பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
ஒலிம்பிக் - உலகின் மிகவும் பழைமையான மற்றும் பெரியதொரு விளையாட்டுத் திருவிழா. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது என்பது உலக விளையாட்டு வீரர்களின் ஆதர்ச கனவு. இக்கனவு ஆரம்பித்தது இன்று நேற்றல்ல. கிட்டத்தட்ட 27 நூற்றாண்டுகளுக்கு முன்னரே விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கிரீடம் குறித்து கனவு கண்டுள்ளனர்! பண்டைய ஒலிம்பிக்கின் வரலாறும், அமைப்பு- விதிமுறைகளும் இன்றைய நவீன ஒலிம்பிக்குடன் ஒப்பிடும்போது சற்று வித்தியாசமானவை தான்!
*ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 776 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் இருந்த ஒலிம்பியாவில் ஒரு நாள் போட்டியாக ஒலிம்பிக் போட்டி துவங்கியுள்ளது. கிரேக்கர்களின் கடவுளாகக் கருதப்படும் ஜீயஸ் மற்றும் கரானாஸ் ஆகியோரை வழிபட்டு, அவர்களை அமைதிப்படுத்தும் ஒரு விழாவாகவே பண்டைய ஒலிம்பிக் நடத்தப்பட்டுள்ளது.
*ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதற்கு கிரேக்கத்தில்
பல்வேறு புராணக் காரணங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று - சீயஸ், கரானாஸ் என்னும் இரு தலைமை கிரேக்கக் கடவுளர்கள், பூமியை யார் ஆள்வது என்று போட்டியிட்டனர் என்றும், அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற சீயஸ், வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு ஒலிம்பிக் போட்டியைத் தொடக்கி வைத்தார் என்பதும் ஆகும். இதனை புகழ்பெற்ற கிரேக்க கவிஞர் "பிண்டார்" தனது படைப்பில் மேற்கோள் காட்டியுள்ளார்.
*பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். பெண்கள் போட்டிகளில் பங்கேற்கவோ, போட்டிகளைக் காணவோ அனுமதிக்கப்படவில்லை.
*போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, வெற்றியின் சின்னமாக ஆலிவ் இலைகளினால் ஆன கிரீடம் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. இந்த கிரீடத்தை அணிந்து தனது சொந்த ஊர் திரும்பும் வீரர்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்தது.
*ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்பொழுது வன்முறை மற்றும் போர் உள்ளிட்டவை நடைபெறக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கால அமைதி என்பது ஒரு மரபாகவே கடைபிடிக்கப்பட்டுள்ளது.
*40,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய மிகப்பெரிய ஒலிம்பியா விளையாட்டரங்கில் பண்டைய ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது.
*பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்களை கிரேக்கத்தில் 'ஆத்லோஸ்' (Compete for a prize) என்று அழைத்தனர். ஆத்லோஸ் என்பது மருவி தற்பொழுது ஆங்கிலத்தில் 'அத்லெட்ஸ்' (Athletes) என்று வழங்கப்படுகிறது.
*ஜிம்னாஸ்டிக் (Gymnastics) என்ற சொல், கிரேக்க சொல்லான 'ஜிம்னோஸ்' என்பதிலிருந்து உண்டானது. ஜிம்னோஸ் என்றால் நிர்வாணம் என்று பொருள். ஜிம்னாசியம் என்றால் நிர்வாண உடற்பயிற்சிப் பள்ளி என்று பொருள். ஆம்! பண்டைய ஒலிம்பிக் தோன்றிய புதிதில் விளையாட்டு வீரர்கள் நிர்வாணமாகத்தான் பங்கேற்றனர்.
*ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு சுடர் ஏற்றும் பழக்கம் பண்டைய ஒலிம்பிக்கில் பின்பற்றப்பட்டு வந்தது. கிரேக்கத்தின் ஒலிம்பியா ஹெஸ்டியா ஆலயத்தின் பலிபீடத்தில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது முதல், முடியும் வரை ஒரு புனித நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இச்சுடர் சூரியனின் ஒளியிலிருந்து ஏற்றப்பட்டு, போட்டிகள் முடியும் நாள்வரை அணையாது பாதுகாக்கப்பட்டதாக கிரேக்க வரலாறு கூறுகிறது.
*'ஸ்டேடியன் (Stadion) என்றால் கிரேக்கத்தில் சுமார் 600 அடி தொலைவைக் குறிக்கும். முதன் முதலில் கி.மு. 776 ல் ஒலிம்பிக் போட்டி நடந்த போது 600 அடி தூர ஓட்டப்பந்தயம் நடந்தது.அந்த விளையாட்டிற்கும், விளையாட்டு நடந்த இடத்திற்கும் என இரண்டிற்குமே 'ஸ்டேடியன்' என்று பெயர் வழங்கப்பட்டது. ஸ்டேடியன் என்னும் சொல் மருவியே 'ஸ்டேடியம்' (Stadium)
என்னும் ஆங்கிலப் பெயர் உண்டானது.
*கி.மு. 490 இல் கிரேக்க-பெர்சிய நாடுகளுக்கு இடையே நடந்த போரின்போது 'ஃபெய்டிப்பிடெஸ்' என்னும் கிரேக்கப் போர்வீரர், கிரேக்க படையின் வெற்றிச்செய்தியை போர் நடந்த இடத்திலிருந்து ஏதென்ஸ் நகரத்திற்கு ஓடிவந்து அறிவித்தார்.
காலணிகள் இல்லாமல் வெற்றுக்கால்களில் இரத்தம் வழிய வழிய அவர் ஓடிவந்த தூரம் சுமார் 25 மைல்கள். வெற்றிச் செய்தியை அறிவித்தவுடன், ஃபெய்டிப்பிடெஸ் அங்கேயே விழுந்து இறந்தார். ஃபெய்டிப்பிடெஸின் வீரத்தை போற்றும் விதமாக,1896 இல் நடந்த நவீீன ஒலிம்பிக் போட்டியில் 25 மைல் தூர அளவிலான ஓட்டப்பந்தயம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவே தற்போதை மாரத்தான்.
*பண்டைய ஒலிம்பிக்கில் ஒரு போட்டிக்கு மூன்று பதக்கங்கள் கிடையாது. ஒரு போட்டிக்கு ஒரு வெற்றியாளர் மட்டுமே. போட்டியின் வெற்றியாளருக்கு முற்காலத்தில் ஆலிவ் இலை கிரீடமும், பிற்காலங்களில் ஒரேயொரு தங்கப்பதக்கமும் மட்டுமே வழங்கப்பட்டது. வெள்ளி,வெண்கலப் பதக்கங்கள் பண்டைய ஒலிம்பிக்கில் கிடையாது.
*1169 ஆண்டுகள் தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகளை,"விளையாட்டு- மதநம்பிக்கை அற்றவர்களின் கலாச்சாரம்" என்று கூறி கிரேக்க அரசரான தியோடோசியஸ் கி.பி 393 இல் தடை செய்தார்!
*ஒலிம்பிக் உலகிற்கு மீண்டும் திரும்ப
1503 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படும் "பியர் டி கூபெர்டின்" என்னும் பிரான்ஸ் நாட்டு பிரபுவின் நீண்ட முயற்சிகளின் விளைவாய் ஒலிம்பிக் மீண்டெழுந்தது.இவரது கடின முயற்சியால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC-International Olympic Committee) 1894 இல் சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 6,1896 அன்று நவீன ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கின.இன்று நாம் கொண்டாடும் நவீன ஒலிம்பிக் புத்துணர்வு பெற்றது!
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-ancient-olympics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக