Ad

சனி, 17 ஜூலை, 2021

`` `நீயெல்லாம் விவசாயம் செய்யப்போறியா?'ன்னு கேட்டாங்க; ஆனா, இப்போ..!" - அசத்தும் பட்டதாரி இளைஞர்

``விவசாயமே பிரதான தொழிலா இருக்கிற எங்க ஊர்லயே, `நீயெல்லாம் விவசாயம் செய்யப் போறியா? பிழைக்கத் தெரியாதவனா இருப்பபோல'ன்னு என்னை ஏளனமா பேசினவங்கதான் அதிகம். ஆனா, அதையெல்லாம் நான் கண்டுக்கல. சின்ன வயசுல இருந்தே நான் வீட்டுல இருந்ததைவிட எங்க தோட்டத்துல இருந்ததுதான் அதிகம். இந்த வாழ்க்கை முறையே எனக்குப் பிடிச்சுப்போனதால, நிறைய எதிர்ப்புகள் இருந்தும்கூட, விடாப்பிடியா முழுநேர விவசாயியா மாறிட்டேன்" என்று உற்சாகம் பொங்க கூறும் மணிகண்டன், ஊட்டியைச் சேர்ந்த 23 வயதே ஆகும் இளம் விவசாயி. கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, மனதுக்குப் பிடித்த விவசாய பணிகளில் களமிறங்கியவர்.

விவசாய வேலையில் மணிகண்டன்

நான்கரை ஏக்கர் நிலத்தில் மலைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் இவர், தனியாளாகவே வெற்றிகரமாக விவசாயம் செய்து அசத்துகிறார். ஊட்டியின் மையப்பகுதியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை மார்க்கத்தில் இருக்கும் தோட்டத்தில் விவசாய வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்த மணிகண்டனைச் சந்தித்தோம்.

``என்னுடையது பூர்வீக விவசாயக் குடும்பம். பெற்றோர் படிக்காதவங்க. எங்க சொந்த நிலம் பத்து ஏக்கர்ல என்னோட அப்பா மலைப் பயிர்களைச் சுழற்சி முறையில சாகுபடி செய்வார். சின்ன வயசுல இருந்தே நானும் தம்பியும் பெற்றோர் கூட விவசாய வேலைக்கு உதவி செய்வோம். அந்த அனுபவத்துல விவசாய வேலைகள் எல்லாத்தையும் கத்துகிட்டேன். வேலையாட்கள் பற்றாக்குறை எப்போதுமே பிரச்னைதான். அந்த மாதிரியான நேரத்துல பாகுபாடு பார்க்காம களைப் பறிப்புல இருந்து அறுவடை வரைக்கும் எல்லா வேலையையும் செய்வேன்.

எனக்கு விவசாயி ஆகணும்னு பெரிய ஆசை. இந்த வேலையில நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்த அனுபவத்துல, `இந்தத் தொழில்ல ஒருமுறை லாபம் வரும். அடுத்த பருவத்துலயே பெரிய நஷ்டமும் வரலாம். அதையெல்லாம் தாங்கிக்கிற பக்குவம் வரணும். விவசாயம் உனக்குச் சரிபட்டு வராது. நீயாவது நிலையான வருமானம் தரும் வேலைக்குப் போ'னு என் பெற்றோர் சொன்னாங்க. அதனால, பி.எஸ்ஸி கம்யூட்டர் சயின்ஸ் படிப்புல என்னைச் சேர்த்துவிட்டாங்க. ஆனா, அந்தப் படிப்புல எனக்குப் பெரிசா நாட்டமே இல்ல. படிச்சு முடிச்சுட்டு நான் விவசாயி ஆகப்போறேன்னு எல்லோர்கிட்டயும் சொல்வேன். அதைக் கேட்டு பலரும் ஏளனமா சிரிப்பாங்க; கிண்டல் செய்வாங்க.

தோட்டத்தில் மணிகண்டன்

Also Read: வெளிநாட்டு வேலை டு இயற்கை விவசாயம்! -அசத்தும் சிவகங்கை விவசாயி

இனி வாய் வார்த்தையோடு சொல்லக் கூடாதுனு செயல்ல இறங்கிட்டேன். விடுமுறை நாள்கள்ல அப்பாவோட தோட்டத்துல விவசாயம் செஞ்சேன். இப்படியே ரெண்டு வருஷம் விவசாயம் செஞ்சதோடு, படிப்பையும் முடிச்சேன். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, நடிகர் கார்த்தி சாரோட `உழவன் ஃபவுண்டேஷன்' அமைப்பின் உழவன் விருதுடன் ரூ.50,000 ஊக்கப் பரிசும் எனக்குக் கிடைச்சது. அதன் பிறகுதான் என்மேல பெற்றோருக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுச்சு. `இனி உன் விருப்பம்போல விவசாய வேலை செய்'னு ஊக்கம் கொடுத்தாங்க" என்று சிரித்தபடியே கூறும் மணிகண்டன், முழுநேர விவசாயியாக மாறியிருக்கிறார்.

``அப்பாவுக்கும் எனக்கும் இயற்கை விவசாயம் செய்ய ஆசைதான். ஆனா, சுத்தியும் ரசாயன உரம் பயன்படுத்துற விவசாயிகள்தாம் அதிகம் இருக்காங்க. நாங்க ஒருத்தர் மட்டும் இயற்கைக்கு மாறுறது அவ்வளவு எளிதான காரியமில்ல.

அதனால, ரெண்டு முறையையும் சேர்த்தேதான் விவசாயம் செய்யுறோம். இந்த நிலையில, தனியாவே விவசாயம் செஞ்சு எல்லா அனுபவங்களையும் கத்துக்க ஆசைப்பட்டேன். இந்த நாலரை ஏக்கர் நிலத்தை ரெண்டு வருஷத்துக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தோம். அப்போ ஒரு வருஷத்துக்கு ரூ.4.5 லட்சம் குத்தகைத் தொகை. அதை அப்பாதான் கட்டினார்.

தோட்டத்தில் மணிகண்டன்

``லாபம் எடுக்காட்டியும்கூட பரவால்ல. பராமரிப்புச் செலவு, குத்தகைக்கான செலவுப் பணத்தையாவது எடுக்கிற மாதிரி விவசாயம் செய்''னு மட்டும் அப்பா சொன்னார். ஏற்கெனவே எல்லா வேலைகளும் தெரியும்ங்கிறதால, நடவு உள்ளிட்ட வேலைக்குச் சில பணியாளர்களைப் பயன்படுத்தினேன். முதல் வருஷம் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு, முட்டைக்கோஸ்னு சுழற்சி முறையில சில பயிர்களைச் சாகுபடி செஞ்சேன். மழையில விளைச்சல் பாதிப்பு, சரியான விலை கிடைக்காததுனு நிறைய சவால்களை எதிர்கொண்டேன். அதையும் மீறி, எல்லாச் செலவுகளும் போக அந்த வருஷம் கொஞ்சம் லாபம் கிடைச்சது. `இவன் எப்படியும் சமாளிச்சு வந்துடுவான்'னு குடும்பத்துல அப்போதான் பெருமிதமா சொன்னாங்க.

என் தோட்டத்துல எல்லா முடிவுகளையும் எடுக்கும் சுதந்திரத்தை எனக்குக் கொடுத்துட்டாங்க. அடுத்த வருஷம் இன்னும் கூடுதலான அனுபவம் கிடைச்சது. இப்போ ரெண்டு ஏக்கர்ல கேரட், ஒன்றரை ஏக்கர்ல பூண்டு போட்டிருக்கேன். தலா அரை ஏக்கர்ல பீட்ரூட், கேரட் பயிரிடும் வேலைகள்ல இருக்கேன். இந்தத் தோட்டத்துல பெரிய கிணறு இருக்கு. அதுல எப்பவும் தண்ணி இருக்கும். விற்பனைக்கும் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனா, நிலையில்லா வருமானமும் மழைக்காலங்கள்ல பயிரைக் காப்பாத்துறதும்தான் தொடர் சவாலா இருந்தாலும், இந்த வாழ்க்கை முறை பழகிப்போச்சு. ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்த மாட்டேன்.

பயிர் அறுவடை முடிஞ்சதும் அதனோட இலைத்தழைகளை நிலத்துலயே போட்டுவிடுவோம். அது காய்ஞ்சதும் உழவு செஞ்சு, தொழுவுரத்தைத் தூவி விடுவோம். கொஞ்ச நாள்கள் கழிச்சு ஓர் உழவு ஓட்டிவிட்டு அடுத்த வெள்ளாமை வேலைகளை கவனிப்போம். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், மண்புழு உரங்களையும் பயன்படுத்துறேன்" என்று கூறுபவருக்கு, முழுமையான இயற்கை விவசாய முறைக்கு மாறுவது பெரும் ஆசையாக இருக்கிறது.

தோட்டத்தில் மணிகண்டன்

Also Read: ஆஸ்திரேலிய வேலை டு இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர்!

``காலையில 7 மணிக்குப் போனா, இரவு 7 மணி வரை வேலை இருக்கும். டிராக்டர் ஓட்டத் தெரியும். உழவு, களை எடுக்கிறது உட்பட எல்லா வேலைகளையும் நானும் கவனிப்பேன். அவசியமான வேலைக்குத்தான் வேலையாட்களைப் பயன்படுத்துவேன். அப்பாவும் மலைப் பயிர்களைச் சாகுபடி செய்றார். என் தோட்டத்து வேலைகள் போக, அவர் தோட்டத்துலயும் வேலை செய்வேன். இயற்கை விவசாயத்துல மலைப் பயிர்களைப் பயிரிட்டு வெற்றிகரமா மகசூல் எடுக்கிறது கஷ்டம்னு பேச்சு அதிகம் இருக்கு. அதை மாத்திக்காட்டுற வகையில, முழுமையான இயற்கை விவசாய முறைக்கு மாறுவதே என்னோட லட்சியம். சுத்தியும் ரசாயன உரப் பயன்பாடு அதிகம் இருக்கிறதால இந்தத் தோட்டத்துல அதைச் சாத்தியப்படுத்துறது கொஞ்சம் கஷ்டம். எனவே, குத்தகைக்கு வேறு இடம் தேடிட்டிருக்கேன். கூடிய சீக்கிரமே புதுத் தோட்டத்துல முழுமையான இயற்கை விவசாயம் செய்யப்போறேன்.

வீட்டுலயே ஆடு, மாடு, கோழி, நாய் வளர்க்கிறேன். கால்நடை வளர்ப்புலயும் ஓரளவுக்கு அனுபவம் இருக்கு. இன்னும் சில வருஷத்துல முழு இயற்கை விவசாய முறையுடன், என் தோட்டத்தை ஒருங்கிணைந்த பண்ணையமா மாத்துற எண்ணமும் இருக்கு. கட்டுப்படியான விலை கிடைச்சா, வியாபாரிகளையே என் தோட்டத்துல அறுவடை செய்துக்க ஒப்புக்குவேன். விலை குறைச்சலா சொன்னா, நானே ஆள் வெச்சு அறுவடை செஞ்சு மேட்டுப்பாளையம் மார்க்கெட்ல கொண்டுபோய் விற்பேன்.

ஒருமுறை நல்லா விளைபோகும் பயிரையே பெருவாரியான விவசாயிகள் அடுத்த முறையும் பயிரிடுவாங்க. அதனால, விலை வீழ்ச்சியால பெரிய நஷ்டத்தைச் சந்திப்பாங்க. நான் ஒரே பயிரை மட்டுமே நம்பியிருக்காம, ஒரே நேரத்துல பல பயிர்களையும் சாகுபடி செய்வேன். ஒரு பயிர் நல்ல வருமானம் கொடுக்காம கைவிட்டாலும், இன்னொரு பயிர் நிச்சயம் காப்பாத்திடும். அந்த வகையில, முறையான அனுபவத்துடன் இப்போ லாபகரமாவே விவசாயம் செய்றேன். விவசாயத்தை லாபகரமா செய்ய முடியாதுங்கிற எண்ணம்தான் பலருக்கும் இருக்கு.

கால்நடை வளர்ப்பில்...

``டிகிரி முடிச்சுட்டு விவசாய வேலை செய்றியே! மழையிலயும் பனியிலயும் வெயில்லயும் கஷ்டப்படுற வேலை தேவைதானா? ஆபீஸ் வேலைக்குப் போனா மாசமானா நிலையான வருமானம் கிடைக்குமே"ன்னு பலரும் என்கிட்ட சொல்வாங்க. விவசாயம் செய்றதால கிண்டலும் பண்றாங்க. ஆனா, அதைப் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்ல. இது ரொம்பவே நிம்மதியான வேலை. இயந்திரமயமான சிட்டி வாழ்க்கையும் இல்ல. நான் எவ்வளவு தூரம் மெனக்கெட்டு வேலை செய்றேனோ, அந்த அளவுக்கு எனக்கான வருமானம் கூடும். வருஷத்துக்கு சராசரியா மூணு போகம் நடக்கும். ஒவ்வொரு போகத்துலயும் எல்லாச் செலவுகளும்போக, ஓரிரு லட்சம் ரூபாய் லாபம் நிக்கும். ஆபீஸ் வேலைக்குப் போயிருந்தா, அங்க கிடைச்சிருக்கக்கூடிய வருமானத்தைவிட இப்போ அதிகமாவே வருமானம் கிடைக்குது. என்னைப் பொறுத்தவரை இந்த நிறைவான வாழ்க்கை வேற எந்தத் தொழில்ல அமையாது."

செழிப்பாய் காட்சிதரும் தோட்டத்தைப்போலவே, மணிகண்டனின் முகமும் பசுமையுடன் பிரகாசிக்கிறது!



source https://www.vikatan.com/news/agriculture/ooty-young-farmer-manikandan-shares-his-success-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக