Ad

சனி, 17 ஜூலை, 2021

மதுரை: "மத்திய அரசுத்துறைகளின் இந்தித் திணிப்பால் அவதிப்படுகிறோம்"- ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள்!

சமீபகாலமாக தமிழ்நாட்டிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசுத்துறைகளில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்தியில் தகவல் வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

ரயில்களால் யானைகள் மரணமடையும் சம்பவங்கள் பற்றி சில மாதங்களுக்கு முன் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சடத்தின் கீழ் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே கோட்டங்கள் இந்தியில் பதில் அளித்து அதிர்ச்சி அளித்தனர்.

இந்தி மொழி

கடந்த மாதம் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணனுக்கும் இதுபோல் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளித்தது மட்டுமல்லாமல், தபால் முகவரியில்கூட இந்தி திணிக்கப்பட்டு இருந்தது சர்ச்சையை உருவாக்கியது. அது மட்டுமில்லாமல் தமிழக எம்பிக்களின் கடிதங்களுக்கு மத்திய அரசு அதிகாரிகள் இந்தியில் பதில் அளிப்பதாகப் புகார் எழுந்தது.

இந்நிலையில் இந்திய அலுவல் மொழிகள் சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமூக ஆர்வலர் பாண்டியராஜா பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

ஆர்.டி.ஐ

இதுபற்றி பாண்டியராஜா கூறுகையில், "உள்துறை அமைச்சகம் இந்தக் கேள்விகளை மத்திய அலுவல் மொழிகள் துறைக்கு அனுப்பி வைத்தது. அதற்கு அவர்கள் அளித்த பதிலில், 'இந்தியாவிற்கு என தேசிய மொழிகள் எதுவும் கிடையாது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், எந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்பது பற்றி மத்திய அலுவல் மொழிகள் துறை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்தால் தகவல் தரும் அதிகாரிக்கு எந்த தண்டனையும் கிடையாது. 'அலுவல் மொழி விதிகள் -1976' தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்று அவர்கள் அனுப்பிய பதிலில் அறிவித்துள்ளது.

பாண்டியராஜா

"அனைத்து பிராந்திய மொழிகளும் முக்கியம். தமிழ் மொழியைக் கற்று கொள்ளவில்லை என மிகவும் வருந்துகிறேன். தொன்மையான தமிழுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்" எனப் பேசுகிறார் பிரதமர். ஆனால், சமீபகாலமாக இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாக மத்திய அரசு மீது புகார் தொடர்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இந்தி திணிக்கப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும். தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும். தமிழக எம்பிக்கள் அனைவரும் தொடங்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும். கோவின் இணைய தளத்தில் முக்கிய பிராந்திய மொழிகள் இணைக்கப்பட்டது போல் தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் தமிழ் சேர்க்கப்பட வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/rti-activist-says-that-we-are-struggled-due-to-the-hindi-impulsion-in-the-central-government-departments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக