விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ளது செண்டூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த வசந்தா என்ற நபர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் 22.06.2021 தேதி வழக்கம் போல தன் ஊரின் அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மூவர் 'பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் வேண்டும்' என கூறி 5 ஆடுகளை வாங்கிக்கொண்டு, ஜெராக்ஸ் போடப்பட்ட பதிமூன்று 2000 ரூபாய் நோட்டுகளை (₹26000) கொடுத்து விட்டு ஏமாற்றி சென்றிருந்தனர். சிறிது நேரம் கழித்து அது ஜெராக்ஸ் போடப்பட்ட 2000 ரூபாய் தாள்கள் என்பதை அறிந்த வசந்தா, மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான செய்தியை வசந்தாவிடம் பேசி 23.06.2021 அன்று நமது விகடன் தளத்திலும் வெளியிட்டிருந்தோம்.
Also Read: வியாபாரப் பேச்சு; கலர் ஜெராக்ஸ் பணம்; ஆடு மேய்க்கும் முதியவர்களைக் குறிவைக்கும் நூதன கும்பல்!
3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையும் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், அந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஷேக் ஆயுப், அவரது மனைவி பர்க்கத்பீ மற்றும் சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஷரிப் ஆகிய மூவருமே இந்த நூதன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ஆற்காடு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரிடம் இதேபோன்று ஜெராக்ஸ் போடப்பட்டு ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றிய மூன்று நபர்கள் அண்மையில் ஆந்திரா மாநிலத்தில் பிடிபட்டிருந்திருந்தனர். அதே மூன்று நபர்கள் விழுப்புரத்திலும் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மயிலம் காவல் நிலைய துணை ஆய்வாளர் சண்முகத்திடம் பேசினோம். "கடந்த மாதம் 22ம் தேதி ஜெராக்ஸ் போடப்பட்ட ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஆடுகளை வாங்கி வசந்தாவை ஏமாற்றி சென்ற அந்த மூவரும், அந்த ஆடுகளை சென்னையில் விற்பனை செய்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்களில் ஆந்திரா சென்றுள்ளனர். கே.வி.பி(KVB) புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு பகுதியிலும் அதே நூதன செயலில் ஈடுபட்டுள்ளனர்.
போலி நோட்டுகள் என தெரியவந்தது சிறிது தொலைவிலேயே அவர்கள் பிடிபட்டு விடுகின்றனர். அவர்களிடமிருந்து 38,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 1,20,000 ஆயிரம் ரூபாய் ஜெராக்ஸ் போடப்பட்ட 2000 ரூபாய் தாள்களையும் அந்த காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
எங்களுக்கு இது தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த மூவரையும் ஒருநாள் விசாரணைக்காக அழைத்து வந்தோம். விசாரணையில் குற்றம் உறுதியானதை தொடர்ந்து நமது காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கிலும் அவர்களை இணைத்துள்ளோம். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டோம்.
Also Read: கலர் ஜெராக்ஸ் ரூபாய்த்தாள்; ஆயிரங்களில் 'ஆடு' மோசடி-திருத்தணியில் தப்பி ஆந்திராவில் சிக்கிய கும்பல்!
இந்த 3 நபர்களிடமிருந்து, கே.வி.பி. புரம் காவல்துறையினர் பரிமுதல் செய்த தொகையிலிருந்து தான் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு நாம் பெற்றுத்தர வேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/social-affairs/crime/three-persons-have-been-arrested-for-buying-goats-by-giving-fake-xerox-notes-in-viluppuram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக