கிருத்திக் விஜயகுமார், சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர். தற்போது 11-ம் வகுப்பு படித்து வரும் கிருத்திக், `ஃபியூச்சுரா ரோபோட்டிக்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும்கூட. இந்த நிறுவனத்தை 3 வருடங்களுக்கு முன்பு தொடங்கியிருக்கிறார் கிருத்திக். ரோபோட்டிக்ஸ் தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெபினார்கள் நடத்தி வருகிற இவர், இதற்காக இதுவரை தேசிய அளவில் 10 விருதுகள், மாநில அளவில் 8 விருதுகள் பெற்றிருக்கிறார். மாவட்ட அளவிலான விருதுகளுக்கு கணக்கே இல்லை. கிருத்திக்கிடம் பேசுவதற்காக போன் செய்தோம். எல்லா மாணவர்களையும்போல இவரும் ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துக்கொண்டிருக்க, அவரின் அம்மா கோகிலா நம்முடன் உரையாட ஆரம்பித்தார்.
``விளையும் பயிர் முளையிலே தெரியும்கிற பழமொழிக்கு ஏற்பதான் கிருத்திக் வாழ்க்கையிலேயும் நடந்துச்சு. அவனோட அப்பா பெங்களூருல வேலைபார்த்துட்டு இருந்ததால, அவன் பிறந்ததுல இருந்து நானும் அவனும் மட்டும்தான் வீட்ல இருந்தோம். அவனுக்கு வீசிங் பிரச்னை இருந்துச்சு. அதனால, அவனை வீட்டுக்குள்ளேயே பொத்தி பொத்தி வெச்சிருப்பேன். அவனுக்கு ரெண்டு வயசு இருக்கிறப்போ நாங்களும் பெங்களூரு போயிட்டோம். வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற சாதாரண ஸ்கூல்லதான் சேர்த்தேன். உடல்நிலை காரணமா அவனால ரெகுலரா ஸ்கூலுக்குப் போக முடியாது. நான்தான், அவன்கூட படிக்கிற பிள்ளைங்களோட நோட்ஸை காப்பி பண்ணிட்டு வந்து, அவனுக்கு சொல்லிக் கொடுப்பேன். ஆனா, அவன்தான் கிளாஸ் ஃபர்ஸ்ட் வருவான்.
பொம்மைகளோட விளையாடவே மாட்டான். ரிமோட் கார் வாங்கிக்கொடுத்தா, அதுல இருக்கிற பேட்டரி, மோட்டாரை கழட்டி அதை வெச்சு அவனே புதுசா ஏதாவது செய்வான். பார்க்குக்கு கூட்டிட்டுப்போனா, மத்த குழந்தைகள் சறுக்கி விளையாடுவாங்க. ஆனா. இவன் சறுக்கு மரத்துக்கு அடியில மாட்டியிருக்கிற ஸ்குரூவை தொட்டுப் பார்த்திட்டிருப்பான். ஸ்விட்ச் பாக்ஸ்ல கையை விடுவான், ஆன் பண்ணியிருக்கிற பிளக்ல விரலை விடுவான். வேறவழியில்லாம, அவன் ரெண்டு கைகள்லேயும் செல்லோ டேப்பை சுத்தி வெச்சிடுவேன். டாய்லெட்ல உட்கார்ந்துட்டு, ஹேண்ட் ஷவரை லைட் மேல அடிச்சு அதை ஃபியூஸ் போக வைப்பான். தினமும் ஒரு லைட் எப்படி ஃபியூஸ் போகும்னு ஒருநாள் டாய்லெட்டுக்குள்ள எட்டிப்பார்த்துதான் கண்டுபிடிச்சேன்.
ஒரு தடவை இடுப்புல தூக்கி வெச்சிருந்தப்போ, கரன்ட் போர்டுல இருந்த மெயின் ஸ்விட்சை ஆஃப் பண்ணிட்டான். எல்.கே.ஜி சேர்த்த முதல் நாள் `உங்க பிள்ளையைக் காணோம்’னு ஸ்கூல்ல இருந்து போன் வந்துச்சு. நான் ஸ்கூலுக்கு போனவுடனே `இங்க கரன்ட் தொடர்பான ரூம் ஏதாவது இருக்கா’ன்னுதான் முதல்ல கேட்டேன். அவங்களோட ரியாக்ஷனை இப்போ நினைச்சாலும் சிரிப்பா வருது. கடைசியா அந்த ஸ்கூல்ல இருந்த மோட்டார் ரூம்ல இருந்துதான் அவனைக் கண்டுபிடிச்சேன். இப்படி எப்பவும் ஆபத்தான சேட்டைகள்தான் செய்வான். ஒருகட்டத்துல வீஸிங் பிரச்னை அதிகமானதால கிருத்திக்கை தூக்கிட்டு மறுபடியும் சென்னைக்கு வந்துட்டேன்.
ஓட்டேரியில நாலஞ்சு காலேஜ் பசங்க பிசிக்ஸ், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான வகுப்புகள் எடுத்துட்டிருந்தாங்க. அவங்ககிட்ட, என் பையனைப் பத்தி சொல்லி `சயின்ஸ் தொடர்பா ஏதாவது சொல்லிக்கொடுங்க’ன்னு விட்டுட்டு வந்தேன். அந்தப் பசங்க ரோபோட்டிக் பத்தி 3 நாள் வொர்க்ஷாப் ஒண்ணு நடத்தினாங்க. அந்த கிளாஸுக்கும் அனுப்பி வெச்சேன். அதுல அவன் ரொம்ப ஆர்வம் காட்டினதால ஆன்லைன் ரோபாட்டிக் கிளாஸ்ல சேர்த்துவிட்டேன். அப்போ, அவன் அஞ்சாவது படிச்சிட்டிருந்தான். `ரொம்ப சின்ன பையனா இருக்கானேன்னு தயக்கமாதான் கிளாஸ்ல சேர்த்துக்கிட்டாங்க. ஆனா, கிருத்திக் 6 மாசத்துல முடிக்க வேண்டிய கோர்ஸையெல்லாம் ஒரு மாசத்துல முடிச்சான். புராஜெக்ட்டும் செய்ய ஆரம்பிச்சான். உடனே அவனை அவங்க நிறுவனத்துலேயே வேலைக்கு எடுத்துக் கிட்டாங்க. அதுக்காக சம்பளம் கொடுக்கப்போறோம்னு அவங்க சொன்னப்போ நான் `வேண்டாம்’னு தடுத்திட்டேன்.`அவனுக்கு இதுவோர் அனுபவமா மட்டுமே இருக்கட்டும்'னு கேட்டுக்கிட்டேன்.
இன்னொரு பக்கம் அவனோட ஆர்வம் எதுல இருக்குன்னு எனக்கு நல்லா புரிஞ்சுட்டதால எந்த இடத்துல சயின்ஸ் காம்படிஷன் நடந்தாலும் அவனை அங்க கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சேன். பெரும்பாலான போட்டிகள்ல தோத்துட்டுதான் வருவான். ஆனா, அந்தப் போட்டிகள்ல முதல் பரிசு, இரண்டாம் பரிசு வாங்கினவங்களோட புராஜெக்ட்ஸை உத்து உத்து கவனிச்சுட்டிருப்பான்.
அவன் எட்டாவது படிச்சிட்டிருந்தப்போ சென்னை ஐஐடி-யில நடந்த `பிசினஸ் பிளான் காம்படிஷ'னுக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். `என் பையன் இதுல கலந்துக்க மட்டும் ஒரு வாய்ப்பு கொடுங்க’ன்னு கேட்டேன். அவங்களும் கொடுத்தாங்க. விலை குறைவான சிசிடிவி கேமரா தயாரிக்கிறதுக்கான புராஜெக்ட்டை அங்க கிருத்திக் சப்மிட் செஞ்சு, பிரசன்ட்டேஷனும் கொடுத்தான். ஃபர்ஸ்ட் பிளேஸ் என் மகனுக்குத்தான் கிடைச்சுது. இது தொடர்பான துறையினரை சந்திருக்கிறதுக்காக டெல்லிக்கு அனுப்பி வைச்சாங்க. இந்த புராஜெக்ட்டுக்காக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால `இளம் சாதனையாளர்' விருது வாங்கினான். அவன் ஸ்கூல்ல தேசியக்கொடி ஏத்துற மரியாதையையும் கொடுத்தாங்க.
Also Read: லைக்காவின் மரணமும் விஞ்ஞானிகளின் வாக்குமூலமும்..! - குட்டி பிளாஷ்பேக் #MyVikatan
இஸ்ரோ சிவன் சாருக்கு, `என் பையனைப்பத்தி சொல்லி, அவனைப் பார்க்க முடியுமா’ன்னு கேட்டு மெயில் பண்ணியிருந்தேன். அவரும் எங்களைக் கூப்பிட்டார். `10 நிமிஷம்தாம்மா என்னால பேச முடியும்’னு சொன்னவர், நாலு மணி நேரம் கிருத்திக்கிட்ட பேசினார். `நீ நிறைய அவார்ட்ஸ் வாங்கிட்டே. இனிமே உன்னோட புராஜெக்ட் எல்லாவற்றுக்கும் காப்புரிமை வாங்க ஆரம்பி’ன்னு அட்வைஸ் பண்ணதோடு, அதுக்கான உதவிகளையும் செஞ்சார். அதுக்கான வேலைகள் இப்போ நடந்திட்டிருக்கு. சிவன் சார், என் மகனை யங் சயின்டிஸ்ட்னுதான் கூப்பிடுவார்’’ என்பவரின் குரலில் மகன் மீதான பாசமும் பெருமிதமும் வழிந்தோடுகிறது.
ஆன்லைன் வகுப்பை முடித்துவிட்ட கிருத்திக் தன்னுடைய சமீபத்திய இரண்டு கண்டுபிடிப்புகளைப்பற்றி பேச ஆரம்பித்தார். ``500 ரூபாய்க்கு கிடைக்கிற மாதிரி ஸ்மார்ட் ஹியரிங் எய்டு கண்டுபிடிச்சிருக்கேன். டிக்ஷனரி மாதிரி நமக்குத் தெரியாத வார்த்தைகளுக்கு இதுல அர்த்தமும் தெரிஞ்சுக்கலாம். அதே மாதிரி ஸ்மார்ட் கிளாஸ். இதை கண்ணுல போட்டுக்கிட்டு, நோயாளியைப் பார்க்கிறப்போ ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் லெவல் மாதிரி அவங்களோட முந்தைய மருத்துவ தகவல்கள் அந்த ஸ்மார்ட் கண்ணாடியில டிஸ்ப்ளே ஆகும். கொரோனா காலத்துல நோயாளிங்ககிட்ட போகாம இருக்கிறதுக்கு டாக்டர்களுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும்’’ என்றவரை தொடர்ந்தார் அம்மா கோகிலா.
Also Read: `கோச்சுக்காதீங்க... பள்ளியில் இடமில்ல!' - மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி
``நாங்க மிடில் கிளாஸ். எங்களால வாங்க முடியாத எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை எல்லாரும் வாங்கணும்னு கிருத்திக் அடிக்கடி சொல்வான். அதைத்தான் கண்டுபிடிப்புகளா செஞ்சுகிட்டிருக்கான்.
இதுக்காக உலக அளவுல ரெண்டு முறை விருது கிடைச்சப்போ, விமானத்துக்கு செலவழிச்சுட்டு எங்களால போக முடியலை. இப்போ, வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆன்லைன்ல கிளாஸ் எடுத்துட்டிருக்கான். கல்லூரி மாணவர்களுக்கு வெபினார் நடத்துறான். கடந்த மூணு வருஷமா அவனோட புராஜெக்ட்டுக்கு அவனேதான் சம்பாதிச்சிருக்கிறான்’’ என்கிறார்.
வாழ்த்துகள் கிருத்திக் விஜயகுமார்!
source https://www.vikatan.com/news/tamilnadu/chennai-11th-std-student-krithik-vijayakumar-excels-in-robotics-and-innovation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக