இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதித்தது கேரள மாநிலத்தில்தான். கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையவில்லை. 16.07.2021 அன்று மட்டும் கேரளத்தில் 13,750 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10,697 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுவந்துள்ளனர். மொத்தம் 1,21,944 பேர் சிகிச்சையில் உள்ளனர். 29,93,242 பேர் கொரோனா பாதித்து குணமடைந்துள்ளனர். 3,72,317 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். கேரளத்தில் லாக்டெளனில் குறைந்த அளவு தளர்வுகளே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் கேரளத்தை அச்சுறுத்தி வருகிறது. தமிழக எல்லையான பாறசாலை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று கூடுதலாக 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தை ஜிகா வைரஸ் அதிகமாக பாதித்துள்ளது. இதுவரை 30 பேர் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதில் 20 பேர் குணமடைந்துள்ளனர். தற்சமயம் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் 87 நாட்களில் 10,000 பேர் இறந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்ட கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி கொரோனா மரணம் 4,407 ஆக இருந்தது. ஏப்ரல் 21-ம் தேதி மரண எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்தது. ஜூன் 7-ம் தேதி மரண எண்ணிக்கை பத்தாயிரத்தை எட்டியது. அதாவது 47 நாட்களில் ஐந்தாயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அடுத்த 38 நாட்களில் மரண எண்ணிக்கை 15000 ஆனது. 85 நாட்களில் கொரோனாவால் 10,000 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத் துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாதத்தில் ஒவ்வொரு நாளும் மரண எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக இருந்தது. கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 15,115 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையில் இறந்தவர்களில் 70 சதவீதம்பேர் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள். மரணித்தவர்களில் 20 சதவீதம் 41 வயது முதல் 59 வயதுக்கு உள்பட்டவர்கள். கொரோனா இரண்டாம் அலையில் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் 23 பேர் மரணமடைந்துள்ளனர்.
2020-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிக மரணம் ஏற்பட்டது. கொரோனா இரண்டாம் அலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிக மரணம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருச்சூர் மாவட்டத்தில் 1600-க்கும் அதிகமான மரணம் ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் குறைவான மரணங்களே நிகழ்ந்துள்ளன. மாநிலத்தில் மற்ற மாவட்டங்களை விட இடுக்கி மாவட்டத்தில் மரண எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
Also Read: கேரளா: கொரோனாவைத் தொடர்ந்து மிரட்டும் ஜிகா வைரஸ்! - தமிழக எல்லையில் கர்ப்பிணி உட்பட 14 பேர் பாதிப்பு
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரள மாநில சுகாதாரத்துறை கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோவிட் பரிசோதனை யக்ஞம் நடத்தியுள்ளது. அதில் சுமார் 3.75 லட்சம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. மேலும் மூன்றுபேரில் ஒருவருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்
source https://www.vikatan.com/news/india/kerala-still-suffering-from-corona-second-wave
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக