Ad

திங்கள், 12 ஜூலை, 2021

சிவகளை அகழ்வாராய்ச்சி: 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் தொன்மை! - ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய மூன்று இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப்பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் சிவகளை பரம்பு பகுதியில் தற்போதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு நடைபெற்றுவரும் இந்த அகழாய்வுப் பணியில் வாழ்விடப் பகுதிகளை கண்டுபிடிப்பதற்காகச் சிவகளை பகுதியில் உள்ள ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் திரடு, ஆவாரங்காடு திரடு உள்பட 5 இடங்களில் ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன.

அகழாய்வுப் பணியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்

இதில், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்துவரும் அகழாய்வு பணியில் முதல் முறையாகச் செங்கலால் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சியில் இருந்து மரபணு சோதனைக்கான எலும்பு உள்ளிட்ட கண்டெடுக்கப்பட்ட உடல் பாகப் பொருட்களை கடந்த வாரம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த குழுவினர் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அகழ்வாராய்ச்சிப்பணியை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
சிவகளை அகழ்வாராய்ச்சி

அப்போது, அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சுடு மண் பானை, இரும்பு உலோகப் பொருள்கள், பாண்டி விளையாட்டு உபகரணங்கள், களிமண் பொம்மை, களிமண் கிண்ணம், கல்லால் செய்யப்பட்ட பந்து, உலோகங்களை சாணைப் பிடிக்கும் கல், பீங்கான் வளையல், செம்பு நாணயம், பானையில் பொறிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளிட்ட பல பொருள்களைப் பார்வையிட்டனர்.

Also Read: திருச்சி மாம்பழச் சாலை: குடியரசுத் தலைவர் முதல் சினிமா பிரபலங்கள் வரை - தித்திக்கும் மாம்பழ விற்பனை!

இதையடுத்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ”2,600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தமிழரின் தொன்மையை சிவகளை அகழ்வாராய்ச்சி எடுத்துக்காட்டி கூறுகிறது. ’சிவகளை நாகரிகம்’ தமிழகத்தின் மிகத் தொன்மையான நாகரிகம். தூத்துக்குடி மாவட்டத்திற்கு ’சிவகளை’ ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது. இதன் அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படும்போது, தமிழகத்தில் ’சிவகளை’ ஒரு முக்கிய அடையாள சின்னமாகத் திகழும்.

அகழாய்வுப் பணியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்

சிவகளை, கீழடி உள்ளிட்ட பகுதிகளில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆதிச்சநல்லூர் பகுதியில் செம்பு பொருள்கள் கிடைத்துள்ளன. ஆனால், சிவகளை பகுதியில் இரும்பாலான பொருள்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. கொற்கை பகுதியில் கடல்சார் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட உள்ளது. அதற்கான ஆலோசனைகளை பூனேயிலுள்ள என்.ஐ.டி., பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டறிந்து வருகிறோம்” எனக் கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/archaeology/archaeological-excavations-in-sivagalai-traces-the-heritage-of-the-tamils

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக