திரை வானில், எவர்கிரீன் நினைவுகளை உள்ளடக்கிய 80'ஸ் காலகட்டம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் தனிப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் நட்பை வளர்ப்பதுடன், ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். நடிகர் சிரஞ்சீவியின் ஏற்பாட்டில், 2019-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற சந்திப்பில் பெரும்பாலான 80'ஸ் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். கொரோனா சிக்கல்களால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் இவர்களுடைய சந்திப்பு நடைபெறவில்லை.
இந்த நிலையில், 80'ஸ் நட்சத்திரங்களில் சிலர் நேற்று முன்தினம் சென்னையில் சந்தித்து, மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். நட்பு ரீதியாக நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பான படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இது தொடர்பான படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ராதிகா, ``எங்கள் காலகட்ட 80'ஸ் நாயகிகள் இப்போதும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம். கொரோனாவால் நேரில் சந்திக்க முடியவில்லை. இருப்பினும் போனில் பேசி வந்தோம். கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வார இறுதிநாள் ஒன்றில் சில நண்பர்கள் சந்தித்துப் பேசி மகிழ்ந்தோம்" என்று பகிர்ந்துள்ளார்.
திரை நட்சத்திரங்களின் இந்தச் சந்திப்பு குறித்து, நடிகை ராதாவிடம் பேசினோம். ``ஒவ்வொரு வருஷமும் நடைபெறும் எங்களோட 80'ஸ் நண்பர்களின் சந்திப்பு ரொம்பவே ஸ்பெஷலானது. இந்தச் சந்திப்புக் கூட்டம் எங்க நடந்தாலும், முடிஞ்ச வரைக்கும் தவறாம நானும் கலந்துப்பேன். கொரோனா சிரமங்களால போன வருஷம் எங்களால நேர்ல சந்திக்க முடியாட்டியும், போன் மற்றும் ஜூம் வீடியோ வழியே நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகிட்டோம்.
எங்களோட வாட்ஸ்அப் குரூப்ல, `எல்லோரும் எப்படி இருக்கீங்க?'ன்னு யதார்த்தமா தொடங்குன உரையாடல்தான் இந்தச் சந்திப்புக்கான துவக்கப் புள்ளி. `பார்த்து எத்தனை நாளாச்சு? மறுபடியும் எப்போ சந்திக்கப் போறோம்?'னு அன்பைப் பகிர்ந்தோம். அந்த உரையாடல்ல, `வாய்ப்பு இருந்தா நேர்ல சந்திக்கலாமே?'னு முடிவு செஞ்சோம்.
நேர்ல வர்றத்துக்கு வாய்ப்பு இருந்த சிலர் ஆர்வமா சம்மதிக்கவே, திடுதிப்புன்னு திடீர் சந்திப்பு உறுதியாச்சு. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஹோட்டல்ல சந்திச்சுப் பேசினோம். இந்த இக்கட்டான சூழல்ல எல்லா நண்பர்களும் நேர்ல வர்றது சாத்தியமில்லாதது. நல்ல வேளையா ஒரு நிகழ்ச்சியில கலந்துக்க நான் சென்னை வந்திருந்தேன். அதனால, இந்தக் கூட்டத்துல என்னாலயும் கலந்துக்க முடிஞ்சது.
Also Read: `சித்தப்பானு பிரசாரத்துக்குப் போகாதனு சொன்ன மணி... அக்ஷராவுடன் டான்ஸ்!' - சுஹாசினி
சுஹாசினி, லிசி, ராதிகா, பூர்ணிமா, குஷ்பு, அம்பிகா அக்கா, ராஜ்குமார், ரகுமான் ஆகியோர் கலந்துகிட்டோம். இந்த லஞ்ச் மீட், எங்க எல்லோருக்கும் சர்ப்ரைஸ் மகிழ்ச்சியைக் கொடுத்துச்சு. மதிய உணவுக்குப் பிறகு, கொரோனா காலகட்டம், கடந்த ஓராண்டுல நிகழ்ந்த மாற்றங்கள், எங்களோட செயல்பாடுகள், குடும்ப விஷயங்கள், 80'ஸ் காலகட்ட சினிமா நினைவுகள்னு நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகிட்டோம்.
எத்தனையோ வெளி நிகழ்ச்சிகளுக்குப் போனாலும்கூட, எங்க 80'ஸ் காலகட்டத்துடன் தொடர்புடைய கூட்டங்களுக்குப் போறது விவரிக்க இயலாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சந்திப்புல, மனம்விட்டு நாங்க பேசி மகிழ்ந்த வேளையில, எங்க குரூப் நண்பர்கள் எல்லோரும் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமேன்னு சின்ன ஆதங்கமும் எங்களுக்கு ஏற்பட்டுச்சு. கொரோனா சிக்கல்கள் சரியாகி, மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியான வாழ்க்கைமுறைக்குத் திரும்பணும். அதன் பிறகு, நிச்சயமா எங்களுடைய வருடாந்தர சந்திப்புக் கூட்டம் நடக்கும்" என்று கூறிய ராதா, பர்சனல் விஷயங்கள் சிலவற்றையும் பகிர்ந்தார்.
Also Read: ``13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்!" - நடிகை ராதா ஷேரிங்ஸ்
``கேரளாவுலயும், மகாராஷ்டிராவுலயும் எங்களுக்கு ஹோட்டல், ரெஸ்டாரன்ட்ஸ் இருக்கு. கொரோனா இடர்ப்பாடுகளால போன வருஷம் எங்க பிசினஸ் வளர்ச்சி ரொம்பவே சரிவடைஞ்சது. கடந்த ஜனவரியில இருந்துதான் மறுபடியும் நம்பிக்கையுடன் வேலைகளை ஆரம்பிச்சோம். ஆனா, யாருமே எதிர்பார்க்காத வகையில, மே மாசத்துல மறுபடியும் லாக்டெளன் வந்துச்சு. கேரளாவுல கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமா இருக்குது. அதனால, இங்க இருக்குற எங்களோட ஹோட்டல்ஸ் இன்னும் திறக்கப்படல. விரைவில் நல்ல மாற்றங்கள் வரும்னு உறுதியா நம்புறோம். நல்லது நடக்கும்ங்கிற நம்பிக்கையுடன், நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவோம்" என்று சிரித்தபடியே விடைபெற்றார்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-radha-speaks-about-80s-cinema-friends-surprise-meet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக