பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கக்கூடிய ஒருவர் பாலிவுட்டில் இருக்கிறார் என்றால் அது ஃபர்ஹான் அக்தர். நடிப்பு என்று எடுத்துக்கொண்டால் எப்போதும் சவாலான கதாபாத்திரங்களையே தேடிச்சென்று நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஃபர்ஹான் அக்தர் தனது 17 வயதிலேயே சினிமாவில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். இவர் கவிஞரும், திரைக்கதை எழுத்தாளருமான ஜாவேத் அக்தரின் மகன்.
இயக்குநர் பங்கஜ் பரஸ்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அக்தர் தனது 26வது வயதில், அதாவது 2003-ம் ஆண்டு 'தில் சாதா ஹை' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்று ஃபர்ஹான் அக்தருக்கு பாலிவுட்டில் புதிய இடத்தை உருவாக்கிக் கொடுத்தது. ஷாருக்கானை வைத்து 'டான்' படத்தை இயக்கியதும் இவரே! தொடர்ந்து படங்களை இயக்கி வந்த வந்த ஃபர்ஹான் 2008-ம் ஆண்டு 'ராக் ஆன்' என்ற படத்தின் மூலம் நடிப்பில் இறங்கினார்.
இவரின் 'தூஃபான்' படம் இந்த ஜூலை 16-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. அது தொடர்பாக ஆன்லைன் வீடியோ வழியே ஃபர்ஹானிடம் பேசினேன்.
'தூஃபான்' படத்துக்காக பயங்கர வொர்க் அவுட் செய்திருப்பது தெரிகிறது. உடலை இன்னும் ஃபிட்டாக நீங்கள் மேற்கொண்ட பயிற்சிகள் என்னென்ன?
''ஒரு முழுமையான பாக்ஸர் உடலமைப்பைக் கொண்டுவர எனக்கு 3 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. தினமும் காலை 3 மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் என ஒருநாளில் 5 மணி நேரம் உடற்பயிற்சிகள் செய்தேன். படப்பிடிப்பு தளத்தில் மற்ற எல்லோரும் நடித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், நான் மட்டும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருப்பேன். குத்துச்சண்டை குறித்த அடிப்படையை மட்டும் 6 மாதங்கள் கற்றுக்கொண்டேன். நான் படத்திற்காக பயிற்சி எடுக்கவில்லை. குத்துச்சண்டை வீரனாக மாறவே பயிற்சி எடுத்துக்கொண்டேன்."
''ஒரு பாக்ஸராக ஷூட்டிங் அனுபவம் எப்படி இருந்தது?
"போராடி உடலை புதிய வடிவத்துக்கு கொண்டு வந்து, படப்பிடிப்பை 4 நாள்கள்தான் நடத்தி இருப்போம். ஆனால், அதற்குள் கொரோனா பொதுமுடக்கத்தை அமல்படுத்திவிட்டனர். இதனால் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் இடையில் சிக்கிக்கொண்டேன். உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. எங்கு பயிற்சி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. நான் எதிர்பார்த்ததை விட அதிக நாள்கள் கதாபாத்திரமாகவே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கதாபாத்திரமாகவே வாழ வேண்டியிருந்ததால் மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு வருடத்துக்கும் மேல் இப்படத்துக்காக பணியாற்றி இருக்கிறேன். இன்னும் என்னால் கேரெக்டரில் இருந்து வெளியே வரமுடியவில்லை."
ராகேஷ் ஒம்பிரகாஷுடன் நீங்கள் ஏற்கனவே 'பாக் மில்கா பாக்' என்ற ஸ்போர்ட்ஸ் பயோபிக் படம் செய்திருக்கிறீர்கள். மீண்டும் இன்னொரு ஸ்போர்ட்ஸ் படம் ஏன்?
இரண்டு படமும் ஒரே மாதிரியானது அல்ல. 'தூஃபான்' படம் வித்தியாசமானது. நானும் ராகேஷும் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்குள் மகிழ்ச்சியான தொழில் கூட்டணி இருக்கிறது. அவரது கதை சொல்லும் திறனில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் விரும்பும் இடத்தை அவர் கொடுப்பார். மக்கள் படத்தை எப்படி அனுகிறார்கள், முந்தைய படத்தை எப்படி ஒப்பிட்டு பார்க்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நானும் ராகேஷும் சேர்ந்து நல்ல படங்களைத் தயாரிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்துவிட்டேன். இனி மக்கள்தான் முடிவு செய்யவேண்டும்."
இரண்டு முறை தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இறுதியில் ஓடிடி தளத்தில் அதுவும் தாமதமாக வெளியிடுவது குறித்து எதாவது நெருக்கடியை உணர்கிறீர்களா?
"2020 நவம்பர் மாதமே வெளியிட திட்டமிட்டோம். அதன் பிறகு கடந்த மே மாதத்திற்கு தள்ளிப்போனது. இப்போது ஜூலையில் வெளியாகிறது. வெளிப்படையாகச் சொல்வதானால் படம் வெளியாவது தள்ளிப்போனது நல்லதுதான் என்று சொல்வேன். இந்தியாவில் இப்போது தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதற்கு ஏற்ற சூழல் இல்லை. மக்கள் இப்போதுதான் மெதுவாக சகஜ நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இப்படம் மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரும் என்று நம்புகிறேன்."
தமிழ்ப் படங்களில் எதிர்காலத்தில் நடிக்கும் திட்டம் உண்டா... அப்படி நடிப்பதாக இருந்தால் எந்த இயக்குநரின் படத்தில் நடிப்பீர்கள்?
தமிழில் ஏராளமான நல்ல இயக்குநர்கள் இருக்கிறார்கள். வாய்ப்பு வரும்போது நிச்சயம் தமிழ் சினிமாவில் நடிப்பேன்.
source https://cinema.vikatan.com/bollywood/farhan-akhtar-shares-his-experiences-about-toofaan-movie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக