்காமல் இருக்க கைகொடுக்கிறது. மேலும், இப்போது ஆன்லைன் வகுப்புகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன என்பதால், நான் தேர்வுக்குத் தயாராகவும் எனக்கு நேரம் கிடைக்கிறது.

இந்நிலையில், திருமணமான மூன்று மாதங்களிலேயே `ஏதாச்சும் விசேஷம் இருக்கா..?' என்ற கேள்விகள், எங்கள் இரு வீடுகளிலிருந்தும் வர ஆரம்பித்தன. அவர்களிடம் மழுப்பவோ, சமாளிக்கவோ நான் நினைக்கவில்லை. இரு வீட்டிலுமே, நான் போட்டிக்குத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருப்பதால், இப்போது குழந்தை வேண்டாம் என்ற முடிவை எடுத்திருப்பதை தெளிவாகவும், தீர்க்கமாகவும் தெரிவித்துவிட்டேன்.

இப்போது எங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் முடிந்துவிட்டது நிலையில், என் கணவரிடமிருந்து எனக்குக் குழந்தை குறித்த அழுத்தம் வர ஆரம்பித்திருக்கிறது. உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அது பற்றி விசாரிப்பதாகவும், எனவே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார். உறவினர்கள், நண்பர்களின் விசாரிப்புகளுக்கு எல்லாம் என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும், குறைந்தபட்சம் மூன்று முயற்சிகளில் நான் போட்டித் தேர்வில் வெற்றிபெற இலக்கை நிர்ணயித்து படித்துக்கொண்டிருப்பதால், இன்னும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு நிச்சயமாக என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டேன்.

`நீ குழந்தை பெற்ற பின்னர் கூட படிக்கலாம்', `குழந்தையை பெற்று மட்டும் கொடுத்துவிடு, பின்னர் நாங்கள் வளர்த்துக் கொடுக்கிறோம், நீ தொடர்ந்து படி', `எத்தனையோ பெண்கள் குழந்தை பெற்ற பின்னரும் சாதனை படைத்துள்ளார்கள்' என்று கணவர் உட்பட எல்லா பக்கங்களில் இருந்தும் இப்போது எனக்கு அறிவுரைகள், அழுத்தங்கள் வர ஆரம்பித்துள்ளன. அவர்கள் எல்லாம் என் மீது உள்ள அக்கறையில் இப்படி சொல்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். அவர்கள் எல்லாம் இந்த சமூக வழக்கத்தின் திசையிலிருந்து வேறு திசையில் நான் ஓர் அடி எடுத்துவைக்க நினைப்பதால் பதறுகிறார்கள் என்றே நான் சொல்வேன். அக்கறையோ, ஸ்டிரியோடைப்போ... எதுவாக இருந்தாலும் ஓர் எல்லைக்குத்தான். அதை ஓர் ஆலோசனையாக எனக்கு அவர்கள் கொடுக்கலாம். ஆனால் நிர்பந்தமாக, கட்டாயமாக மாற்றக் கூடாது அல்லவா?

Woman (Representational Image)

Also Read: திருமணத்தில் சகோதரி எடுத்த அவசர முடிவு, திடீர் மணப்பெண்ணான நான்; தீராத உறவுச் சிக்கல்கள்! #PennDiary

என் வீட்டில், என் அண்ணன்களை திருமணம் செய்துகொண்டு வந்த என் இரண்டு அண்ணிகளையும், என் அக்காவையும் பார்த்திருக்கிறேன். அனைவருமே, திருமணத்துக்கு முன் தங்களுக்கென்று ஒரு விருப்பப் பாதையை வைத்திருந்தவர்கள். அதற்கான திறமை, முயற்சியும் அவர்களிடம் இருந்தது. ஆனால், திருமணத்துக்குப் பின் எவ்வளவு விரைவாக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்களோ, அப்போதுதான் அவர்கள் ஒரு முழுமையான பெண் ஆவார்கள் என்ற சமுதாய நிர்பந்தங்களால், கர்ப்பம், குழந்தை, குழந்தை வளர்ப்பு என்று ஆனார்கள். அதில் தங்களின் விருப்பம், சுயம் எல்லாம் தொலைத்து, இப்போது `குழந்தைக்காக' என்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், அவர்கள் மூவரும், மற்றும் என் உறவு, நட்பு வட்டத்தைச் சேர்ந்த இன்னும் சில பெண்களும், `உன் முடிவு சரிதான், எங்களைப்போல நீயும் ஆகிவிடாதே' என்று என் உடன் நிற்பது எனக்குப் பெரிய ஆச்சர்யம், ஆதரவு.

மேலும், என் போட்டித் தேர்வுகளுக்காக என்று இல்லை, அந்த முயற்சி இல்லாமல் இருந்தாலும்கூட, எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவை எடுப்பதை என் உரிமை என்றே நான் நினைக்கிறேன். `ஆனால் இதில் உன் கணவரின் விருப்பம், ஆசை, முடிவும் இருக்கிறது அல்லவா?' என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். நாங்கள் திருமணத்தின் போது சென்னையில் இருந்தோம். நான் அங்கு ஒரு பிரபல பயிற்சி மையத்தில் என் போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெற சேர்ந்தேன். ஆனால், அவருக்கு ஆந்திராவுக்கு வேலை மாற்றலாக, அந்தப் பயிற்சியை நான் கைவிட்டு, இங்கு வந்து குடியேறினோம். இங்கு நாங்கள் வசிக்கும் நகரில் போட்டித் தேர்வுப் பயிற்சிகளுக்கு சிறந்த பயிற்சி நிலையங்கள் இல்லை. எனவே, என் கற்றலை நான் ஆன்லைனில் தொடர்கிறேன். என் கணவர் இப்போது வெளிநாடு செல்ல முயன்று கொண்டிருக்கிறார். இன்னும் ஆறு மாதங்களில் அவ்வாறு அவர் செல்லும்போது, என்னை என் பெற்றோருடன் சென்று இருக்குமாறு கூறியுள்ளார்.

இப்படி, அவர் வேலை, வேலையில் முன்னேற்றம் சார்ந்த முடிவுகளை எல்லாம் அவர் விருப்பப்படிதானே அவர் எடுக்கிறார்? அதை நான் ஏற்றுக்கொண்டு, அதற்கு தக்கபடிதானே என் தேர்வுகளை அட்ஜஸ்ட் செய்துகொள்கிறேன், மாற்றிக்கொள்கிறேன்? நான் மட்டுமா... பெரும்பான்மையான வீடுகளில் கணவர் தன் வேலை, தொழில், புரமோஷன் சார்ந்து எடுக்கும் முடிவுகளைத்தானே மனைவிகள் ஏற்றுக்கொள்கிறோம்? குறிப்பாக, குழந்தை விஷயத்தில். முதலில் பெண் குழந்தை பிறந்துவிட்டால், பின்னர் ஓர் ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பமும் முடிவும் கணவர், கணவர் வீட்டினருடையதாக இருக்கிறது. சில குடும்பங்களில், இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பின்னரும், மூன்றாவதாக ஆண் குழந்தை வேண்டும் என்ற முடிவும், பிடிவாதமும், வன்முறையும் பெண்கள் மீது திணிக்கப்படுகிறது. மேலும், சில ஆண்கள், `இப்போது குழந்தை வேண்டாம்', `ஒரே ஒரு குழந்தை போதும்' என்ற முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அப்போது எல்லாம், `மனைவியின் விருப்பத்தையும் கேட்க வேண்டுமல்லவா' என்று எழாத குரல்கள், அதுவே ஒரு மனைவி குழந்தை குறித்த முடிவை எடுக்கும்போது மட்டும், `கணவரின் விருப்பத்தை கேட்க வேண்டும்' என்று முந்திக்கொண்டு வருவதும், அந்தப் பெண்ணை குற்றவாளிபோல ஆக்குவதும் ஏன்?

woman (Representational image)

Also Read: காத்திருக்கும் காதலன், நெருங்கும் முகூர்த்தம்; என் வாழ்க்கை யார் கையில்? #PennDiary - 22

சமீபத்தில் வெளிவந்த, குழந்தை பெற்றுக்கொள்வதும், அதை தவிர்ப்பதும் பெண்களின் முடிவு, உரிமை என்பதை வலியுறுத்திய `சாரா'ஸ்' மலையாளத் திரைப்படம், என் போன்ற பெண்களின் பிரச்னைகளை பேசியது ஆசுவாசமாக இருந்தது. இந்தக் கடிதத்தை, என் பிரச்னையை நான் பொதுவெளியில் பகிரும் தைரியம் தந்தது அந்தப் படமே எனலாம். வழக்கமான `பெண் டைரி' போல, என் பிரச்னைக்கு உங்களிடம் நான் தீர்வு கேட்கப்போவதில்லை. ஆனால், என்னுடைய இந்த முடிவில் உடன்படுபவர்கள், வேறுபடுபவர்களையே காரணத்துடன் அறிய விரும்புகிறேன். பேசப்படாத பெண்களின் பிரச்னைகளை பேசவைக்க விரும்புகிறேன்.

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.


source https://www.vikatan.com/lifestyle/women/a-woman-shares-how-she-faced-pressure-from-her-family-regarding-pregnancy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக