Ad

திங்கள், 26 ஜூலை, 2021

தென்காசி: அழுகிய மனிதத் தலையுடன் சாமியாட்டம்; நர மாமிசம் உண்ணும் வீடியோ! - போலீஸார் விசாரணை

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள கிராமம் கல்லூரணி. இந்தக் கிராமத்தில், காட்டுக் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீசக்தி போத்தி சுடலை மாடசாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தக் கோயிலில் ஆடி மாதத்தில் சிறப்பான வகையில் கொடைவிழா நடத்தப்படுவது வழக்கம்.

Also Read: அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடையாளம்தான் எங்களின் சிலைகள்! - நெகிழும் மாடசாமி!

அதன்படி இந்த ஆண்டும் கோயில் கொடை விழா நடைபெற்றது. பாவூர்சத்திரத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல், சென்னை உள்ளிட்ட வெளியிடங்களில் வசிக்கும் இந்தப் பகுதி மக்களும் கோயில் கொடைவிழாவில் பங்கேற்றனர்.

கொடை விழாவின் ஒரு பகுதியாக 23-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, சாமியாடிகள் `வேட்டை’க்கு சென்றார்கள். கோயிலில் ஓங்கி ஒலித்த மேளச் சத்தத்தின் ஓசையில் சாமியாட்டம் நடந்தது. பின்னர் பந்தத்தைக் கையில் ஏந்தியவாறு அங்குள்ள இடுகாட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து திரும்பி வரும்போது ஒரு சாமியாடியின் கையில் சில வாரங்களுக்கு முன்பு புதைத்த ஒருவரின் தலை இருந்தது.

கையில் தலை வாயில் எலும்புடன் சாமியாட்டம்

மற்றொரு சாமியாடி வாயில் ஒரு எலும்புத்துண்டைக் கடித்தபடியே வந்தார். மற்றொரு சாமியாடி நர மாமிசத்தைச் சாப்பிட்டார். இதையெல்லாம் அதிசயத்துடன் பார்த்த பக்தர்களில் சிலர் இவற்றையெல்லாம் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்கள். அந்தக் காட்சிகள் தற்போது வைரலாகப் பரவிவருவதால் இந்த விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (25-ம் தேதி) பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து சாமியாடிகள் மூவரை காவல் நிலையத்துக்கு அழைத்த போலீஸார் அவர்களிடம், எங்கிருந்து தலையை எடுத்து வந்தார்கள் என்பது பற்றியும், அந்தத் தலையை எங்கே போட்டார்கள் என்பது குறித்தும் விசாரித்தனர்.

கொடை விழா

போலீஸ் விசாரணையின்போது சாமியாடிகள் மூவரும், ‘எங்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது. சுடலையின் அருள் வந்ததால் சாமியாடினோம். அபோது நாங்கள் என்ன செய்தோம். என்பதே நினைவில் இல்லை’ என்பதையே மீண்டும் மீண்டும் தெரிவித்ததால், அவர்களை மீண்டும் அழைக்கும்போது விசாரணைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் போலீஸார் அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரணி கிராம மக்கள் கூறுகையில், ``காட்டுக் கோயில் என்று அழைக்கப்படும் இந்த சுடலை மாடசாமி மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தக் கோயிலில் இதுபோல தலையை எடுத்து வருவது இது முதன்முறை அல்ல. கடந்த 2018-ல் சாமியாடிகள், புதைக்கப்பட்டிருந்த ஒருவரின் கையைத் தோண்டி எடுத்து வந்தார்கள்.

நர மாமிசம்

இந்த வருடம் தலையைத் தூக்கி வந்துவிட்டார்கள். அது சமீபத்தில் புதைக்கப்பட்ட உடலின் தலையாக இருந்தது. அதனால் சமீபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் இடுகாட்டுக்குச் சென்று தங்கள் உறவினர்களின் உடல்கள் பத்திரமாக இருக்கின்றனவா என பரிசோதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் இந்தப் பகுதியில் ஒருவித பதற்றம் நிலவுகிறது. இருந்தாலும் கோயில் விவகாரம் மற்றும் சாமியாட்டம் தொடர்பானது என்பதால் யாரும் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்” என்றார்கள்.

இணையத்தில் வலம்வரும் வீடியோ, அந்தப் பகுதியில் சர்ச்சையாகியிருக்கும் நிலையில் பாவூர்சத்திரம் காவல்துறையினர் முதற்கட்டமாக சாமியாடிகள் மீதும், கோயிலின் நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றாமல் அதிக கூட்டத்தைக் கூட்டியதற்காகவும், அத்துமீறி இடுகாட்டுக்குள் நுழைந்ததாகவும் கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாமியாட்டம்

இந்த விவகாரம் குறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான கிருஷ்ண ராஜிடம் கேட்டதற்கு, ``சுடலை மாடசாமி கோயில் கொடைவிழாவை கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றாமல் கூட்டத்தைக் கூட்டி நடத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கிறோம். அந்தக் கோயில் தொடர்பான வீடியோவை நானும் பார்த்தேன். அது தொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/controversy-over-temple-festival-as-human-head-was-in-hand-during-samiyattam-ceremony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக