Ad

திங்கள், 12 ஜூலை, 2021

சென்னை:`` அவள் என் லவ்வர்; அவளுக்கு தொல்லை கொடுக்காதே"- இளைஞரைக் கொலை செய்த கும்பல்!

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் தங்கம் என்கிற தங்கராஜ் (28). 10.7.2021-ம் தேதி மதியம் 2.45 மணியளவில், ஒரு பெண் உள்பட 5 பேர் தங்கராஜின் வீட்டுக்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கராஜை சரமாரியாக குத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். தங்கராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தங்கராஜை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

முதல் தகவல் அறிக்கை

இதையடுத்து தங்கராஜின் தந்தை ராஜேந்திரன், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் தங்கராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாவிஷ்ணு கொலை உள்பட 7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தார். தங்கராஜின் தந்தை ராஜேந்திரன் அளித்த தகவலின்படி கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்கிற 'அரைசட்டை' பாலாஜி (24), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரேம்குமார் என்கிற சின்ன அப்புனு (23), ஷாம் பிரகாஷ் என்கிற தினேஷ் (23) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 4 கத்திகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட தங்கராஜின் அம்மா சாந்தி, சென்னை மாநகராட்சியில் மணலி மாத்தூர் பகுதியில் துப்பரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். தங்கராஜ், பல்லாவரத்தில் பெயின்டராக வேலை செய்து வந்தார். கொருக்குப்பேட்டை திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த பெண்ணுடன் தங்கராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர், தனியார் கம்பெனி ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார். அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

Also Read: சென்னை: 'மாநகராட்சி ஊழியர் கொலை'- இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது!

கைது

தனியாக வசித்து வந்த அந்தப் பெண்ணுக்கும் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்கிற அரைசட்டை பாலாஜிக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்தச் சமயத்தில்தான் அந்தப் பெண்ணுக்கு தங்கராஜூடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தகவலைத் தெரிந்ததும் பாலாஜி," அவள் என் லவ்வர்; அவளுக்கு தொல்லை கொடுக்காதே" எனத் தங்கராஜைக் கண்டித்திருக்கிறார். அதைத் தங்கராஜ் கேட்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த பாலாஜி தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து தங்கராஜை வெட்டிக் கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் மூன்று பேரை கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக உள்ள மேலும் சிலரைத் தேடிவருகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-youth-murdered-by-the-group-of-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக