Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள்: கல்யாணி கவரிங் வளர்ந்த கதை தெரியுமா?!

மனிதப்பாதம் படாத அடர்ந்த வனங்களை மதங்கொண்ட யானைகள்தான் முட்டித் திறக்கும். அந்த யானைகள் சென்ற வழியே அதன்பிறகு பலநூறு உயிர்கள் பயணம் செய்யும். தொழில்களிலும் அப்படித்தான். யாரும் யோசிக்காத, 'இதெல்லாம் சாத்தியமா' என்று நினைக்கிற, 'இதெல்லாம் பெரிய ரிஸ்க்...' என்று மலைக்கிற ஒரு களத்தைத் தேர்ந்தெடுத்து மதிநுட்பத்தால் அதில் வென்று காட்டுபவர்களே முன்மாதிரிகளாகிறார்கள். அப்படியொரு முன்மாதிரிதான் டி.பி.கோபாலகிருஷ்ணன். கவரிங் நகை போடுவதெல்லாம் கௌரவக் குறைச்சல் என்று கருதிக்கொண்டிருந்த காலத்தில், தைரியமாக அதில் கால் வைத்தார். இன்று ஆல் போல தழைத்து வேரூன்றி நிற்கிறது கல்யாணி கவரிங்.
கல்யாணி கவரிங்

1960... அப்போது ஒரு கிராம் தங்கம் 13 ரூபாய்தான். அப்போது ஒரு மூட்டை நெல்லின் விலை இதைவிட அதிகம். மக்கள் அப்போது தங்கத்தை சேமிப்பாகவெல்லாம் கருதவில்லை. தண்டட்டி, மூக்குத்தி, மோதிரம் என அழகூட்டும் ஆபரணங்களாக மட்டுமே கருதினார்கள். கவரிங் அணிவதெல்லாம் மிகப்பெரிய அவமானமாகக் கருதிய காலம் அது. அந்தச் சூழலில்தான் திருச்சி ஜாபர்ஷா தெருவில், பத்துக்கு பதினைந்து அளவுள்ள சிறிய கடையில் 'கல்யாணி கவரிங் ஜூவல்லரி மார்ட்' என்ற கடையை ஆரம்பித்தார் கோபாலகிருஷ்ணன்.

'கவரிங் நகைக்கெல்லாம் பெரிய வணிக வாய்ப்பில்லை... மக்கள் வாங்க வருவார்கள் என்று எந்த நம்பிக்கையும் இல்லை. அதில்போய் முதலீடு செய்கிறீர்களே' என்று குடும்பத்தில் உள்ளவர்களே அச்சமூட்டினார்கள். சக வணிகர்கள் கேலிகூட செய்தார்கள். ஆனால், எதிர்காலத் தொழில் வாய்ப்பைத் துல்லியமாகக் கணித்தார் கோபாலகிருஷ்ணன்.
கோபாலகிருஷ்ணன்

கவரிங் தொழில் புதிதில்லை. 1,000 ஆண்டுகளுக்கு மேல் அந்தத் தொழிலுக்கு வரலாறு இருக்கிறது. கோயில் கும்பங்களுக்கும் விக்ரகங்களுக்கும் பூசப்படும் தங்கமுலாம், வெள்ளி முலாமெல்லாம் ஆதிகால கவரிங் தொழில்நுட்பம்தான். அது கோல்ட் ஷீட் கவரிங் தொழில்நுட்பம். தங்கத்தை தகடாக இழைத்து இழுத்துப் போர்த்துவது. ஸ்ரீரங்கம் போன்ற பழைமையான கோயில்களில் அக்காலத்தில் பூசப்பட்ட முலாம்கள் இப்போதும் பளபளப்பாக இருப்பதைப் பார்க்கலாம்.

1960களிலெல்லாம் ஆபரணங்களில் தங்கப்பூச்சு பூசும் தொழில்நுட்பம் பெரிதாக வளரவில்லை. ஆனால், கோபாலகிருஷ்ணனின் கண்களுக்கு இதில் இருக்கும் பெரும் வணிகம் தெரிந்தது. அவர் நினைத்ததுபோல இன்று டிசைனிங் கவரிங் நகைகள் இளம் தலைமுறையை வசீகரிக்கும் ஆபரணங்களாக மாறியிருக்கின்றன.

கல்யாணி கவரிங்

கவரிங் தொழிலுக்கு வரும் முன்னர் கோபாலகிருஷ்ணன் பெரிய தங்க, வைர வணிகர். திருச்சி சுண்ணாம்புக்காரத் தெருவில் மிகப்பெரிய தொழிற்சாலையே அவருக்கு இருந்தது. 100க்கும் மேற்பட்ட ஆபரணக் கலைஞர்கள் அவரிடம் வேலை செய்தார்கள். திருச்சியைச் சுற்றிலும் நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் நகை வணிகர்கள் இவரிடம்தான் ஆபரணங்களை செய்து வாங்குவார்கள்.

எல்லாம் நல்லபடியாகச் சென்றுகொண்டிருந்தபோது பங்குதாரர் வடிவத்தில் சிக்கல் வந்தது. அவர் சினிமா எடுத்து நொடித்துப்போனார். அதனால் போதிய அளவுக்கு முதலீடு கிடைக்கவில்லை. படிப்படியாக தொழில் நசிந்தது. ஒரு கட்டத்தில் தொழிற்சாலையையே மூடும்நிலை. கோபாலகிருஷ்ணன் யோசித்தார். இனி பெரிய முதலீட்டில் அகலக்கால் வைக்கக்கூடாது. செய்வதைத் திருந்தச் செய்வோம் என்று தெளிவாகத் திட்டமிட்டு சிறிய அளவில் கல்யாணி கவரிங்கைத் தொடங்கினார்.

கல்யாணி கவரிங்

"அப்பா தொழில்ல அவ்வளவு அர்ப்பணிப்பா இருப்பார். அவர் கவரிங் கடையைத் தொடங்கினப்போ, கவரிங் ஆபரணத்துக்கு மார்க்கெட்டே இல்லை. வசதியில்லாதவங்ககூட கவரிங் நகைபோட தயங்கின காலகட்டம். ஆனா அப்பா அதுல வளரமுடியும்ன்னு நம்பினார். 'கல்யாணி'ங்கிறது மங்களச் சொல். வட இந்தியாவுல வாழ்த்தும்போது 'கல்யாணி பவ'ன்னு வாழ்த்துறது வழக்கம். 'அண்ட சராசரத்திலும் மங்களம் உண்டாவதாக'ன்னு பொருள். அப்பா வச்ச பெயர் இன்னைக்கு உலகம் முழுவதும் நிலைச்சு நிக்குது..." என்று பெருமிதமாகச் சொல்கிறார் கல்யாணி கவரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் கோபாலகிருஷ்ணனின் மூத்த மகனுமான திருமூர்த்தி.

கோபாலகிருஷ்ணனுக்கு 4 மகன்கள், 6 மகள்கள். இன்று 4 மகன்களும் கல்யாணி கவரிங்குக்கு நான்கு தூண்களாக நிற்கிறார்கள். மூத்தமகன் திருமூர்த்திதான் முழுமையான நிர்வாகம். இரண்டாவது மகன் சுப்பிரமணியன் மதுரையில் உள்ள மூன்று கல்யாணி கவரிங் ஷாப்களை கவனித்துக்கொள்கிறார். மூன்றாவது மகன் உமாநாத் மொத்த கல்யாணி கவரிங் விற்பனைப் பிரிவையும் நிர்வகிக்கிறார். நான்காவது மகன் ஸ்ரீராம் தரநிர்ணய பிரிவைக் கையாள்கிறார்.

(நிற்பவர்கள்) மணிகண்டன், கணேஷ்; (அமர்திருப்பவர்கள்) திருமூர்த்தி, உமாநாத்

வணிகம் இப்போது மூன்றாம் தலைமுறையின் கையில் இருக்கிறது. திருமூர்த்தியின் மகன் மணிகண்டனும் உமாநாத்தின் மகன் கணேஷும் நிர்வாகத்துக்கு வந்துவிட்டார்கள். இருவரும் எம்.பி.ஏ பட்டதாரிகள். மாற்றங்களை உள்வாங்கி அடுத்தடுத்த தலைமுறையின் கரங்களில் தவழ்கிறது கல்யாணி கவரிங்.

"அப்பாவுக்கு சர்க்கரை நோய் வந்திருச்சு. அதனால 12 வயசுல நான் கடைக்கு வரவேண்டிய சூழல்... அப்பாகிட்ட தொழிலை மட்டும் கத்துக்கலே... எதிர்காலத்தைக் கணிச்சு எப்படி முடிவெடுக்கிறது, வாடிக்கையாளர்களை எப்படி உபசரிக்கிறது, எப்படி அவங்களுக்கு நம்பிக்கையை உருவாக்குறதுன்னு நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்திருக்கார். அவர் போட்ட பாதைதான்... அவர் ஆரம்பிச்ச காலத்துல கவரிங் நகை தயாரிப்புங்கிறது வேறமாதிரி இருந்துச்சு. ஷீட் கவரிங்ன்னு பேரு. செய்முறை ரொம்பவே கஷ்டம். தங்கம் நிறைய சேர்க்கணும். அதனால விலை கொஞ்சம் அதிகமா இருக்கும். எல்லா டிசைன்களையும் உருவாக்கமுடியாது. பைலிங் செய்யும்போது மேலேயிருக்கிற தங்கம் தேய்ந்துபோகும். இன்னைக்கு வேற வேற தொழில்நுட்பங்கள் வந்திருச்சு. மைக்ரோ பிளேட்டிங் வரைக்கும் வந்து நிக்குறோம். நினைச்சா நினைச்ச டிசைனை அழகாவும் தரமாவும் செய்திடமுடியும்.

திருமூர்த்தி

'ஒரு தொழில்ல இறங்கிட்டா, அதுல எந்த அளவுக்கு தனித்துவமாவும் தரமாவும் செயல்பட முடியுமோ, அந்த அளவுக்கு செயல்படனும். இல்லேன்னா நமக்கு அடையாளம் கிடைக்காது'ன்னு அப்பா சொல்வார்... இன்னைக்கு எங்க எல்லாருக்குமே அதுதான் தாரக மந்திரம். அந்தக் காலத்துல கவரிங் நகை வாங்க வர்றவங்க முகத்தைக் காட்டாம இருக்க தலையில துண்டைப் போட்டுக்கிட்டெல்லாம் வருவாங்க. கவரிங் நகை வாங்குறதே கௌரவக் குறைச்சல்ன்னு எண்ணம்... நாளாக நாளாக அதெல்லாம் தவிடுபொடியாகிடுச்சு. இன்னைக்கு பெரிய தனவந்தர்களெல்லாம் தங்கத்தால செய்யமுடியாத டிசைனெல்லாம் கவரிங்ல செஞ்சு வாங்கிட்டுப் போறாங்க..." என்கிறார் திருமூர்த்தி.

Also Read: திருச்சி மாம்பழச் சாலை: குடியரசுத் தலைவர் முதல் சினிமா பிரபலங்கள் வரை - தித்திக்கும் மாம்பழ விற்பனை!

கோபாலகிருஷ்ணன் பிள்ளைகளிடம் கல்யாணி கவரிங்கை கையளித்தபோது, அது செடியாக வேர்விட்டிருந்தது. பிள்ளைகள் அதை விருட்சமாக்கி கிளை பரப்பினார்கள். அதற்காக அவர்கள் கையில் எடுத்த யுத்தி விளம்பரம்.

ஒரு தொழிலை எப்படி உலகளவுக்கு எடுத்துச் செல்வது, வசீகரமான விளம்பரங்களை எப்படித் திட்டமிடுவது என்ற கல்யாணி கவரிங்கின் திட்டமிடல் மேலாண்மை பாடங்களில் சேர்த்து மாணவர்களுக்குப் புகட்டவேண்டிய கல்வி.

கல்யாணி கவரிங்
விளம்பரத்தில் அவர்கள் கையாண்ட தனித்துவம், கல்யாணி கவரிங்கை தமிழகத்தின் அடையாளமாக மாற்றியது. கல்யாணி கவரிங் ஒரு மாபெரும் பிராண்டாக வளர்ந்தது.

- அடுத்த திங்களன்று சந்திப்போம்!



source https://www.vikatan.com/business/miscellaneous/story-behind-the-success-of-kalyani-covering

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக