இந்த டிக்கெட் இன்னும் சில காலங்களில் அருங்காட்சியகங்களில் மட்டுமே காண முடியும். இவை புழக்கத்தில் இருந்து நீங்கி 30 வருடம் போல ஆகிவிட்டது. ஆனால் என்னை பொறுத்தவரை இந்த "பயண அட்டை" உடன் ஒரு சென்டிமென்டல் பிணைப்பு உண்டு.
அக்டோபர் 26, 1986. அந்த நாள் வரை, நான் சென்ற அதி தூர பயணம் என்றால், அது பெங்களூரு தான். ஒரு ஆறு மாதம் பெங்களூரு அலுவலகத்தில் (CA Firm) துவக்க நிலை பட்டய கணக்காளராக பணி செய்தேன். அப்போது குல்பர்கா, சேடம், வய்ட்பீல்டு போன்ற சிறு நகரங்களில் சில மறக்கமுடியாத அனுபவங்கள் உண்டு. அது பிறகு. இப்போது இந்த அட்டைக்கு வருவோம்.
இன்றைய இளைஞர்களுக்கு இது ஒரு பொருட்டில்லை. ஆனால் 35 வருடங்களுக்கு முன், ஒரு சிறு கிராமத்தான் ஆகிய எனக்கு, இது பெரிய விஷயம். நாலு தெருக்கள் தான் எங்கள் ஊர். சிறிய கடை வீதி, ஒரு டெய்லர், பலசரக்கு கடை, காய்கறி கடை, நான்கைந்து மீன் கடை, சில தேநீர் கடைகள், இத்யாதி இத்யாதி. முக்கியமாக மாரியம்மன் கோயில். அதற்கு பின்னால் ஆசாரி வீடு, குயவர் வீடு. அஃதே.
ஊர் பெயர் வரக்கால்பட்டு. கடலூரிலிருந்து இருந்து பேருந்தில் 25 பைசாதான். இருபது நிமிடத்தில் வெள்ளைகேட் நிறுத்தத்தில் இறங்கி காற்றோட்டமாக நடந்து குட்டையைக் கடந்து மாரியம்மன் கோயில் வந்து இடப்பக்கம் திரும்பி மூணாவது வீடு நம்மது.
அங்கிருந்து சென்னைக்கு படிப்புக்கு வந்தது பெரிய மாற்றம். படித்து முடித்து இருந்த அந்த சமயத்தில் IDBI-இல் (அப்பொழுது அது பேங்க் இல்லை) இருந்து எனக்கு வந்த அழைப்பு என்னை மும்பைக்கு அழைத்துச் சென்றது. வயது 23. CA அகில இந்திய அளவில் 45 ஆம் இடம். இதன் மூலம் நல்ல ஊதியத்துடன் நேரடி அழைப்பு வந்தது . கசக்குமா? அதுவும், மும்பை.
சுதந்திரம், கை நிறைய சம்பளம். வீடு. வார நாட்களில் இரு வேலை சோறும் கூட. தலை நிறைய கனவுகள். கூடவே சின்ன பயம். கிராமத்தான் நான் எப்படி மும்பையில் சமாளிப்பேன்? சென்னைவாசிகளே நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை தருவார்கள். மும்பை மக்களை சொல்லவா வேண்டும்.. (அதுவும் பெண்கள்). எல்லாம் கலந்த ஒரு எண்ண ஓட்டம்.
ஆனால், என் அப்பா (என்னை விட பெரிய கிராமத்தான் - சென்னை அவ்வப்பொழுது போய் வந்தவர். மற்றபடி வாழ்க்கை பூரா வரக்கால்பட்டுதான்). ஆனாலும், ஒரு சிறந்த முற்போக்குவாதி. அம்மா ஒரு படிமேல். ஓரளவுக்கு வறுமை வாட்டினாலும், கிராமத்தில் இருந்துகொண்டு, தன் வீட்டில் இருந்தபடியே ஒரு மருத்துவர், இன்ஜீனியர், பட்டய கணக்காளர் என ஏழு படிப்பாளிகளை திட்டம்போட்டு உருவாக்கினார். அந்த இருவரும் தந்த ஊக்கம், தைரியம் என்னை மும்பை அனுப்பி வைத்தது.
இப்போது அந்த பயண அட்டைக்கு வருவோம். இந்நேரம், பயண அட்டை பார்த்து, என் வயதை சுலபமாக கணக்கிட்டிருப்பீர்கள். இருந்தாலும், ரகசியம் என்ன, இன்றும் எனக்கு மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 50+ தான். அது கிடக்க. திரும்ப அட்டைக்கே. அப்பொழுது சென்னை (மெட்ராஸ்) டு மும்பை (பம்பாய்) க்கு இரண்டு வண்டிகள்தான் என்று நினைவு. ஏறி அமர்ந்தால் ஏறக்குறைய ஒரு 30-35 மணி நேரம் ஆகிவிடும். கணக்கே இல்லாமல் நிறுத்தங்கள். ரயில் நிலையம் மட்டும் இல்லாமல், நிறைய காரணங்கள் அண்ட் நிறுத்தங்கள் (கிராஸ்ஸிங், செயின் இழுத்துட்டான், மாடு செத்து கிடக்குது இன்ன பிற).
மேலும் கணக்கே இல்லாமல் சில்லரை வியாபாரிகள் (முறுக்கு, தேநீர் (சாஆய்ய்ய்ய்ய்யய் ), வெள்ளரி, பூ), பிச்சை கேட்பவர்கள், இங்க இருக்கும் குப்பையை அங்கு தள்ளி காசு கேட்பவர்கள், எவன் ஏமாறுவான் என்ன திருடலாம் என அலையும் சிறு பெரு திருடர்கள். ரயில் பெட்டி ஒரு "மினி" இந்தியா போல இருக்கும். சாப்பாட்டு நேரமானால் இந்தியா இன்னும் பரிமளிக்கும்.
ஓவ்வொரு பயணத்தின் போதும், பெட்டியில் ஏறும் முன்பு, வேண்டுதல் போல், தவறாமல் "பதிவு பட்டியல்" (Reservation Chart ) பார்த்துதான் ஏறுவேன். என்ன, ஒரு சின்ன பெரிய ஆசை. இந்த முறையாவது என் வருங்கால மனைவி இந்த பெட்டியில், இதே தேதியில் இதே மும்பைக்கு இதே என்னோடு பயணித்து காதலில் கன்னாபின்னாவென்று விழுந்து .... இப்படி போகும் கனவு. என் நல்ல நேரமோ கெட்ட நேரமோ என் மனைவி எனக்கு ரயில் பெட்டியில் கிடைக்கவில்லை. (சினிமாவில் மட்டுமே நடக்குமோ?).
ரயில் பெட்டியில் கிடைக்கவில்லை என்றாலும், என் மனைவி நல்லவள், வல்லவள். கொஞ்சம் அழகும்கூட. என் சிநேகிதி, காதலி, எதிரி, வீட்டோடு வாழும் ஆலோசகர், எப்படி என் கார் ஓட்டவேண்டும் என்று 30 வருஷமாக சொல்லி தருபவள். மேலாக, இரு குழந்தைகளை நன்கு உருவாக்கியவள்.
திரும்ப அட்டைக்கு. இந்த அட்டைதான் என்னுடைய பயண வாழ்க்கைக்கு ஆரம்பப்புள்ளி. IDBI மும்பையில் இருந்து துபாய் எமிரேட்ஸ் (எமிரேட்ஸ்) விமான நிறுவனத்திற்கு, பின் அங்கிருந்து ஷெல் (Royal Dutch Shell Group குரூப்) எண்ணெய் நிறுவனத்திற்கு செல்ல வைத்ததில் இந்த அட்டைக்கு ஒரு முக்கிய இடமுண்டு.
50 நாடுகளுக்கு மேல், பல முறை பயணித்துவிட்டேன். 800க்கு மேல் விமான பயணங்கள். பல நகரங்கள். பல விடுதிகள். அமெரிக்காவிலும், கனடாவிலும், ஐரோப்பாவிலும் ஏறக்குறைய 20,000 கிலோமீட்டர்கள் வாகனம் மூலம் பயணம். இன்னும் இன்னும் மனம் நாடுகிறது.
ஒரு ஆசை. பல இனிப்பான மற்றும் சில கசப்பான அனுபவங்களை பகிரவேண்டும் என்று. சந்தர்ப்பம் கிட்டும். செய்யலாம். நம்பிக்கைதானே தும்பிக்கை.
இன்னும் ஒரே முறை இந்த பயண அட்டை பற்றி. 35 வருடங்களாக பாதுகாத்து வந்த இந்த அட்டைக்கு என் வீட்டில் ஒரு "நிரந்தர" இடமுண்டு. என் மனைவியிடம் சொல்லிவிட்டேன் இந்த அட்டை மற்றும் 500க்கும் மேற்பட்ட விமான பயண சீட்டுகள் மற்றும் 12 கடவு புத்தகங்களை (Passports) என் கல்லரையில் வைக்க சொல்லி... (மீண்டும் சந்திப்போம்)
-சங்கர் வெங்கடாசலம்
(சங்கர் வெங்கடாசலம் தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். பட்டய கணக்காளர். மும்பை, துபாய் என பல்வேறு நாடுகளிலும், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ராயல் டச்சு ஷெல் நிறுவனம் என பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றி இருக்கிறார். தற்போது துபாயில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆனாலும், தன்னை பயணி என்றே அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பும் அவர், இது வரை 50 நாடுகளுக்கு மேல் பயணித்திருக்கிறார். தனது பயண அனுபவங்களை விகடன் தளத்தில் தொடர்ந்து எழுத உள்ளார்)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/travel-story-of-a-village-man
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக