இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நிறுவி வரலாறு படைத்த சீகன்பால்க், தரங்கம்பாடிக்கு வந்த 315-வது ஆண்டு தினம், கடந்த வாரம் கொண்டாடப்பட்டது,
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பார்த்தலமேயு சீகன்பால்க், கிறிஸ்தவ மதபோதகராக 1706 -ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி தரங்கம்பாடி கடற்கரைக்குக் கப்பல் மூலம் வந்தடைந்தார்.
அவரது நோக்கம் கிறிஸ்தவ மத கொள்கையினை பரப்புவதாக இருந்தாலும், தமிழகம் வந்த சிறிது காலத்திலேயே இங்குள்ள மக்களிடம் பேசிப் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார். 5 ஆண்டுகளுக்குள் தமிழை முறையாகக் கற்றுக் கொண்ட சீகன்பால்க், தனது சீடர்கள் இருவருக்கும் தமிழை முறையாகக் கற்றுக்கொடுத்தார். அவர்களை ஜெர்மனி நாட்டுக்கு அனுப்பி, 1711-ம் ஆண்டு அங்கு ஹல்லே என்ற இடத்திலுள்ள 'கிங் மார்ட்டின் லூதர்' பல்கலைகழகத்தில் தமிழ்த் துறையை நிறுவச் செய்தார்.
இது தவிர, இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தை தரங்கம்பாடியில் நிறுவி, கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டை 1715-ம் ஆண்டு தமிழில் வெளியிட்டார். தமிழ் அகராதி, சொற்களஞ்சியங்களோடு மற்ற மொழிகளிலுள்ள சிறந்த இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
தரங்கம்பாடியில் 1718-ம் ஆண்டு ஆசியாவின் முதல் பிராட்டஸ்டண்டு தேவாலயத்தைக் கட்டினார். 1719-ம் ஆண்டு, தனது 37-ம் வயதில் காலமான சீகன்பால்குவின் உடல் அந்தத் தேவாலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சீகன்பால்க் தரங்கம்பாடி கடற்கரையில் வந்திறங்கிய நாள் ஆண்டுதோரும் நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 315-வது ஆண்டு கடந்தவாரம் கொண்டாடப்பட்டது. வெளிநாட்டவரான சீகன்பால்க் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக இன்றுவரை நேசிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/spiritual/news/tharangambadi-bartholomus-ziegenbalg-history-and-his-popularity-among-the-tamils
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக